ஆதாரமின்றி பேசும் கனடா.. இந்தியா தரும் நறுக் பதிலடிகள்.. உச்சத்தில் மோதல்.. 10 முக்கிய பாயிண்டுகள்
டெல்லி: இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து டாப் 10 பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
இந்தியாவுக்கும் கனடாவுக்குமான மோதல் தொடர்ந்தே வருகிறது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்தில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி இதைத் தொடங்கி வைத்ததே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தான்.

இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்த இந்தியா, பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மோதல் போக்கு ஏற்பட்டு இருக்கிறது.
மோதல்: ஏற்கனவே, இந்தியாவில் அதிகப்படியான கனடா தூதர்கள் இருப்பதாகவும் அதன் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் இந்தியா சார்பில் கூறப்பட்டது. இதற்கிடையே நேற்றிரவு திடீரென செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணத்தில் இந்தியாவின் தொடர்பு இருப்பதாகக் கருத நம்பகமான இடத்தில் இருந்து வந்த தகவலே காரணம் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியிருந்தார். இப்படி மோதல் தொடரும் நிலையில், இந்த விவகாரத்தில் நடந்த டாப் 10 பாயிண்டுகளை நாம் பார்க்கலாம்.
1. இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியான கனடா நாட்டுக் குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்ட நிலையில், அதில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக ட்ரூடோ மீண்டும் மீண்டும் கூறுகிறார். நம்பகமான இடத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளதாக அவர் கூறினாலும், அவர் எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
2. இந்தியா இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், கனடாவில் வெறுப்பு குற்றங்கள் மற்றும் அது சார்ந்த கிரிமினல் வன்முறை அதிகரித்து வருவதாகவும் சாடியுள்ளது. மேலும், நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாகக் கனடா எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
3. மேலும், இங்குள்ள கனடா தூதர்கள் இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டிய இந்தியா, கனடா தூதர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. கனடாவில் இருக்கும் இந்தியத் தூதர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் இருக்கும் கனடா தூதர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாகவும் இதில் ஒரு சமநிலை தேவை என்றும் கூறியுள்ளது.
4. மேலும், கனடா நாட்டவருக்கு விசா வழங்கும் நடைமுறையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல்களால் விசா செயல்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கனடா வெளியுறவுத் துறை, "கனடாவில் உள்ள நமது தூதரகங்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். இது விசா செயல்பாட்டைச் சீர்குலைத்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
5. கடந்த செவ்வாய்க்கிழமை தான் இந்த விவகாரம் மோசமானது. இரு நாடுகளும் மூத்த தூதர்களை மாறி மாறி வெளியேற்றியது. அதைத் தொடர்ந்து கனடாவில் வசிக்கும் இந்திய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது. அதேபோல இந்தியா செல்லும் கனடா நாட்டவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கனடா சார்பிலும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
6. ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அப்போது கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது குறித்து பிரதமர் மோடி அதிருப்தி தெரிவித்தார். அப்போது முதல் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஆரம்பித்து. இது நடந்து சில நாட்களில் கனடா இந்தியா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக டீல் பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டது.
7. கனடாவில் உள்ள சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியே நிஜ்ஜார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இந்த மோதலுக்குக் காரணம். இருப்பினும், இது குறித்து அவர் எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடவில்லை.
8. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தங்களுக்கு இரு நாடுகளுமே முக்கியம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. விசாரணைக்குத் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
9. மற்ற விவகாரங்களில் நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தாலும் இதுபோல தேசியப் பாதுகாப்பு என்று வரும் போது அனைத்து கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுக்கும். இந்த விவகாரமும் அதற்கு விதிவிலக்கு இல்லை. எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாட்டின் நலன்கள் தான் எப்போதும் முதன்மையானது எனத் தெரிவித்துள்ளது. மேலும், பயங்கரவாதியின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
10. இந்தியாவுக்கு வெளியே சீக்கியர்கள் அதிகம் இருக்கும் நாடாகக் கனடா இருக்கிறது. அங்கே கடந்த சில ஆண்டுகளாகவே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்தியத் தூதரகத்திற்கு வெளியே போராட்டங்கள் மற்றும் இந்தியத் தூதர்களுக்கு அச்சுறுத்தல் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கனடாவில் இந்த அமைப்புகளுக்கு எந்தவொரு தடையும் இல்லை. இதன் காரணமாகவே அவர்கள் அங்கே வெளிப்படையாக இயங்கி வருகின்றனர். அங்குப் பல காலிஸ்தான் ஆதரவு இயக்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் தான் இந்தியாவுக்கு எதிரான செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.












Click it and Unblock the Notifications