சீன் மாறுதே! 5 மாநிலங்கள்.. இறங்கி அடிக்கும் காங்கிரஸ் vs பாஜக.. இடையில் மாநில கட்சிகள் வேற!
டெல்லி: இந்தாண்டு இறுதியில் 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கே கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் என்ன சூழல் இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
கடந்த மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் மிகப் பெரியளவில் வெற்றி பெற்றது. பல கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியை அமைத்தது.

காங்கிரஸின் இந்த வெற்றி இந்தாண்டு இறுதியில் நடக்கும் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலங்கானா மாநிலச் சட்டசபைத் தேர்தல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த 5 மாநிலங்களில் மத்தியப் பிரதேசத்தில் பாஜகவும், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் உள்ளன. தெலுங்கானாவில் கேசிஆரின் பிஆர்எஸ், மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எஃப்) ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளன. கடந்த தேர்தலில் இருந்த சூழல் இப்போது எந்த மாநிலத்திலும் இல்லை. இதனால் இந்த அனைத்து மாநிலங்களிலும் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது என்ன சூழல் என்பது குறித்துப் பார்க்கலாம்.
சத்தீஸ்கர்: பல ஆண்டுகளாக மாவோயிஸ்ட்களுடன் போராடும் கனிம வளங்கள் நிறைந்த மாநிலம். முன்பு மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த இது, 2000இல் தனி மாநிலமாக உருவானது. இங்கே ராமன் சிங் தலைமையிலான பாஜக அரசு 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இதற்கு 2018இல் காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்றது.
90 இடங்கள் கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் 68 இடங்களையும் 43 சதவீத வாக்குகளையும் பெற்றது. அதேநேரம் பாஜகவால் 33 சதவீத வாக்குகளையும் 15 சட்டசபை தொகுதிகளையும் மட்டுமே 2018இல் வெல்ல முடிந்தது. அங்கே 2008, 2013 தேர்தல்களிலும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருந்தது.. வாக்கு வித்தியாசம் ஒரு சதவிகிதத்திற்குக் குறைவாக இருந்த போதிலும், பாஜக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ், பாஜக தவிர பகுஜுன் சமாஜ் கட்சிக்கும் அங்கே கொஞ்சம் செல்வாக்கு இருக்கிறது. அங்கு அவர்களுக்கு 6% வாக்குகள் இருக்கிறது.
மத்தியப் பிரதேசம்: பாஜகவும், காங்கிரஸும் கடுமையாகப் போராடும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. கடந்த 2004 முதல் அங்கு பாஜக (டிசம்பர் 2018 முதல் மார்ச் 2020 வரை 15 மாதங்கள் தவிர) ஆட்சியில் இருந்து வருகிறது.. 1990களின் தொடக்கத்தில், பாஜக வளர்ந்து வந்த போது, மத்தி பிரதேசத்தில் தான் அவர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது. இதனால் மத்தியப் பிரதேசத்தை பாஜக எப்போதும் முக்கியமானதாகவே பார்க்கும்.
2008, 2013 தேர்தல்களில் பாஜக இங்கே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இருப்பினும், 2018இல் காட்சிகள் மாறின. அங்கே கடும் போட்டி நிலவிய நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளும் 41% வாக்குகளைப் பெற்றன.. பெரும்பான்மைக்கு 115 இடங்கள் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 105 இடங்களையும் வென்றது. அங்கே காங்கிரஸ் தான் முதலில் ஆட்சியை அமைத்தது. இருப்பினும், 2020இல் சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையக் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

பகுஜுன் சமாஜ் கட்சிக்கும் அங்கே சுமார் 5% வாக்குகள் உள்ளன. இந்தச் சூழலில் இந்தாண்டு நடக்கும் தேர்தலில் பாஜக- காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான்: இங்கே 200 சட்டமன்ற இடங்கள் உள்ளன. சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போல இல்லாமல், கடந்த 30 ஆண்டுகளாகவே இங்கே ஆளும் கட்சி தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் வலுவான தொண்டர்களைக் கொண்ட மாநிலம் இது.. அதேநேரம் பாஜக இங்கே வெல்லும் போதெல்லாம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரம் காங்கிரசுக்கு இங்கே மிகப் பெரிய வெற்றி கிடைத்ததே இல்லை.
ஆளும் தரப்புக்கு எதிரான மனநிலை, மாநில காங்கிரசுக்குள் இருக்கும் பிரச்சனைகள், ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு நல்லதல்ல. எதாவது ஒரு மிகப் பெரிய அதிசயம் நடந்தால் மட்டுமே இங்கே காங்கிரஸ் கட்சியின் தலைவிதி மாறும்.
தெலங்கானா: நீண்ட ஒரு அரசியல் போராட்டத்திற்குப் பிறகு 2014இல் உருவான மாநிலம் தான் தெலங்கானா. ஆந்திராவில் இருந்து உருவான இந்த மாநிலத்தில் இதுவரை கேசிஆரின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சியே ஆட்சியில் இருந்துள்ளது. அங்கு 119 சட்டசபை உள்ள நிலையில், கடந்த 2018 தேர்தலில் பிஆர்எஸ் 47 சதவீத வாக்குகளுடன் 88 இடங்களை அள்ளியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 28 சதவீத வாக்குகளைப் பெற்று வெறும் 19 இடங்களை மட்டுமே வென்றது. பாஜகவுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே கிடைத்தது.
இருப்பினும், அங்கே பாஜக வேகமாக வளர்ந்து வருவதாகவே கூறப்படுகிறது. கடந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில், அக்கட்சி குறிப்பிடத் தகுந்த பெற்றியைப் பெற்றது. மேலும், சில இடைத்தேர்தல்களில் காங்கிரசை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றது. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக செலுத்தும் மாநிலங்களில் ஒன்றாக இருப்பதால் இங்கும் கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒவைசியின் மஜ்லீஸ் கட்சிக்கும் இங்கே செல்வாக்கு உள்ளது.
மிசோரம்: 40 இடங்களைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கே 2008 முதல் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. இருப்பினும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 38 சதவீத வாக்குகளைப் பெற்று 27 இடங்களில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணியால் பெரும்பான்மை பெற முடியவில்லை, ஆனால் மற்ற கட்சிகளின் உதவியுடன் அது ஆட்சியை அமைத்தது.












Click it and Unblock the Notifications