‛பிரதமராக சாதிச்சாச்சு இனி ஓய்வு எடுங்க’.. மோடியிடம் கூறிய பாஜக மூத்த தலைவர்.. பதில் என்ன தெரியுமா?
டெல்லி: பிரதமராகவும், முதல்வராகவும் போதிய பணிகளை செய்துவிட்டீர்கள். இனி ஓய்வு எடுக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் மோடியிடம் கூறியுள்ளார். இதுபற்றி டெல்லியில் நடந்த பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றது போல் இந்த முறையும் மாபெரும் வெற்றியை பெறும் முனைப்பில் பாஜக தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜகவின் என்டிஏ எனும் இந்திய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளையும் வெல்ல வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து பாஜக வேலை செய்து வருகிறது.
இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வெற்றி பெறுவது தொடர்பாக பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட மத்திய அமைச்சர்கள், அனைத்து மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த கவுன்சில் கூட்டம் இன்றுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் நிறைவு நாளான இன்று பிரதமர் மோடி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். நமது கூட்டணி 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும். இதற்கு உங்கள் அனைவரின் உழைப்பும் தேவை.
இந்த தேர்தல் வெற்றி என்பது நமது சித்தாந்தவாதியும், கட்சி நிறுவனருமான சியாம் பிரசாத் முகர்ஜிக்கு (ஆர்எஸ்எஸ் உதவியுடன் ஜனசங்கத்தை உருவாக்கியவர்) மரியாதை செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். பெண்கள் என்பவர்கள் வெறும் வாக்காளர்கள் மட்டுமல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி ஆற்றிய பணிகளுக்கும் அங்கீகாரம் அளிக்கும் நபராக இருக்கின்றனர். இதனா்ல அவர்களின் ஆதரவு முக்கியம். நாம் செய்த பணிகளை தாய், சகோதரர்களிடம் எடுத்துக்கூறி அவர்களின் ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.
அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு புதிய வாக்களர்களையும் தொடர்பு கொள்ள வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். பதவியை அனுபவிப்பதற்காக இதனை நாம் செய்யவில்லை. பல தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடித்ததன் அடையாளமாக இதனை கேட்கிறோம். இதனால் அடுத்த 100 நாட்கள் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். நாட்டு மக்களின் கனவுதான் எனது கனவு. மக்களுக்காக பகல், இரவு பாராமல் வேலை செய்து வருகிறோம்.
பாஜக மூத்த தலைவர் ஒருமுறை என்னிடம் ஓய்வெடுக்கும்படி கூறினார். முதல் அமைச்சராகவும், பிரதமராகவும் போதுமான பணிகளை செய்துவிட்டீர்கள். நீங்கள் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்றார். ஆனால் நான் நாட்டின் கொள்கைக்காக உழைக்கிறேன். அரசியல் நோக்கத்துக்காக அல்ல. இதனால் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும்'' என கூறினார்.












Click it and Unblock the Notifications