நிதி ஆயோக் தலைவராக பிவிஆர்.சுப்ரமணியம் நியமனம்! யார் இவர்! இவருக்கும் காஷ்மீருக்கும் உள்ள தொடர்பு
நிதிய ஆயோக் அமைப்பிற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர் சுப்பிரமணியம், தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1987 பேட்ச் சத்தீஸ்கர் கேடார் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பரமேஸ்வரன் ஐயர் கடந்த 2022 ஜூலை மாதம் முதல் இருந்து வருகிறார். இதற்கிடையே அவர் சமீபத்தில் தான் உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
உலக வங்கிக்கு அவர் செல்வதால் நிதி ஆயோக் அமைப்பிற்கு புதிய தலைவரை நியமிக்கப்பட வேண்டி இருந்தது. இதற்கிடையே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம், இப்போது நிதி ஆயோக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி ஆயோக்
நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரியாக பிவிஆர் சுப்ரமணியம் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமெரிக்காவில் உள்ள உலக வங்கியில் நிர்வாக இயக்குநராக பரமேஸ்வரன் ஐயர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நிதி ஆயோக் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஓய்வுபற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியத்தை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அவர் பதவி ஏற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை பொறுப்பில் இருப்பார்" என்று கூறப்பட்டுள்ளது.

யார் இவர்
தற்போது நிதிய ஆயோக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பிவிஆர் சுப்ரமணியம் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.. 1987-பேட்ச் சத்தீஸ்கர் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான இவர், பொறியியல் பட்டம் பெற்றவர். மேலும், 56 வயதான அவர் லண்டன் பிசினஸ் ஸ்கூலில் நிர்வாகப் பட்டமும் பெற்றவர். 2004 முதல் 2008 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் தனிச் செயலாளராக அவர் இருந்தார்.

காஷ்மீர்
அதன் பிறகு உலக வங்கியில் பணியாற்றிய அவர், 2012இல் மீண்டும் பிரதமர் அலுவலகத்திற்குத் திரும்பினார். அதைத் தொடர்ந்து 2015 வரை சுப்ரமணியம் பிரதமர் அலுவலகத்திலேயே பணிபுரிந்தார்.. அதன் பிறகு அவர் மீண்டும் சத்தீஸ்கருக்குச் சென்றார்.. அங்கு முதன்மைச் செயலாளராக இருந்த அவர், பின்னர் கூடுதல் உள் துறை செயலாளர் ஆனார். அதைத் தொடர்ந்து 2018இல், அவர் ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

நிதி ஆயோக் தலைவர்
அவர் தலைமைச் செயலாளராக இருந்த போது தான், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் அறிவிப்பிற்கு முன்பு, அது குறித்த தகவல்களை அறிந்த சில அதிகாரிகளில் சுப்ரமணியமும் ஒருவர் என்று பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.. அதைத் தொடர்ந்து அவர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்தச் சூழலில் தான் இப்போது அவர் நிதிய ஆயோக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி ஆயோக்
நிதி ஆயோக் கடந்த 2015 ஜன.1ஆம் தேதி உருவாக்கப்பட்டது.. கடந்த 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போது இருந்த திட்ட கமிஷன் கலைக்கப்பட்டு அதற்குப் பதிலாக உருவாக்கப்பட்டது தான் நிதி ஆயோக் நிதி ஆயோக்கின் முதல் கூட்டம் 2015 பிப்ரவரி 8ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. நிதி ஆயோக் நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட பல விவகாரங்களில் அரசுக்குத் தேவையான அறிவுரைகளை வழங்கும்.












Click it and Unblock the Notifications