அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிறகும் பாஜக தோல்வி! எதிராக திரும்பியதே அந்த 400 சீட் பிரச்சாரம் தான்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்து சில மாதங்கள் கூட ஆகாத போதிலும் அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத்தில் பாஜகவுக்குப் படுதோல்வி கிடைத்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை என்ற போதிலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக 3ஆவது முறையாக ஆட்சியை அமைக்க உள்ளது.

இருப்பினும் தேர்தல் முடிவுகளில் உத்தரப் பிரதேசம் தான் பாஜகவுக்கு மிகப் பெரிய ஷாக்கை கொடுத்தது. கடந்த தேர்தலில் பாஜக உபி-இல் 71 சீட்களில் வென்ற நிலையில், இந்த முறை 33 சீட்களில் மட்டுமே வெல்ல முடிந்தது.. இது சமாஜ்வாதியை விட 4 சீட் குறைவாகும்.
அயோத்தி: இதில் பாஜகவுக்குப் பெரிய ஷாக் என்றால் அது அயோத்தியில் ராமர் கோயில் இருக்கும் பைசாபாத்தில் பாஜகவுக்குக் கிடைத்த தோல்வி. இது நாடு முழுக்க மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஏனென்றால் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த 4 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில், பாஜக வேட்பாளர் சுமார் 54,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது பெரிய ஷாக் தான்.
கடந்த தேர்தல்கள்: 1984க்கு பிறகு இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரசும் தலா இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளன. 1991க்குப் பிறகு அயோத்தியில் பாஜக முக்கியத்துவம் பெற்றது. இந்த தொகுதியில் பாஜகவின் வினய் கட்டியார் 1991, 1996, 1999 என்று மூன்று முறை வென்றுள்ளார்.
அதன் பிறகு ஓபிசி முகமான கட்டியாரை நீக்கிவிட்டு லல்லு சிங்கை அங்கே பாஜக முன்னிறுத்தியது. அவர் 2014, 2019 என இரு தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார். இதற்கு மோடி அலை முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், இந்த முறை இரு முக்கிய காரணங்கள் அவருக்குத் தோல்வியைக் கொடுத்துள்ளது.
முதல் காரணம்: முதலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வென்றால் அரசியல் சாசனம் மாற்றப்படும் என்று அயோத்தியில் முதலில் கூறியவரே பாஜக சார்பில் அயோத்தியில் போட்டியிட்ட லல்லு சிங் தான்.. இதைச் சரியாகப் பிடித்துக் கொண்ட சமாஜ்வாதி கட்சி பாஜக பெரும்பான்மையைப் பெற்றால் அரசியல் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்றும் இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நிறுத்திவிடுவார்கள் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இது நல்ல பலனை அவர்களுக்குக் கொடுத்தது.
இந்த 400 சீட் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி இட ஒதுக்கீட்டை நிறுத்திவிடுவார்கள் என்ற பிரச்சாரம் களத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பாஜக தனது பிரச்சாரத்தில் பல முறை அரசியல் சாசனத்தை மாற்றப்படாது.. இட ஒதுக்கீடு நிறுத்தப்படாது என்ற விளக்கத்தைத் தொடர்ந்து கொடுக்க வேண்டி இருந்தது. அந்தளவுக்கு இந்த 400 சீட் பிரச்சாரம் பாஜகவுக்கு எதிராகப் போய்விட்டது.. குறிப்பாக அயோத்தியில் மொத்தமாக எதிராகப் போய்விட்டது.
இரண்டாவது காரணம்: அடுத்து முக்கியமான காரணம் அங்குள்ள சாதிய கணக்கு.. அயோத்தியில் உள்ள ஓபிசி வாக்காளர்கள் அதிகம்.. குறிப்பாக குர்மிகள் மற்றும் யாதவர்கள் அதிகம். அங்கு ஓபிசி மக்கள் தொகை 22%ஆக உள்ள நிலையில், தலித்துகள் தலித்துகளில் 21% உள்ளனர். தலித் சமூகத்தில் பாசி பிரிவினர் தான் அங்கே அதிகம். இந்த பாசி சமூகத்தைச் சேர்ந்தவர் தான் இப்போது வெற்றி பெற்றுள்ள சமாஜ்லாதி வேட்பாளர் அவதேஷ் பிரசாத்.
அத்துடன் இஸ்லாமியர்கள் 18% இருக்கவே இந்த மூன்று சமூகங்களும் சேர்ந்து 50% வாக்காளர்களாக உள்ளனர். இம்முறை, ஓபிசி, தலித்துகள், முஸ்லிம்கள் ஆகிய மூன்று சமூகங்களும் இணைந்து சமாஜ்வாதி கட்சிக்கு பைசாபாத்தில் மறக்கமுடியாத வெற்றியைக் கொடுத்துள்ளது.
அதிருப்தி: இது தவிர அயோத்தி ராமர் கோயிலுக்காக நிலத்தைக் கொடுத்தவர்களும் தங்களுக்கு உரிய இழப்பீடு வரவில்லை என்று கடுப்பில் இருக்கிறார்களாம். எங்கிருந்தோ வந்த தொழிலதிபர்களே இதில் பலனடைகிறார்கள். கோயிலுக்கு நிலத்தைக் கொடுத்தவர்களுக்குப் பலன் இல்லை என்ற அதிருப்தியும் இருந்துள்ளது. இதுவும் பாஜகவுக்கு எதிராக மாறிவிட்டது. அயோத்தியை மட்டும் இழக்கவில்லை. அண்டை தொகுதிகளான பஸ்தி, அம்பேத்கர்நகர், பாரபங்கி போன்றவற்றையும் பாஜக இழந்துவிட்டது.












Click it and Unblock the Notifications