ஐநா பாதுகாப்பு கவுன்சில்.. இந்தியா நிரந்தர உறுப்பினர்? ஜோ பைடன் சொன்ன முக்கிய மேட்டர்! என்ன தெரியுமா
டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக இடம்பிடிக்கத் தீவிரமாக முயன்று வரும் நிலையில், இதற்கு அமெரிக்க அதிபர் பைடன் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
தலைநகர் டெல்லியில் இப்போது ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து டாப் தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர். இதனால் அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் பைடனும் நேற்று இந்தியா வந்தார். அவர் டெல்லியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் தங்குகிறார். இன்று உச்சி மாநாடு தொடங்கும் நிலையில், முன்னதாக அவர் பிரதமர் மோடியை நேற்றைய தினம் சந்தித்தார்.
பைடன்: இரு தலைவர்களும் பாதுகாப்பு, ஏஐ, அணு ஆயுதம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக இடம்பிடிக்க இந்தியா தொடர்ந்து முயன்று வரும் நிலையில், இதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்பதை அமெரிக்க அதிபர் பைடன் மீண்டும் தெரிவித்துள்ளார். இது குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளி மாளிகை விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சுழற்சி முறையில் வழங்கப்படும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் 2028-29 ஆண்டிற்கான non-permanent seatக்கான இந்தியாவின் வேட்புமனுவை அமெரிக்கா வரவேற்றுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகை: இரு தலைவர்களின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், "சர்வதேச நிர்வாகம் என்பது பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், அவர்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் விதமாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொண்ட அதிபர் பைடன், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் முயற்சிக்கு ஆதரவாக இருப்பதை உறுதி செய்தார்.
பல்வேறு அமைப்புகளையும் வலுப்படுத்திச் சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தைத் தலைவர்கள் வலியுறுத்தினர். அந்த அமைப்புகள் நாம் தற்போது எதிர்கொள்ளும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர மற்றும் நிரந்தரமற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி: ஜி-20 உச்சி மாநாட்டிற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் பைடன் ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேம்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் (ட்விட்டர்), "லோக் கல்யாண் மார்க்கிற்கு அமெரிக்க அதிபர் பைடனை வரவேற்றதில் மகிழ்ச்சி. எங்களது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் உறவுகளை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நாங்கள் விவாதித்தோம். சர்வதேச நன்மையை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் நட்புறவு முக்கிய பங்கு வகிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
18ஆவது ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் மாநாட்டு மையத்தில் இன்றும் நாளையும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications