தேர்தல் முடிவுகள் உணர்த்தும் 5 பாயிண்ட்! 2 மேட்டர் பாஜகவுக்கு சாதகம்- இந்தியா கூட்டணிக்கு 3 பாயிண்ட்
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், இப்போது எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துவது என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
நமது நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் இப்போது எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடக்காத சூழலே ஏற்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வரும் நிலையில், இதுவரை இது நமக்கு கற்றுத் தரும் 5 முக்கிய பாயிண்டுகள் குறித்துப் பார்க்கலாம்.
உபி: இந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசம் தான் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருந்துள்ளது. நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 80 தொகுதிகளிலும் பாஜக வெல்லும் என்றே அக்கட்சித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். பெரும்பாலான எக்ஸிட் போல்களிலும் பாஜக பெரிய வெற்றியைப் பெறும் என்றே கூறப்பட்டது.
ஆனால், லோக்சபா தேர்தல் முடிவுகள் அதற்கு நேர் மாறாக இருந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் இந்தியக் கூட்டணி 43 இடங்களில் (சமாஜ்வாதி 36 தொகுதிகள், காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது). மறுபுறம் பாஜக 37 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதர சீட்களில் மற்ற கட்சிகள் முன்னிலையில் இருக்கிறது. கடந்த 2014இல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக 71 இடங்களிலும், 2019ல் 76 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது..
ஒடிசா: அடுத்து முக்கியமான மாநிலம் ஒடிசா. கடந்த பல காலமாகவே ஒடிசா என்பது பிஜு ஜனதா தளத்தின் கோட்டையாகவே இருந்தது. எந்தவொரு கட்சியாலும் அங்கு நவீன் பட்நாயக்கை தாண்டி நுழைய முடியாத சூழலே இருந்தது. ஆனால், இந்த முறை பாஜக அதை மொத்தமாக மாற்றிப் போட்டது.
ஒடிசாவில் மொத்தமுள்ள 21 லோக்சபா தொகுதிகளில் 19 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. இரண்டு தொகுதிகளில் மட்டுமே பிஜு ஜனதா தளம் முன்னிலையில் இருக்கிறது. அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலிலும் கூட பாஜக ஆட்சியைப் பிடிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இதன் மூலம் ஆறாவது முறையாக முதல்வராகும் நவீன் பட்நாயக்கின் கனவு முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.. அங்குச் சட்டசபையில் மொத்தம் 147 தொகுதிகள் இருக்கும் நிலையில் பாஜக 73 இடங்களிலும், ஆளும் பிஜு ஜனதா தளம் 58 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது..
பாஜகவுக்குப் பின்னடைவு: இந்த லோக்சபா தேர்தல் 2024இல் பாஜகவுக்குப் பெரிய பின்னடைவு என்றே சொல்ல வேண்டும். கடந்த தேர்தலில் பாஜக 303 சீட்களில் வென்ற நிலையில், இந்த முறை தனிப்பெரும்பான்மை கூட கிடைக்காத சூழலே ஏற்பட்டுள்ளது. இதனால் பாஜக ஆட்சி என்பதில் இருந்து என்டிஏ ஆட்சி என்பதற்கு நகர்ந்துள்ளது. ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு, ஒடிசாவின் நிதிஷ்குமார் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளனர்.
புரட்டிப் போட்ட மகாராஷ்டிரா: அடுத்து இந்தியா கூட்டணிக்கு கை கொடுத்த மிக முக்கியமான மாநிலம் என்றால் அது மகாராஷ்டிரா. கடந்த முறை அங்குள்ள 48இல் 41 சீட்களில் பாஜக கூட்டணி வென்றது. ஆனால் இந்த முறை அங்கு நிலைமை மொத்தமாக வேறாக இருக்கிறது. காங்கிரஸ் 11 தொகுதிகள், தாக்ரே சிவசேனா 9 சீட்கள், சரத்பவார் என்பிசி 8 தொகுதிகள் என மொத்தம் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
என்டிஏ கூட்டணி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது. பாஜக 11 சீட்கள், சிவசேனா 7 சீட்கள், என்சிபி ஒரு தொகுதியில் மட்டும் முன்னிலையில் இருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு மகாராஷ்டிரா மிக முக்கியமான மாநிலமாக மாறி இருக்கிறது.
தென் மாநிலங்கள்: அடுத்து கடைசி மேட்டர் தெலுங்கானா, ஆந்திராவில் என்டிஏ கூட்டணிக்குக் கிடைத்த பெரிய வெற்றி.. ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தம் 25 தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் 21இல் பாஜக முன்னிலையில் இருக்கிறது. அதேபோல தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும் அங்கு என்டிஏ 7 சீட்களில் வெல்லும் சூழல் உருவாகி உள்ளது. இந்த இரு தென் மாநிலங்களில் பாஜகவுக்குக் கிடைத்த சீட்கள் முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications