எவ்வளவு தூங்கினாலும் உடம்பு வலிக்குதா.. இந்த மோசமான பாதிப்பாக இருக்கலாம்! கவனமா இருங்க மக்களே
டெல்லி: நம்மில் பலருக்கும் தூங்கி எழுந்த பிறகும் கூட வலி ஏற்படும். அதை நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது அது ஒரு மோசமான அறிகுறியாக இருக்கலாம் எனச் சொல்லும் வல்லுநர்கள், அதைத் தடுக்கும் முறைகளையும் விளக்குகிறார்கள்.
இந்த குளிர் காலத்தில் பலருக்கும் படுக்கையை விட்டு எழுந்திருப்பதே கஷ்டமான ஒரு காரியம் தான். கஷ்டப்பட்டு எழுந்த பிறகும் கூட பலருக்கும் அதிகப்படியான உடல் வலி இருக்கும்.
மேலும், சிலருக்குத் தசை விறைத்துப் போனது போன்ற உணர்வும் கூட ஏற்படும். பலருக்கும் இதற்கு என்ன காரணம் என்று புரியாமல் இருப்பார்கள். இதற்கு என்ன காரணம்.. இதை எப்படித் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

ஏன் ஏற்படுகிறது
உடற்பயிற்சியை அதிகமாகச் செய்யும்போது, உங்கள் தசைகளுக்கு அதிக பளு கொடுக்கிறார்கள். முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அதிக எடையைத் தூக்குவது, அடிக்கடி கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்வது போன்ற காரணங்களால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். இது மட்டுமின்றி தூங்கி எழும்போது, நமக்கு அதிக உடல் வலி ஏற்படவும் சில காரணங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே நீண்ட நேரம் தூங்கி எழுந்தாலும் நமக்கு உடல் வலி இருக்கிறது.

தூங்கும் முறை
தூங்கும் போது சரியான போசிஷனில் தூங்க வேண்டும். தவறான போசிஷனில் தூங்கினால் உடலில் வலி மற்றும் உணர்வின்மையை ஏற்படும். குப்புறப்படுத்து வயிற்றை அழுத்திக் கொண்டு தூங்குவது தான் இருப்பதிலேயே தூங்க மிகவும் மோசமான போசிஷன் ஆகும். அப்போது நாம் மூச்சுவிடத் தலையை ஒரு பக்கம் திருப்பி படுப்போம். இது முதுகெலும்புக்கு மிகவும் மோசமானது. இரவு முழுவதும் கழுத்தை இப்படித் திருப்பி வைத்திருப்பது அப்பகுதிகளில் கடும் வலியை ஏற்படுத்தும். இப்படி தூங்குவதால் முதுகு மற்றும் கழுத்து பகுதிகளில் அதிக வலியை ஏற்படுத்தும் என்பதால் இந்த போசிஷனில் நிச்சயம் தூங்கவே கூடாது.

அழற்சி
அடுத்து நமது உடலில் ஏற்படும் அழற்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். உடலில் ஏற்படும் அழற்சி வலிகளை ஏற்படுத்தும். உடலில் ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது, நோயெதிர்ப்பு அமைப்பு முதலில் அழற்சி செல்கள் மற்றும் சைட்டோகைன்கள் கொண்டு பாக்டீரியா போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிப்பதைச் சிக்க வைக்கும். நமது உடலில் ஏற்படும் காயத்தைக் குணப்படுத்தவும் கூட இதே செயல்முறை தான். இதுபோன்ற நேரங்களிலும் வலி, வீக்கம், சிராய்ப்பு அல்லது தோல் சிவத்தல் ஏற்படும். ஆரோக்கியமான உணவு முறை அழற்சியைக் குறைக்க உதவும்.

மெத்தை முக்கியம்
அதேபோல தூங்க ஒரு நல்ல மெத்தையைப் பயன்படுத்துங்கள். மோசமான மெத்தையில் உறங்குவதும் உங்கள் உடல் வலிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மோசமான மெத்தை தூங்கும் போது பல்வேறு காரணங்களால் வலியை ஏற்படுத்துகிறது.. மோசமான மெத்தையைப் பயன்படுத்தும் போது உடலுக்கு போதிய சப்போர்ட் கிடைக்காது. மேலும், அதில் இருக்கும் அதிகப்படியான தூசியாலும் ஒவ்வாமை ஏற்படும். அதிக காலம் ஒரே மெத்தையைப் பயன்படுத்தினாலும் கூட சில பாதிப்புகள் ஏற்படும்.

உடல் எடை
அதிக எடை அல்லது உடல் பருமனும் கூட உடல் வலியை ஏற்படுத்தும்.. உடல் பருமன் முதுகு மற்றும் கழுத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி வலியை ஏற்படுத்தும். அதிக எடையுடன் இருப்பது தூக்கத்தில் சுவாச பிரச்சினைகளையும் கூட ஏற்படுத்தும்.. இது தூக்கத்தின் தரத்தைப் பாதிப்பதால் எழுந்த பிறகும் புத்துணர்ச்சி கிடைக்காது. உடல் எடையைக் குறைப்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான எளிதான வழியாகும். உடல் எடையைக் குறைக்க, சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும். திடீரென ஓரிரு மாதங்களில் அதிகப்படியான எடையைக் குறைப்பதைக் காட்டிலும் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து மெல்ல எடையைக் குறைப்பது சரியான அணுகுமுறைகளை இருக்கும்.

வலியைக் குறைக்க என்ன செய்யலாம்
சில குறிப்பிட்ட விஷயங்களைச் செய்து தூங்கும் போது ஏற்படும் வலியைக் குறைக்கலாம். முதலில் கழுத்து மற்றும் முதுகெலும்பிற்கு சப்போர்ட் தராத மென்மையான மெத்தைகள் மற்றும் தலையணைகளில் தூங்குவதைத் தவிர்க்கவும். உறங்கும் நிலையை மாற்றி, முதுகு அல்லது பக்கவாட்டில் தூங்க முயலவும். தூங்கி எழுந்த உடன் மெல்ல உடலின் ஒவ்வொரு பாகங்களையும் நீட்டி ஸ்ட்ரெட்ச் செய்யவும். வலியைக் குறைக்கச் சூடான நீரில் குளிக்கவும். வைட்டமின் டி இருக்கும் பொருட்களைச் சாப்பிடுங்கள்.. சூரிய ஒளியில் சில நிமிடங்கள் இருங்கள். யோகா, தியானம் உள்ளிட்டவற்றையும் முயன்று பார்க்கலாம்.

மோசமான பாதிப்பின் அறிகுறி
மேலும், எப்போதும் காலையில் எழுந்திருக்கும் போது வலி ஏற்பட்டால் அது வேறு சிலவற்றின் அறிகுறியாகக் கூட இருக்கலாம். வைரஸ் தொற்று, மன அழுத்தம், ரத்த சோகை, வைட்டமின் டி குறைபாடு, நிமோனியா, சோர்வு, லூபஸ் உள்ளிட்ட பாதிப்புகளின் அறிகுறியாகக் கூட இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான பாதிப்பு தீவிரமானது இல்லை. எனவே, அவற்றுக்கு எளிதாக சிகிச்சை அளிக்க முடியும். அதேநேரம் சில தீவிர பாதிப்புகளுக்குத் தொடர் சிகிச்சையும் வாழ்க்கை முறையில் சில குறிப்பிட்ட மாற்றங்களைச் செய்ய வேண்டியது அவசியம்.












Click it and Unblock the Notifications