மோடி பேசும்போது.. எல்.முருகன் இல்லையே! எங்க போனாரு? லோக்சபாவில் சு.வெங்கடேசன் கேள்வி
டெல்லி: தொகுதி மறுவரையறைக்கு எதிராக மக்களவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பி சு.வெங்கடேசன்.. எந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து? இதை மேற்கொள்ளப்போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் லோக்சபாவில் எல்.முருகன் எங்கே? என்றும் கேட்டிருக்கிறார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக எம்பிக்கள் சரமாரியான கேள்வியை எழுப்பியிருந்தனர். இதனை தொடர்ந்து தற்போது சிபிஎம் எம்பியும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நரித்தன மசோதா
மக்களவையில் சு.வெங்கடேசன் பேசியதாவது, "இன்றைக்கு இருக்கும் எம்பிக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை உடன் இதை இணைத்திருப்பதை கடுமையாக எதிர்க்கிறேன்.
இதுவரை நீங்கள் தென்னிந்தியர்களின் நிதியை பறித்தீர்கள். இப்போது எங்களின் உரிமையை பறிக்கிறீர்கள். நாட்டை ஆளும் எங்கள் உரிமையை பறிக்கிறீர்கள். இது 'நாரி சக்தி மசோதா' அல்ல.. பாஜகவின் 'நரித்தன' மசோதா. தமிழ்நாடு உட்பட இரண்டு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இப்போது அவசரமாக இந்த அவையை கூட்ட வேண்டிய அவசியம் என்ன?
எல்.முருகன் எங்கே?
நாங்கள் 40 எம்பிக்கள் தேர்தல் களத்தை விட்டுவிட்டு இங்கு வந்து அமர்ந்திருக்கிறோம். உங்களுக்கு அந்த கவலை இல்லை. ஏனெனில் பாஜகவையோ, அல்லது கூட்டணியான அதிமுகவையோ சேர்ந்த ஒரு எம்பியை கூட தமிழக மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்ல. மாறாக தேர்வு செய்யப்பட்ட நாங்கள் இங்கே வந்து நிற்கிறோம். எங்களுக்கு தேர்தல் வெற்றியை விட, தமிழ்நாட்டின் வெற்றிதான் முக்கியம்.
ஓட்டு கேட்டு போன எல்.முருகன்
சுமார் 40 நிமிடம் உரையாற்றிய பிரதமர், தன்னுடைய பேச்சை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காது கொடுத்து கேட்க வேண்டும் என்று சொன்னார். அதுசரி, நாங்கள் இங்கேதான் இருக்கிறோம். நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் எல்.முருகன் எங்கே? அவர் அவிநாசியில் ஓட்டு கேட்டுக்கொண்டிருக்கிறார். மேட்டுபாளையத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பொதுக்கூட்டத்தில் இருக்கிறார். உங்களுக்கு தேவை ஓட்டு, ஆனால் எங்களுக்கு தேவை தமிழ்நாட்டு மக்களின் தன்மானம் மிகுந்த வெற்றி.
1952, 1962, 1972ம் ஆண்டுகளில் மறுவரையறை நடந்திருக்கிறது. ஆனால் 1972க்கு பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. 50 ஆண்டுகால பிரச்சனை இது. ஆனால், 50 மணி நேரத்திற்கு முன்னர் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அவசர அவசரமாக விவாதிக்க வலியுறுத்துகிறீர்கள். உங்கள் நோக்கம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை கிடையாது, ஒற்றுமையின்மைதான்.
எந்த மக்கள் தொகை?
தற்போது மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு சராசரியாக 60 எம்பிக்கள் வர வேண்டும். ஆனால், தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதா, எந்த மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு இதனை செய்யப்போகிறது? என்பதை தெரிவிக்கவில்லை.
மத்திய உள்துறை அமைச்சர் துண்டு சீட்டை வைத்துக்கொண்டு நிறைய விஷயங்களை சொன்னார். அதுசரி, அதை டைப் அடிக்க கூட உங்களுக்கு நேரம் இல்லையா? எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மறுவரையறை நிறைவேற்றப்படும் என்பது குறித்து ஏன் மசோதாவில் சொல்லவில்லை? அதைப்பற்றி ஏன் பேசவில்லை?
2001ன் படி மறுவரையறை செய்தால், தமிழ்நாட்டிற்கு 60 எம்பிக்கள் கிடைக்கமாட்டார்கள், 51 எம்பிக்கள் மட்டுமே கிடைப்பார்கள். அதுவே 2026 கணக்கெடுப்பு எனில்.. அப்போதும் 60 வராது, 47தான் வரும். இப்போது மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.18%. ஆனால் மறுவரையறை செய்யப்பட்டால் 5.7% மட்டுமே இந்த பிரதிநிதித்துவம் இருக்கும்.
ஒரு கேள்வி
கடந்த 1971ம் ஆண்டு தமிழ்நாடும் பீகாரும் ஒரே மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்தது. தமிழ்நாடு 4.1 கோடி, பீகார் 4.2 கோடி. எனவேதான் தமிழகத்திற்கு 39 எம்பிக்கள், பீகாருக்கு 40 எம்பிக்கள். இன்று என்ன நிலைமை? தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.6 கோடி, பீகாரின் மக்கள் தொகை 12.3 கோடி. எனவேதான் நீங்கள் எந்த மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு மறுவரையறையை செய்யப்போகிறீர்கள்? என்ற கேள்வி எழுகிறது.
மக்கள் தொகை கட்டுப்பாடு
மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது என்பது, அரசின் சட்டம் மூலமோ, மத்திய அரசின் உத்தரவு மூலமோ சாத்தியப்பட்டு விடாது. அது கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவை குறித்து மக்களுக்கு ஏற்படும் விழிப்புணர்வால்தான் சாத்தியமாகியிருக்கிறது. குறிப்பாக பெண்கள் கல்வி அதிகரித்ததால்தான் தமிழ்நாட்டில் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அது எங்களின் வெற்றி. இந்த மசோதா எங்கள் வெற்றியின் மீது நீங்கள் காட்டுகிற வெறுப்புதான் இந்த மசோதா. எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியதால், நீங்கள் காட்டுகிற பாரபட்சம்தான் இந்த மசோதா.
பிரதமர் வஞ்சகம் செய்ய மட்டோம் என்றார். ஆனால் அவருக்கு ஒரு கேள்வி. போர் நடந்த போது கூட இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. ஆனால், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு, கடந்த 4 ஆண்டுகளில் ஏன் நடத்தவில்லை? இப்போது 820 எம்பிக்களுக்காக புதிய நாடாளுமன்றத்தை கட்டிவிட்டு, திரைமறைவாக இப்படி பல வேலைகளை செய்துவிட்டு எங்களை நம்புங்கள் என்றால்.. பகுத்தறிவு உள்ள நாங்கள் எப்படி நம்புவோம்?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
















Click it and Unblock the Notifications