சிபி ராதாகிருஷ்ணன் vs சுதர்சன் ரெட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு எத்தனை வாக்கு கிடைக்கும்?
டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தியா கூட்டணியின் வேட்பாளராக ஆந்திராவைச் சேர்ந்த சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் தேர்தலில் யாரின் கைகள் ஓங்கி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் திடீரென உடல்நிலையை காரணமாகக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா ஆளுநராக சிபி ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வந்த நிலையில், அவரை வேட்பாளராக அறிவித்தது பேசுபொருளானது. இந்த அறிவிப்புக்குப் பின் பாஜகவின் தேர்தல் அரசியல் கணக்கு இருப்பதாகப் பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் இன்னும் 7 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கொங்கு மண்டலத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இதனால் தமிழரான சிபி ராதாகிருஷ்ணனுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே அப்துல் கலாம் 2வது முறையாகக் குடியரசுத் தலைவராக வருவதற்கு திமுக தடையாக இருந்தது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதனால் திமுகவுக்கு செக் வைப்பதற்காக பாஜக சார்பாக எடுத்து வைக்கப்பட்ட நகர்வாகவே இது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் பாஜக கூட்டணியில் இருந்தாலும், சுதர்சன் ரெட்டியை ஆதரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகும்.
இதே கணக்கு ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பிஆர்எஸ் கட்சிகளுக்கும் பொருந்தும். இது இந்தியா கூட்டணி சார்பாக பாஜகவுக்கு வைக்கப்பட்ட செக் என்று பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி நாடாளுமன்றத்தில் லோக்சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு சபைகளில் மொத்தமாக 782 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதில் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு உறுப்பினருக்கு குறைந்தபட்சம் 392 வாக்குகள் தேவையாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் பாஜக கூட்டணி வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணனின் கைகளே ஓங்கி இருக்கிறது. பாஜக கூட்டணியில் மொத்தமாக 423 எம்பி-க்கள் ஆதரவாக இருக்கின்றனர். லோக்சபாவில் 293 எம்பிக்களும், ராஜ்ய சபாவில் 130 எம்பிக்களும் இருக்கின்றனர். இதனால் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications