இனி வேலைக்கு ஆகாது.. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்.. மத்திய அரசு முடிவெடுக்க என்ன காரணம்!
டெல்லி: யுபிஐக்கு கட்டணம்- கடந்த சில வாரங்களாகவே மிக முக்கியமான விவாதிக்கப்படும் ஒன்றாக இதுதான் இருக்கிறது. மத்திய அரசு திடீரென யுபிஐக்கு கட்டணம் விதிக்க முடிவு செய்வது ஏன்.. இதன் பின்னணி என்ன.. ஒருவேளை கட்டணம் விதிக்கப்பட்டால் அது என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்.. இதற்கு மத்திய அரசு வசம் இப்போது இருக்கும் திட்டங்கள் என்ன என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்!
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனையின் முதுகெலும்பாக மாறியுள்ள யுபிஐக்கு தற்போது எந்தவொரு கட்டணமும் இல்லை. அதாவது நீங்கள் பணம் அனுப்பும்போது உங்களிடமும் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கடைக்காரரிடமும் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. யுபிஐ இந்தளவுக்கு பேமஸாக இதுவே பிரதான காரணமாகும்.

யுபிஐ கட்டமைப்பு
இருப்பினும், யுபிஐ உள்கட்டமைப்புக்கு கணிசமான தொகை செலவிட வேண்டி இருக்கும் நிலையில், அந்த செலவை சமாளிக்க புதிய வழிகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. குறிப்பாக, அதிக மதிப்புள்ள சில யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு MDR எனப்படும் Merchant Discount Rate கட்டணத்தை கொண்டுவருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பைனாஸியல் சர்வீஸ் துறை, நாடாளுமன்ற நிதித்துறை நிலைக்குழுவிடம் இரண்டு சாத்தியமான வழிகள் குறித்து தெரிவித்துள்ளது. முதலில் அதிக மதிப்பு கொண்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிப்பது. மற்றொரு வழியாக, அடுத்த சில ஆண்டுகளில் யுபிஐக்கான அரசின் நிதி உதவியை படிப்படியாக குறைக்கும் வகையில் ஒரு திட்டத்தை உருவாக்கவும் அரசு பரிசீலிக்கப்படுகிறது.
யுபிஐ பரிவர்த்தனைகள்
யுபிஐ பரிவர்த்தனைகள் மிக பெரிய அளவில் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை செயல்படுத்தும் வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்களுக்கு தொடர்ந்து செலவு ஏற்படுகிறது. தற்போது யுபிஐ சேவையில் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. இதன் மூலம் வணிகர்கள் யுபிஐ மூலம் பணம் பெற்று கொள்ள எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், யுபிஐ அமைப்பை இயக்குவதற்கான தொழில்நுட்பம், சர்வர், பாதுகாப்பு, மோசடி தடுப்பு உள்ளிட்டவற்றுக்கு வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்கள் செலவு செய்து வருகின்றன.
இப்போது இந்த செலவுகளை அரசும் வங்கிகளும் தான் பார்த்து வருகிறது. யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான ஊக்கத்தொகையாக அரசு ரூ.2,000 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால், யுபிஐ செலவுகள் ரூ.20,700 கோடி வரை எகிறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் யுபிஐ முறையில் தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படாமல் இருக்க முடியாது.
கட்டணம்
இதற்கு தான் MDR எனப்படும் கட்டணத்தை வசூலிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. Merchant Discount Rate என்பதன் சுருக்கமே எம்டிஆர். டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வணிகர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணம் தான் இது. கடந்த 2019ஆம் ஆண்டு வரை யுபிஐ மூலம் பணம் பெற்றாலும் கூட குறிப்பிட்ட பரிவர்த்தனைகளில் 0.30% கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் அந்த கட்டணமும் 2020 ஜனவரி மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனால் எந்தவொரு கட்டணமும் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதை மாற்றுவது குறித்தே ஆலோசித்து வருகிறது. அதேநேரம் கட்டண முறை வந்தாலும் கூட சிறு சிறு பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படாதாம். மாறாக அதிக வேல்யூ கொண்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் நண்பருக்கு பணம் அனுப்புவது, சிறிய தொகையை யுபிஐ மூலம் கடைக்காரருக்கு அனுப்புவது ஆகியவை இலவசமாகவே தொடரும்.
படிப்படியாக நிறுத்த திட்டம்!
அரசு பரிசீலிக்கும் இரண்டாவது வழி யுபிஐ ஊக்கத்தொகையை படிப்படியாக நிறுத்துவது. அதாவது இப்போது அரசு வழங்கும் ஊக்கத்தொகையை ஒரேயடியாக நிறுத்தாமல்.. அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக குறைக்கலாம். இதன் மூலம் பேமெண்ட் நிறுவனங்கள் சட்டென அனைத்தையும் மாற்ற வேண்டியது இல்லை. படிப்படியாக தேவையான மாற்றங்களை செய்யலாம்.
யுபிஐ பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் புதிதாக யுபிஐ யூசர்களாக மாறுகிறார்கள். இத்தனை கோடி பரிவர்த்தனைகள் நடக்கும் போது, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஏற்படும் சிறிய செலவுகூட மொத்தத்தில் மிக பெரிய தொகையாக மாறும். இதை சமாளிக்கவே கட்டணத்தை விதிக்க யோசித்து வருகிறார்கள்.
அடுத்து என்ன
அதேநேரம் மத்திய அரசு இந்த விவகாரத்தில் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை. எந்த வகையான பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்க வேண்டும், எந்த தொகைக்கு மேல் போனால் கட்டணம் வேண்டும்.. யாருக்கு விலக்கு என்பது குறித்தெல்லாம் ஆராய்ந்து வருகிறது. அது குறித்த இறுதி அறிவிப்பு வரும்போது தான் எது இலவசமாக தொடரும்.. அதற்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்பது தெரிய வரும்!


Click it and Unblock the Notifications
