வெங்கையா நாயுடுவுக்கு பத்மவிபூஷன்! 2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
டெல்லி: ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்ற விழா நிகழ்ச்சியில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோருக்குப் பத்ம விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
நமது நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்படும். இது நாட்டிலேயே மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராஷ்டிரபதி பவன்: அதன்படி இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சுலப் இன்டர்நேஷனல் என்ற தொண்டு நிறுவனத்தை நிறுவிய பிந்தேஷ்வர் பதக் உள்ளிட்டோருக்குப் பத்ம விருதுகளைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
விருதுகள்: இதில் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்ட பிந்தேஷ்வர் பதக் மற்றும் பிரபல பரதநாட்டிய நடனக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் ஆகியோர் ஏற்கனவே மறைந்துவிட்ட நிலையில், அவர்கள் சார்பில் அவர்களது குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். முன்னாள் குடியரசுத் தலைவரான வெங்கையா நாயுடுவுக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
விஜயகாந்த்திற்கு பத்மபூஷன் விருது ஏன்? வந்து விழுந்த கேள்வி.. மத்திய அமைச்சர் எல்.முருகன் பரபர பதில்
இது தவிர நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, பாடகி உஷா உதுப், உத்தரப் பிரதேச முன்னாள் கவர்னர் ராம் நாயக், தொழிலதிபர் சீதாராம் ஜிண்டால் ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பத்ம விருதுகள்: நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள்- பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகள் சிறந்து விளங்குவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
பெண்கள் எத்தனை பேர்: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு விருதுகள் அறிவிக்கப்படும். அதன்படி இந்த 2024ஆம் ஆண்டிற்கான விருதுகள் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட்டது. இந்தாண்டு மொத்தம் 132 பேருக்குப் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஐந்து பத்ம விபூஷன், 17 பத்ம பூஷன் மற்றும் 110 பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 30 பேர் பெண்கள் ஆவர். மேலும், வெளிநாட்டினர்/ என்ஆர்ஐ எட்டு பேருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டனர்.
மேலும், ஒன்பது பேர் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்களாக உள்ளனர். அவர்கள் சார்பில் அவர்கள் குடும்பத்தினர் விருதுகளைப் பெற்றுக் கொண்டனர். இன்று பாதிப் பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு அடுத்த வாரம் விருதுகள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications