கார்கே நின்ற இடத்தை தூய்மைப்படுத்த பூஜை.. ஒரு மாதத்திற்கு பிறகு வழக்குப்பதிவு செய்த போலீஸ்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேரணியில் பேசிய இடத்தில் சிலர் தூய்மைப்படுத்தும் பூஜை செய்தது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடந்த நிலையில், சுமார் 29 நாட்களுக்கு பிறகு உத்தரகாண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் ஹால்த்வானியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசினார். இந்த பேரணி நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆகஸ்ட் 10ம் தேதி வலதுசாரி அமைப்பை சேர்ந்த சிலர் அந்த இடத்தை தூய்மைப்படுத்தும் பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.

சர்ச்சை
இதற்கு அப்போதே கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என ராகுல் காந்தியும் வலியுறுத்தியிருந்தார். ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு எதிராக அவசர அவசரமாக வழக்குப் போடும் போலீசார், கார்கே விவகாரத்தில் காலம் தாழ்த்துவதாக குற்றஞ்சாட்டியது.
வழக்குப்பதிவு
இதற்கிடையே சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு தூய்மைப்படுத்தும் பூஜை நடத்தியவர்கள் மீது வழக்கு போட்டுள்ளது உத்தரகாண்ட் போலீஸ்! அவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் 196 மற்றும் 299 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர். வெவ்வேறு குழுக்களுக்கு இடையே பகையை ஊக்குவித்தல், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரிவு 196, மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் செயல்களுக்கான பிரிவு 299 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டமும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி உத்தரகாண்ட் போலீசாருக்கு சுமார் 80 புகார்கள் வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்துக்கு காங்கிரஸ் எம்பிக்கள் சென்றனர். அங்கு முதலில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்ய வலியுறுத்தினர். இருப்பினும், போலீசார் அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்பிக்கள் காவல் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்தனர். அவர்கள் அனைவரும் சுமார் மூன்றரை மணி நேரம் காவல் நிலையத்தில் இருந்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எம்பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். வழக்குப்பதிவு செய்ய தேவையான ஊழியர்கள் இல்லாததால் இதற்கு மூன்று நாட்கள் தேவைப்படும் என அதிகாரிகள் கூறியதாகவும், இதனை ஏற்க மறுத்த எம்பிக்கள் எஃப்ஐஆர் பதிவு செய்யும் வரை காவல் நிலையத்தை விட்டு செல்ல மாட்டோம் என கூறி, அங்கேயே இருந்தனர்.
கடும் போராட்டத்திற்கு பிறகே வழக்குப்பதிவு
பின்னர் உத்தரகாண்ட் மாநிலத்திலேயே இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, உத்தரகாண்ட் போலீசார் பதிவு செய்த எஃப்ஐஆர் நகலை டெல்லி போலீசார் எம்பிக்களிடம் வழங்கினர். அதன் பின்னரே காங்கிரஸ் எம்பிக்கள் காவல் நிலையத்திலிருந்து கிளம்பினர்


Click it and Unblock the Notifications
