அதிகாலை வந்த அதிர்ச்சி.. 4 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்த டிரம்ப்.. 3 இந்தியர்களும் குறிவைப்பு!
டெல்லி: ஈரான் உடன் எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இந்தியாவை சேர்ந்த 4 நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் அரசு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதுதவிர 3 இந்தியர்களும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் டிரம்ப் அரசு பிரஷர் போட்டு வரும் நிலையில், இந்த நடவடிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் கடந்த சில காலமாகவே பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை உட்பட கடுமையான நடவடிக்கைகளையும் டிரம்ப் அரசு எடுத்து வருகிறது.

பொருளாதார தடை
இதற்கிடையே இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்தியர்கள் மீது டிரம்ப் அரசு பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. "ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்" என்ற நடவடிக்கையின் கீழ் இந்த தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஈரானின் வருவாய் மற்றும் நிதி அமைப்புகளை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
எந்த இந்திய நிறுவனங்களுக்கு தடை?
இந்தியாவைச் சேர்ந்த சதாசிவ ஓவர்சீஸ் லிமிடெட் நிறுவனம் பிப்ரவரி 2024 முதல் ஜூன் 2025 வரை சுமார் 69 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரான் நாட்டை சேர்ந்த பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட போன்ஜூர் கமாடிட்டி FZE நிறுவனத்துடன் இணைந்து இந்த வர்த்தகம் செய்யப்பட்டதாக சொல்லி பொருளாதார தடை அறிவிக்கப்பட்டது.
மேலும், பிபி சாஃப்டெக் பிரைவேட் லிமிடெட், பிரக்ருடீஸ் இன்ஃப்ரா இம்பெக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் தலா சுமார் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஈரான் பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நான்காவதாக போர்ட்டீஸ் பார்ட்னர்ஸ் எல்எல்பி என்ற நிறுவனத்தின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வந்ததாக இந்த நிறுவனம் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
3 இந்தியர்கள்
பிபி சாஃப்டெக் நிறுவனத்தின் இயக்குநர் பிரசாந்த் கார்க் மீதும் அமெரிக்கா இப்போது தடை விதித்துள்ளது. பிரக்ருடீஸ் நிறுவனத்தில் வேலை செய்யும் இந்திரிஸ்மியா அஷரஃப்மியா ஷேக் மற்றும் ஹரிஷ் ராமச்சந்திர ரங்கி ஆகியோரும் தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் ஒரே நாளில் 4 இந்திய நிறுவனங்கள் மற்றும் 3 இந்தியர்கள் மீது அமெரிக்க பொருளாதார தடையை அறிவித்துள்ளது.
அமெரிக்கா அறிவிப்பு
அமெரிக்க டிரஷரி அமைச்சர் ஸ்காட் பெசென்ட் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கைகள் ஈரான் அரசை மேலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிக்குள் தள்ளும் என்றும் அவர் கூறியுள்ளார். ஈரானுடன் எந்த வகையான பொருளாதார நடவடிக்கையிலும் ஈடுபட்டாலும் இதுபோல தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இந்தியா மட்டுமின்றி சீனா மற்றும் ஹாங்காங்கை சேர்ந்த சுமார் 20 நிறுவனங்கள் மீதும் சீனாவை சேர்ந்த 4 பேர் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளதது குறிப்பிடத்தக்கது.
இதுபோல இரு நாடுகளுமே மாறி மாறி நடவடிக்கை எடுத்து வருவதால் வளைகுடாவில் பதற்றம் குறைந்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் வர்த்தகம் தொடங்கி பல்வேறு வர்த்தகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications
