"இந்திய தேர்தலில் தலையிட முயற்சி.." அமெரிக்க அமைப்பு மீது மத்திய அரசு பரபர குற்றச்சாட்டு
டெல்லி: சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவின் மத சுதந்திர சூழல் கண்காணிக்கப்பட வேண்டும் என அறிக்கையை வெளியிட்டிருந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் USCIRF- அதாவது சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் மத சுதந்திரம் எப்படி இருக்கிறது என்பது குறித்த அறிக்கையை வெளியிடும்.

அமெரிக்க அமைப்பு: அதன்படி இந்தாண்டிற்கான அறிக்கையை இந்த அமைப்பு கடந்த மே 1ஆம் தேதி வெளியிட்டது. அதில் 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும் (Country of Particular Concern) என கூறப்பட்டு இருந்தது. அந்த லிஸ்டில் இந்தியாவும் இடம்பெற்று இருந்தது தான் பேசுபொருள் ஆனது. இந்தியா இந்த லிஸ்டில் 5ஆவது ஆண்டாகத் தொடர்ந்து இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இந்த ரிப்போர்ட் குறித்து மத்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது. அதில் அமெரிக்காவின் இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம், இந்தியாவின் தேர்தல் நடவடிக்கையில் தலையிடுவதாக வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
தேர்தலில் தலையிட முயற்சி: இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், "சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் ஒரு பக்கச் சார்புடைய அமைப்பு தான்.. அவர்களுக்கு சில அரசியல் நோக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருடாந்திர அறிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா குறித்து இதுபோன்ற ஆதாரமில்லாத தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்தியாவின் மாறுபட்ட, பன்மைத்துவ மற்றும் ஜனநாயக நெறிமுறைகளை இந்த அமைப்பு புரிந்துகொள்ள முயலுமா என்று கூட எங்களுக்குத் தெரியவில்லை.. இருப்பினும், உலகின் மிகப்பெரிய தேர்தல் ஜனநாயகத்தில் தலையிடும் அவர்களின் முயற்சி ஒருபோதும் வெற்றியடையாது" என்றார்.
பரபர குற்றச்சாட்டு: இந்த சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் அமெரிக்க அரசுக்குக் கீழ் இயங்குகிறது. எனவே, ரந்தீர் ஜெய்ஸ்வாலின் இந்த கருத்து நேரடியாக அமெரிக்காவைச் சாடுவது போல இருந்தது. இதைத் தெளிவுபடுத்துமாறு செய்தியாளர்கள் கேட்ட போது அவர், "நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். இந்த குறிப்பிட்ட அமைப்பின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக நாங்கள் முன்பே கூறி இருக்கிறோம். தயவுசெய்து எனது விளக்கத்தைத் தெளிவாகப் படியுங்கள்.. அதில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். அதில் பாயிண்டு பாயிண்டாக விளக்கி இருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறையின் மனித உரிமைகள் ஆணையமும் இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அந்த ரிப்போர்ட்டையும் கடந்த வாரம் இந்தியா நிராகரித்து இருந்தது. இருப்பினும், அப்போது இந்தியத் தேர்தல்களில் அமெரிக்கா தலையிடுவதாக வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டவில்லை. இந்தச் சூழலில் வெளியுறவுத் துறை செயலாளரின் குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரிப்போர்ட்: அமெரிக்க அமைப்பு வெளியிட்ட அந்த ரிப்போர்ட்டில் இந்தியாவுடன் சீனா, ஈரான், வடகொரியா, ரஷ்யா, சவுதி, பாகிஸ்தான் என மொத்தம் 17 நாடுகள் கவனிக்க வேண்டிய நாடுகள் என்ற லிஸ்டில் இடம்பெற்றுள்ளது. அந்த ரிப்போர்ட்டில், "2023 இல், இந்தியாவில் மத சுதந்திர சூழல் மோசமடைந்தன. பாஜக தலைமையிலான அரசு, பாரபட்சமான தேசியவாதக் கொள்கைகளை வலுப்படுத்தியது. வெறும் பேச்சுகளை நிலைநிறுத்தியது..
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், தலித்துகள், யூதர்கள் மற்றும் பழங்குடி மக்களைப் பாதிக்கும் வகுப்புவாத வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டது. உபா, குடியுரிமை திருத்தச் சட்டம், மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டம், பசுவதை சட்டங்கள் மூலம் மத சிறுபான்மையினர் கண்காணிக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு மட்டும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக 687 சம்பவங்கள் நடந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரம், காஷ்மீர் விவகாரம் கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு ஆகிய பல விஷயங்களையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications