அகிலேஷ் யாதவுக்கு மட்டுமல்ல.. பாஜகவுக்கும் சிக்கல்! உ.பியில் முளைக்கும் 3வது அணி!
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக ஒரு பக்கமும், சமாஜ்வாதி இந்தியா கூட்டணியுடன் சேர்ந்து இன்னொரு பக்கமும் களமிறங்குகிறது. இப்படி இருக்கையில் 3வதாக மற்றொரு கூட்டணி முளைத்திருக்கிறது. இது சமாஜ்வாதி கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும்.. பாஜகவுக்கும் பெரிய அளவுக்கு அடிவாங்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. உ.பி தேர்தலில் இந்த 3வது அணி என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது.

உ.பியில் சந்திரசேகர் ஆசாத்தின், 'ஆசாத் சமாஜ் கட்சி' மற்றும் அசாதுதீன் ஓவைசியின் 'ஏஐஎம்ஐஎம்' ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணி, ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு சில பாதகங்களை ஏற்படுத்தும்.
'சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணி, சந்திரசேகர் ஆசாத்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் உள்ள 403 சட்டமன்ற தொகுதிகளிலும்.. இந்த கூட்டணி போட்டியிட திட்டமிட்டுள்ளது. முன்னதாக பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி.. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் (PDA பார்முலைா) ஆகியோரை ஒருங்கிணைத்து தனது வாக்கு வங்கியை பலப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், இந்த புதிதாக உருவாக்கி உள்ள கூட்டணி.. எதிர்க்கட்சிகளில் வாக்கு வங்கியை பலவீனப்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலை எடுத்துக்கொண்டால், சமாஜ்வாதி கட்சியின் வெற்றியை தீர்மானித்தது PDA பார்முலாதான். சிறுபான்மையினரையும், தலித்துகளையும், பிற்படுத்தப்பட்டோரையும் ஒரே புள்ளியில் இணைத்து.. அந்த வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற்றதால் தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் இந்தியா கூட்டணி இணைந்து தேர்தலை எதிர்கொண்டபோது பெரும்பான்மையான தொகுதிகளை வென்று சாதனை படைத்திருந்தது.
ஆனால், இப்போது உருவாகியிருக்கும் 'சமாஜிக் பரிவர்தன் மோர்ச்சா' கூட்டணி, தலித்துக்களையும், சிறுபான்மையினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை போல அமைந்திருக்கிறது. தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு என தனியாக ஒரு கூட்டணி உருவாகி இருப்பதால்.. சமாஜ்வாதி கட்சியின் வாக்கு வங்கியில் சிறிய சரிவு ஏற்பட்டாலும் கூட, அதன் வெற்றி வாய்ப்புகள் கடுமையாக பாதிக்கப்பட கூடும் என்று சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிவது ஆரம்பத்தில் பாஜகவுக்கு சாதகமாக தோன்றினாலும்.. எல்லா வாக்குகளும் சமாஜ்வாதி கட்சி இடமிருந்து மட்டுமே பிரியும் என பாஜகவால் உறுதியாக சொல்ல முடியாது. குறிப்பாக, இளம் தலித் வாக்காளர்களிடம் சந்திரசேகர் ஆசாத்திற்கு இருக்கும் செல்வாக்கு, பாஜக மற்றும் பலவீனமடைந்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றின் வாக்குகளை பிரிக்க வாய்ப்பு இருக்கிறது.
மாநிலம் முழுவதும் இக்கூட்டனின் பலம் இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், இருமுனை போட்டியாக கருதப்பட்ட தேர்தலை இது மேலும் சிக்கலாகியுள்ளது. இக்கூட்டணி குறைந்த இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றாலும்.. பல தொகுதிகளின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக மாறி நிற்கும். பிரதான கட்சிகளை, சமூகநீதி மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து சிந்திக்க வைக்கும் காரணியாகவும் செயல்படும் என இந்த கட்டுரை குறிப்பிடுகிறது.


Click it and Unblock the Notifications
