மோடி, RSS மற்றும் சீனா பற்றி அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் சோனியா காந்தி? சர்ச்சையாகும் புத்தகம்
டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுதியிருந்த 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்கிற சுயசரிதை புத்தகம் நவ.10 அன்று வெளியாகியிருந்தது. இந்த புத்தகத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது? பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் சீனா குறித்து என்ன எழுதப்பட்டிருக்கிறது? என்பதை விரிவாக பார்ப்போம்.
முன்னதாக இந்த புத்தகத்தை 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா' எனும் பதிப்பகம்தான் பப்ளிஷ் செய்ய இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பின்வாங்கிக்கொண்டது. ஆங்கில பதிப்பகங்களில் மிகவும் பெயர் பெற்ற இந்த பதிப்பகம், மிக உயர்ந்த அரசியல் தலைவரின் சுயசரிதையை பப்ளிஷ் செய்ய ரெடியாக இல்லை என்பதே பெரிய விவாதமாக வெடித்திருந்தது.

இதற்கு காரணம் சுயசரிதை புத்தகத்தில், மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் சீனா குறித்து எழுதப்பட்டிருந்த கருத்துக்கள்தான் என்று சொல்லப்படுகிறது. தற்போது புத்தகம் வெளியாகியிருக்கும் நிலையில், அப்படி என்ன கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன? என்பதை பார்ப்போம்.
சீனா மற்றும் நாடாளுமன்ற விவாதங்கள்
எல்லை பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளது குறித்து விவாதிப்பதை அரசாங்கம் தவிர்ப்பதாக சோனியா காந்தி எழுதியிருக்கிறார். "நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மிக முக்கியமான விவகாரங்களை தவிர்க்கிறது. எல்லையில் நமது நிலப்பரப்பின் பகுதிகளை சீனா ஆக்கிரமித்தது, கூட்டாட்சி தத்துவங்களில் தலையிடும் சட்டங்கள், சிறுபான்மையினர் உரிமைகள், குடிமக்களின் தனியுரிமை மற்றும் ஒரு தேசமாக நமது ஒருமைப்பாட்டிற்கு அடிப்படையான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதில்லை" என அவர் எழுதியிருக்கிறார்.
2019 புல்வாமா தாக்குதல் குறித்து
40 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 2019 புல்வாமா பயங்கரவாத தாக்குதலை அரசாங்கம் கையாண்ட விதத்தையும் அவர் விமர்சித்திருக்கிறார். "பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளதாக எச்சரித்த பல உளவுத்துறை தகவல்களை, மோடி அரசு கவனத்தில் கொள்ள தவறிவிட்டது. மேலும் வீரர்களை அழைத்து செல்ல கோரப்பட்ட பாதுகாப்பான விமான போக்குவரத்தையும் வழங்கவில்லை. இன்றுவரை அது குறித்து எந்த விளக்கமும் அளிக்க முன்வரவில்லை" என்று எழுதியிருக்கிறார்.
உளவுத்துறை எச்சரிக்கை
அதாவது சம்பவம் 2019ம் ஆண்டு பிப்.14ம் தேதியன்று நடந்தது. ஜம்முவிலிருந்து சுமார் 250 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீநகருக்கு 2500 சிஆர்பிஎஃப் வீரர்களை அழைத்து செல்ல வேண்டும். இதற்காக மொத்தம் 78 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஆனால், இவ்வளவு வீரர்களை சாலை வழியாக அனுப்பி வைப்பது பாதுகாப்பானது கிடையாது. எனவே, விமான போக்குவரத்து ஏற்பாடு செய்ய வேண்டும். 5 விமானங்களை வீரர்களுக்காக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிஆர்பிஎஃப் தலைமை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டதாகவும்.. அமைச்சகம் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதைத்தொடர்ந்து பயந்தபடியே, பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். ஆனால், இது பற்றி மத்திய அரசு இன்னும் விளக்கம் கொடுக்கவில்லை என்பதைதான் சோனியா காந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
RSS மற்றும் இந்துத்துவா சித்தாந்தம்
RSSன் பார்வையில் இந்துக்களே உயர்ந்தவர்கள் என்றும், அரசியலமைப்பு சட்ட கொள்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்றும் சோனியா காந்தி எழுதியிருக்கிறார். "காந்தியின் சமகாலத்தவரும், இந்துத்துவா எனப்படும் சித்தாந்தத்தை நிறுவியவருமான விநாயக் தாமோதர் சாவர்க்கரால் முன்வைக்கப்பட்ட மாற்று பார்வை, இந்தியாவை இந்துக்கள் உயர்ந்தவர்களாக இருக்கும் ஒரு தேசமாக பார்க்கிறது. இதே கண்ணோட்டத்தைதான் RSS, பாஜக மற்றும் சங் பரிவர் என அழைக்கப்படும் அவற்றின் எண்ணற்ற துணை அமைப்புகளும் கொண்டுள்ளன" என்று எழுதியிருக்கிறார்.
மோடியின் அரசியல் பார்வை குறித்து
மோடியின் அரசியல் பார்வையை, அவரது RSS பின்னணியுடன் இணைத்து.. காங்கிரஸின் பார்வையோடு சோனியா ஒப்பிட்டுள்ளார். "மோடியின் இந்தியா குறித்த சிந்தனை, RSS சித்தாந்தவாதிகளாலும்.. அவர் வளர்ந்த அனுபவத்தாலும் உருவாக்கப்பட்டது. அது மற்ற அனைத்தையும் விட.. தனது மதமும், கலாச்சாரமும் உயர்ந்தது என்ற அடிப்படைவாதத்தை உறுதிப்படுத்தியது. அந்த இந்தியாவில் படிநிலை, ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு ஆகியவை மையமாக உள்ளன. அவர் தனது இந்தியாவுக்காக போராடினார். நான் எனது இந்தியாவுக்காக போராடினேன். ஆதிக்கத்திற்கு எதிரான இந்தியா, அனைவரையும் உள்ளடக்கிய.. மதச்சார்பற்ற மற்றும் சமூக நீதிக்காக நிற்கும் இந்தியாதான் என்னுடையது" என்று சோனியா காந்தி எழுதியிருக்கிறார்.
இந்த கருத்துக்கள் இடம்பெற்றதால்தான் பென்குயின் பதிப்பகம், புத்தகத்தை பப்ளிஷ் செய்யும் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டது என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியிருக்கின்றனர். தற்போது இந்த புத்தகம் ஹார்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
