"கழுதை" ரூட்.. அமெரிக்க எல்லையில் சிக்கும் இந்தியர்கள்! ரூ.70 லட்சம் கொடுத்தாலும் ஆபத்து தான்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் நாடுகடத்தும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தி வரும் நிலையில், இன்று 54 இந்தியர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டனர். அவர்கள் டாங்கி ரூட் எனப்படும் கழுதை ரூட்டில் அமெரிக்காவில் நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது. அதென்ன டாங்கி ரூட்.. இதில் இருக்கும் ஆபத்துகள் என்ன.. இந்தியர்கள் இப்படி அமெரிக்கச் செல்லக் காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்!
டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு அமெரிக்க அரசு வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கையைத் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக எல்லையில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்திய அமெரிக்கா, சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைவோரைக் கைது செய்து நாடு கடத்தி வருகிறது. அப்படித் தான் இன்று இந்தியாவைச் சேர்ந்த 54 பேரை அமெரிக்கா நாடுகடத்தியுள்ளது.

நாடுகடத்தல்
நாடு கடத்தப்பட்ட அனைவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், அவர்கள் Donkey route, அதாவது கழுதை ரூட் வழியாக அமெரிக்காவுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதென்ன கழுதை ரூட்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
பொதுவாக எந்த ஒரு செயலையும் சட்டப்படியும் செய்யலாம்.. சட்டவிரோதமாகவும் செய்யலாம். அதுபோலத் தான் வெளிநாடுகளுக்குச் செல்வதிலும் சட்டப்படி மற்றும் சட்ட விரோதம் என இரு வழிகள் உள்ளன.. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் சட்டவிரோதமாக ஆபத்தான முறையில் அமெரிக்காவில் ஒருவர் நுழைவதே கழுதை ரூட் என அழைக்கப்படும்.
வெளிநாடு செல்ல ஆசை
இந்தியாவில் குறிப்பாக ஹரியானா, குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல விரும்புகிறார்கள். அந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு குறைவாக உள்ள நிலையில், வெளிநாடுகளில் சென்று செட்டிலாவதே இவர்கள் ஆசை. வெளிநாட்டு மீதான மோகம் அல்லது எப்படியாவது வெளிநாடு போய்விட்டால் செட்டிலாகிவிடலாம் என்ற ஆசையே இதற்குக் காரணமாகும்.
ஆனால், ஒருவர் வேலைக்காக வெளிநாடு செல்வதற்கான நடைமுறைகள் மிகவும் சிக்கலானவை. சராசரி அல்லது சராசரிக்கும் குறைவான வருமானம் கொண்ட ஒருவரால், இந்த நடைமுறைகளைச் சமாளிப்பது மிகவும் கடினம். ஏற்கனவே பல நாடுகளில் வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், வெளிநாட்டினருக்கான சட்டங்களும் கடுமையாக வருகிறது. ரூல்ஸ் கடுமையானாலும் கூட வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசை ஒருபோதும் குறைவதே இல்லை.
கழுதை ரூட்
அதற்கான சட்டவிரோதத் தீர்வு தான் கழுதை ரூட்.. அமெரிக்காவுக்குச் செல்லவே பெரும்பாலும் இந்தியர்கள் இந்த முறையைப் பயன்படுத்துவார்கள். சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் யாருக்கெல்லாம் விசா கிடைக்காதோ அவர்கள் எல்லாம் இந்தக் கழுதை ரூட்டை பயன்படுத்துவார்கள். ஆனால், இது ஒன்றும் அவ்வளவு ஈஸியான ரூட் இல்லை. கழுதை ரூட்டில் பயணிப்போர் மிக மோசமான முறையில் கூட பயணிக்க நேரிடும். ஆபத்தான ஆறுகளையும், அடர்ந்த காடுகளையும் கடக்க வேண்டியுள்ளது. சில நாட்கள் உணவின்றி வாழும் சூழல் கூட நேரிடுகிறது.
சிரமம்
இவ்வளவு சிரமப்பட்ட பிறகும், அவர்கள் விரும்பிய நாட்டிற்கு நிச்சயம் சென்று சேர்வார்கள் எனச் சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இந்தச் சட்டவிரோதப் பயணத்தில், அதிகாரிகள் கண்ணில் படாமல் ரகசியமாகச் செல்வது முக்கியம். அதிகாரிகள் கண்ணில் பட்டால் கைது செய்யப்படுவார்கள் என்பதால் என்பதால் போலீசார், அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள முடியாது. இதனால் பயணத்தின்போது எதாவது அநீதி ஏற்பட்டாலும் கூட எதுவும் செய்ய முடியாது. அதாவது குறிப்பிட்ட ரூட்டிற்கு பெயர் கழுதை ரூட் இல்லை.. சட்டவிரோதமாகச் செல்லும் முறையின் பெயரே கழுதை பயணமாகும்.
அமெரிக்காவின் தெற்கு எல்லையான மெக்சிகோ வழியாக இதுவரை 42,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்திருக்கலாம் என அமெரிக்க எல்லைப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2022 நவம்பர் முதல், 97,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கழுதை ரூட் மூலம் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
எவ்வளவு செலவாகும்?
பொதுவாக இதுபோல "டங்கி பாதை" மூலம் அமெரிக்காவுக்குச் செல்ல ஒருவருக்கு ₹15 லட்சம் முதல் ₹40 லட்சம் வரை செலவாகும். சில சமயங்களில் இந்தச் செலவு ₹70 லட்சம் அல்லது அதற்கு மேலும் கூட அதிகரிக்கலாம். செலவு மட்டும் இல்லை.. இந்த ரூட்டில் செல்லும்போது ஆபத்தும் அதிகம். இருந்தபோதிலும், தாங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறும் என்ற நம்பிக்கையில் பலரும் இந்த ஆபத்தான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்வது தொடர்ந்தே வருகிறது.












Click it and Unblock the Notifications