ஆளுநராக மாஜி நீதிபதி நசீர்-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்து ஆளுநர்களான அந்த 2 பேரும் தமிழ்நாடும்!
உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த பாத்திமா பீவி, முன்னாள் தலைமை நீதிபதி சதாசிம் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்கள்.
டெல்லி: உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பணி ஓய்வு பெற்ற அப்துல் நசீர் இப்போது மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அப்துல் நசீருக்கு முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்து ஆளுநராக பதவி பெற்றவர்கள் பாத்திமா பீவி மற்றும் சதாசிவம்.
ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். இதில் ஆந்திரப் பிரதேச ஆளுநராக ஓய்வு பெற்ற நீதிபதி திரு.எஸ்.அப்துல் நசீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஆந்திராவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அப்துல் நசீர், நாட்டின் மிக முக்கியமான அயோத்தி வழக்கு, பணமதிப்பிழப்பு வழக்கு ஆகியவற்றை விசாரித்தவர். கர்நாடகாவை சேர்ந்த அப்துல் நசீர், ராமஜென்ம பூமி வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவர். பணமதிப்பிழப்பு வழக்கை அப்துல் நசீர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் பணமதிப்பிழப்பு சரியானது என தீர்ப்பளிக்கப்பட்டது. முத்தலாக் சட்டவிரோதம் என தீர்ப்பளிக்கப்பட்ட பெஞ்சிலும் நீதிபதி அப்துல் நசீர் இடம்பெற்றிருந்தார்.
1983-ம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற வழக்கறிஞர், 2003-ல் கர்நாடகா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி, 2017-ல் உச்சநீதிமன்ற நீதிபதியானவர் அப்துல் நசீர். கடந்த மாதம் 4-ந் தேதி அப்துல் நசீர் பணி ஓய்வு பெற்றார். அவர் பணி ஓய்வு பெற்ற அடுத்த மாதமே ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த பாத்திமா பீவி மற்றும் சதாசிவம் இருவரும் பணி ஓய்வுக்குப் பின்னர் 'அண்மையில்' ஆளுநர்களானவர்கள். கேரளாவை சேர்ந்த பாத்திமா பீவி, 1950-ல் வழக்கறிஞராகப் பணியை தொடங்கினார். 1984-ல் கர்நாடகா உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியானார். 1989-ம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நாட்டின் முதலாவது உச்சநீதிமன்ற பெண் நீதிபதி என்ற பெருமையைப் பெற்றவர் பாத்திமா பீவி. 1992-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்ற பாத்திமா பீவிக்கு 1997-ல் ஆளுநர் பதவி கிடைத்தது. பாத்திமாபீவி தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு இரு முக்கியமான சர்ச்சைகளில் சிக்கினார் பாத்திமா பீவி. சட்டசபை தேர்தலில் வெற்றி பெறாத ஜெயலலிதாவை முதல்வராக பதவி ஏற்க அழைத்தார் பாத்திமா பீவி. அப்போது மத்திய அரசே பாத்திமா பீவி மீது கடும் கோபம் கொண்டது. அதே ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அந்த கைது சம்பவத்தை நியாயப்படுத்தி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் பாத்திமா பீவி. இத்தகைய அதிருப்திகளால் மத்திய அரசால் ஆளுநர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டவர் பாத்திமா பீவி.
மற்றொருவர் தமிழ்நாட்டை சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம். 1973-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கியவர். 1996-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2007-ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார். 2013-2014-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்தார். பணி ஓய்வு பெற்ற உடனேயே மத்திய பாஜக அரசால், கேரளா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டவர் நீதிபதி சதாசிவம்.












Click it and Unblock the Notifications