மோடியின் "மாஸ்டர் பிளான்.!" சத்தமின்றி இறங்கி அடிக்கும் பாஜக.. எதிர்க்கட்சிகளுக்கு மெகா சிக்கல்
டெல்லி: பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பல எதிர்க்கட்சி தலைவர்கள் இறங்கியுள்ள நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக சத்தமில்லாமல் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் பாஜகவை எதிர்க்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பணிகளை பல அரசியல் தலைவர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒரு பக்கம் நடக்க பாஜகவும் தொடர்ந்து 3ஆவது முறையாகத் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்க வைக்க விரும்புகிறது. இதற்கான நடவடிக்கைகளை பாஜக சத்தமில்லாமல் ஆரம்பித்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

எதிர்க்கட்சி கூட்டம்: 2024 மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இறங்கியுள்ளார். இதற்காக வரும் ஜூன் 23ஆம் பாட்னாவில் பெரிய கூட்டம் நடைபெறுகிறது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக என சுமார் 20 எதிர்க்கட்சி தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பாஜகவுக்கு எதிராக நடைபெறும் முக்கியமான கூட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி, காங்கிரஸ்- திரிணாமுல் எனப் பல கட்சிகளுக்கு இடையே மோதல் இருக்கிறது. அதையும் தாண்டி இப்போது ஒரே மேடையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். இது 2024 தேர்தலுக்கு ஒரு கூட்டணியை அமைக்கும் முதல் படியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மறுபுறம் அதே 23ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றுகிறார்.
சமீப ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் பிரிந்தே கிடந்தன. இதற்குப் பிராந்திய தலைவர்களின் பிரதமர் ஆசை தொடங்கிப் பல காரணங்கள் சொல்லப்பட்டது. பீகாரில் நடக்கும் இந்த மாநாடு முக்கியமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் வலுவாக உள்ள டெல்லி மற்றும் பஞ்சாபில் போட்டியிடவில்லை என்றால் மட்டுமே மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் போட்டியிட மாட்டோம் என்கிறது ஆம் ஆத்மி. மேற்கு வங்கத்தின் மம்தாவும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த சிறு சலசலப்புகளைக் கடந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்க உள்ளது.
சிக்கலில் பாஜக: மறுபுறம் பாஜகவுக்கும் சமீப காலங்களில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பிரிட்ஜ் பூஷன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதேபோல மகாராஷ்டிராவில் பாஜக- ஷிண்டே சிவசேனா இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரிலும் பாஜக தேர்தலில் பின்னடைவைச் சந்திக்கலாம் என்று அக்கட்சி நடத்தி ரகசிய சர்வேவில் தெரிய வந்துள்ளது. இவையெல்லாம் பாஜகவுக்குப் பின்னடைவைத் தரும் செய்தியாகவே உள்ளன.
இருப்பினும், அதையும் தாண்டி வலுவான ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பாஜக சத்தமில்லாமல் இறங்கியுள்ளது. அதற்கு முதல் படியாகவே சந்திரபாபு நாயுடு பாஜகவுடன் கூட்டணியை அமைக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர் 2018இல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது. தெலங்கானா தேர்தலில் முதலில் இரு தரப்பும் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.
பாஜக போடும் பிளான்: அதேபோல விவசாயச் சங்க போராட்டம் சமயத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பஞ்சாபின் சிரோமணி அகாலி தளமும் பாஜக உடன் மீண்டும் கூட்டணியை அமைக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த இரண்டு கட்சிகளுமே தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான போதே இருந்த கட்சிகள் ஆகும். இது மட்டுமின்றி கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சியையும் இழுக்க பாஜக ஆலோசித்து வருகிறதாம்.

பெரிய கட்சிகள் மட்டுமின்றி, பல சிறு கட்சிகளையும் கூட்டணியில் இணைக்க பாஜக முயல்கிறது. குறிப்பாக பல்வேறு சாதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாஜக விரும்புகிறது. பீகாரில் நிதிஷ்குமார் கூட்டணி முறிந்த நிலையில், லோக் ஜனசக்தி கட்சி (சிராக் பாஸ்வான் பிரிவு) கூட்டணியில் இணைப்பது குறித்து பாஜக ஆலோசித்து வருகிறது. அங்குள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியையும் பாஜக தன்வசம் இழுக்க முயல்கிறது.
அதேபோல உத்தரப் பிரதேசத்திலும் ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியையும் கூட்டணியில் இணைக்க பாஜக முயல்கிறது. இப்படி பல்வேறு மாநிலங்களிலும் இருக்கும் சின்ன சின்ன கட்சிகளைத் தனது கூட்டணியில் இணைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை பாஜக ஆரம்பித்துள்ளது. வரும் காலங்களில் இது குறித்து மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications