அடிதூள்! ஆசியாவிலேயே பெங்களூர் தான் டாப்.. லிஸ்டில் வந்த மற்றொரு தென்னிந்திய நகரம்.. எது தெரியுமா
டெல்லி: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு வேகமாக வளரும் நகரங்கள் குறித்த ஆய்வுகளை நடத்தினர். உலக பொருளாதாரமே இப்போது திணறினாலும் கூட இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இரு நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
கடந்த சில காலமாகவே தென்னிந்தியா மிகச் சிறப்பான முறையில் வளர்ந்து வருகிறது. நாட்டின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தென்னிந்திய நகரங்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.
இதனிடையே ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பிரிவு வேகமாக வளரும் நகரங்கள் குறித்த ஆய்வுகளை நடத்தினர். அதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் தென்னிந்தியாவைச் சேர்ந்த இரு நகரங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

பெங்களூர்
2023ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வேகமாக வளரும் நகரமாக இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் பெங்களூர் தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இதர இந்திய நகரங்கள் மட்டுமின்றி, ஆசிய பசிபிக் நகரங்களின் வளர்ச்சியைக் காட்டிலும் பெங்களூரில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்று இந்தியாவின் ஆக்ஸோபோர்ட் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது. இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு நகரம் தான் இடம்பெற்றுள்ளது.

ஆக்ஸ்போர்டு ஆய்வு
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆலோசனை நிறுவனம் நடத்திய ஆய்வில் தான் இது தெரிய வந்துள்ளது. உலகெங்கும் உள்ள 300க்கும் மேற்பட்ட தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் கொண்ட அமைப்பு தான் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள முக்கிய நகரங்களான பாங்காக், ஷாங்காய், பெய்ஜிங், ஹாங்காங் மற்றும் டோக்கியோ போன்ற நகரங்களுக்குப் பெங்களூர் கடும் போட்டியை அளிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு தென்னிந்திய நகரம்
இந்த ஆய்வின்படி, 2023இல் பெங்களூர் 6% மேல் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்டியலில் அடுத்து இடம்பெற்றுள்ள தென்னிந்திய நகரம் ஹைதராபாத் ஆகும். பெங்களூர் போலவே ஹைதராபாத் கூட 2023இல் இதேபோன்ற வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தென்னிந்திய நகரங்களும் ஐடி மட்டுமின்றி உற்பத்தித் துறையிலும் கூட பல முதலீடுகளை ஈர்த்துள்ளன. அந்த அறிக்கையில், "ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நகரங்களுக்கு 2023 கடினமான ஆண்டாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

என்ன காரணம்
இருப்பினும், சில பிரகாசமான இடங்களையும் நாங்கள் காண்கிறோம். அதில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் நல்ல வளர்ச்சியை பெறுகிறது. இந்தாண்டு சர்வதேச வணிகத்துடன் குறைந்த தொடர்பு மற்றும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளைக் கொண்ட நகரங்களில் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும், ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடுகளை நீக்கியதன் மூலம் சீன நகரங்கள் இந்தாண்டு மிக பெரியளவில் பயனடையும்" என்று கூறியுள்ளனர்.

டாப் நகரங்களுக்குப் போட்டி
ஷாங்காய், பெய்ஜிங், சியோல், டோக்கியோ மற்றும் சிங்கப்பூரை விட அதிக வளர்ச்சி பெங்களூருக்கு இருக்கும்.ஹைதராபாத்திலும் பெங்களூருக்கு இணையான வளர்ச்சி உள்ளது. இதனால் இந்த இரு நகரங்களிலும் ஆபீசுக்கு தேவையான இடங்களும் அதிகரித்துள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒட்டுமொத்த உலகமே கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகளால் திணறிக் கொண்டிருக்கும் சூழலில், தென்னிந்திய நகரங்கள் மட்டும் மிகச் சிறப்பான வளர்ச்சியை அடைய உள்ளது.

என்ன பிரச்சினை
கொரோனா பெருந்தொற்று முடிந்துவிட்டாலும் பல நாடுகளில் விலைவாசி உயர்வு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளன. இதனால் அங்குள்ள மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. இதனால் வளரும் நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்த அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி பெங்களூர், ஹைதராபாத் வளர்ச்சியில் டாப் இடத்தை பிடித்துள்ளது முக்கியமாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications