பாதுகாப்பு துறைக்கு ஜாக்பாட்.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற டாப் துறைகள் எது தெரியுமா? முழு விபரம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. எந்த துறைக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.
2025-2026ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலை 11 மணி முதல் மதியம் 12.15 மணி வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்தார்.

அதில் ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை இருப்போருக்கு வருமான வரி கிடையாது என்று அதிரடியாக அறிவித்துள்ளார். இது மிடில் கிளாஸ் மக்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இந்த பட்ஜெட்டில் எந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம். அதன்படி அதிகபட்சமாக பாதுகாப்புத்துறைக்கு மொத்தம் ரூ.4 லட்சத்து 91 ஆயிரத்து 732 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகள் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ளது. இதனால் நம் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் உள்பட முப்படைகளையும் பலமாக கட்டமைக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு துறைக்கு ரூ.4.91 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஊரக மேம்பாட்டு துறைக்கு ரூ.2 லட்சத்து 66 ஆயிரத்து 817 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரகமேம்பாட்டு துறை என்பது கிராமப்புறங்களை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களை மையப்படுத்தி பாதுகாப்பு துறைக்கு அடுத்தபடியாக ஊரக மேம்பாட்டு துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் 3வது துறையாக நாம் பார்ப்பது மத்திய உள்துறை. இந்த மத்திய உள்துறையில் எல்லை பாதுகாப்பு படை உள்பட முக்கிய பாதுகாப்பு படைகள் வருகின்றன. இந்த துறை நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால் மத்திய உள்துறைக்கு ரூ. 2 லட்சத்து 33 ஆயிரத்து 211 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக விவசாய துறை உள்ளது. இந்த முறை விவசாய துறைக்கு ரூ. 1 லட்சத்து 71 ஆயிரத்து 437 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கல்வித்துறைக்கு ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 650 கோடியும், சுகாதாரத்துறைக்கு ரூ. 98,311 கோடியும், நகர மேம்பாட்டுத்துறைக்கு ரூ. 96,777 கோடியும், தகவல் தொடர்பு துறைக்கு ரூ. 95,298 கோடியும், சமூக நலத்துறைக்கு ரூ. 60,052 கோடியும், அறிவியல் வளர்ச்சித்துறைக்கு ரூ. 55,679 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் ஜவுளித்துறைக்கு மொத்தமாக ரூ.5,272 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.635 கோடி என்பது டெக்னாலஜியை மேம்படுத்தும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது. இதனால் நம் நாட்டில் ஜவுளித்துறையை மேம்படுத்தும் நோக்கில் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த எதிர்பார்ப்பு என்பது பூர்த்தியாகவில்லை என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications