அமித்ஷா தயவில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி.. ஞானேஷ் குமார் பதவிக்காலம் எப்போது முடியும்? பின்னணி
டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்நிலையில் தான் ஞானேஷ் குமார் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இன்னும் எவ்வளவு ஆண்டுகள் பொறுப்பில் இருப்பார்? அவரது பதவிக்காலம் எப்போது முடிவுக்கு வரும்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
'சார்' எனும் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த பணிகளின்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக செயல்பட்டு முடிவுகளை எடுத்துள்ளார். சட்ட விதிகளுக்கு அப்பாற்றபட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது பெயர் சேர்க்கும் படிவம் 6 ல் கேள்விகளை இடம்பெற செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் ஆட்சேபனைகள் தெரிவித்தும் ஞானேஷ் குமார் கேட்கவில்லை. இதனால் ஞானேஷ் குமார் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஞானேஷ் குமார் உடனடியாக தனது தலைமை தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். அதேபோல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் இன்னும் ஒருபடி மேலே போய் அடுத்த 48 மணிநேரத்தில் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் டெல்லி உள்பட இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று அறிவித்தது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கொடுத்த கெடுவில் 24 மணிநேரம் முடிந்துவிட்டது. இன்னும் 24 மணிநேரம் மட்டுமே பாக்கி உள்ளது.
இதனால் ஞானேஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் இன்னும் எவ்வளவு காலம் இருக்கிறது? அவரது பதவிக்காலம் எப்போது முடிவுக்கு வரும்? என்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கான விடை இங்கு உள்ளது.
ஞானேஷ் குமாரின் பதவிக்காலம் 2029 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி வரை உள்ளது. அதன்படி பார்த்தால் இன்னும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக அவரால் இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நீடிக்க முடியும். இவர கடந்த 2025 பிப்ரவரி 19ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நியமனம் செய்வதற்கான குழுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இருந்தனர். ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு பதில் பிரதமர் விரும்பும் மத்திய அமைச்சரை (இப்போது அமித்ஷா இருக்கிறார்) இணைக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி ஞானேஷ் குமார் இந்த பொறுப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார்.
இந்த புதிய சட்டத்திருத்தத்தின்படி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். இந்த பொறுப்புக்கு ஒருவர் தேர்வு செய்யப்படும்போது அவர் 6 ஆண்டு பதவிக்காலத்தை முதலில் நிறைவு செய்தல் அல்லது 65 வயதை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் எது முதலில் வருகிறதோ அதனடிப்படையில் பதவிக்காலத்தை முடிக்க வேண்டும். ஞானேஷ் குமாருக்கு தற்போது 62 வயது ஆகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் அவருடைய வயது 65 ஆகும். ஞானேஷ் குமார் 1964ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி பிறந்தார். அதன்படி பார்த்தால் 2029 ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி அவர் 65 வயதை எட்டுவார். இதனால் அதற்கு முந்தைய தினமான 2029 ஜனவரி 26ல் அவரது பதவிக்காலம் முடிவுக்கு வரும்.
தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ள ஞானேஷ் குமார் கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. 1988 ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த இவர் கேரளாவில் பணியாற்றினார். பிறகு மத்திய அரசு பணிக்கு சென்றார். இந்த சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உள்துறையில் நீண்டகாலமாக செயல்பட்டார். உள்துறையின் இணை செயலாளர், கூடுதல் செயலாளராகவும், அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுத்துறையின் செயலாளராகவும் செயல்பட்டார்.
அமித்ஷாவின் நம்பிக்கையை பெற்றார். இதனால் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370-யை நீக்கும் விவகாரத்தில் முக்கிய பொறுப்பு ஞானேஷ் குமாருக்கு வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த தன்னாட்சி அதிகாரத்தை நீக்கி, அதனை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கான 'ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்ட மசோதாவை தயாரித்து வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று அதனை சிறப்பாக முடித்தார் ஞானேஷ் குமார். பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்தை மேற்பார்வையிட்ட ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேஷாத்ரி அறக்கட்டளையை நிறுவுவதில் முக்கிய பங்காற்றினார். இப்படி அமித்ஷாவின் நம்பிக்கையை பெற்ற பிறகு தான் 2024ம் ஆண்டில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
