Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரோ + நாசா.. நாளை விண்வெளிக்கு பறக்கும் இந்திய விமானப்படை விமானி! யார் இந்த சுபான்ஷு சுக்லா!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: இஸ்ரோ-நாசா இணைந்து மேற்கொள்ளும் ஆக்சியம் மிஷனில் நாளை இந்திய விமானப்படை விமானியான சுபன்ஷு தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார். இந்தியா சார்பில் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இந்த சுபான்ஷு யார்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

விண்வெளி துறையில் இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது, இதற்கிடையே அமெரிக்கா நாசாவின் ஆக்சியம் மிஷன் 4ல் இஸ்ரோ கைகோர்த்துள்ளது. இந்த திட்டத்தில் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் முதல்முறையாகச் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்லவுள்ளார். விமானப்படை விமானியான சுபான்ஷு தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறார்.

Who Is Indian Astronaut Shubhanshu Shukla Life and Journey to Space

1984ல் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு பெற்றுள்ளார். இந்த ராக்கெட் இந்திய நேரப்படி நாளை மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு ஏவப்பட உள்ளது. இது இந்திய விண்வெளி துறைக்கும் மிக முக்கிய நாளாக உள்ளது. இந்தியா சார்பில் விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் இந்த சுபான்ஷு யார்.. இவரது பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

யார் இந்த சுபான்ஷு?

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் 1985ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி பிறந்தவர் குரூப் கேப்டன் சுபான்ஷு. குடும்பத்தில் இரு உடன் பிறந்தவர்கள் உள்ள நிலையில், இவர் தான் இளையவர். அவரது குடும்பத்தில் ஆயுதப்படையில் சேர்ந்த முதல் நபரும் இவர்தான். ஆரம்பத்தில் அவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாரானார்.

அவரது பெற்றோர், ஷம்பு தயாள் சுக்லா மற்றும் ஆஷா அவருக்குத் தொடக்கம் முதலே பக்க பலமாக இருந்துள்ளனர். சுபான்ஷு தேசியப் பாதுகாப்பு அகாடமியில் பயிற்சி முடித்து, 2006ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி இந்திய விமானப்படையில் போர் விமானியாக பணியில் சேர்ந்தார்.

தந்தை ஷம்பு தயாள்

அவரது தந்தை ஷம்பு தயாள் கூறுகையில், "2002-ல் 12-ம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தயாராகும்படி நான் கூறினேன். அவரும் அதற்குத் தான் தயாராக இருந்தார். அப்போது அவரது நண்பர் ஒருவர் தேசியப் பாதுகாப்பு அகாடமிக்கு விண்ணப்பிக்க இருந்தார். ஆனால் வயது உச்சவரம்பைத் தாண்டிவிட்டதால் சுபான்ஷுக்கு அந்த விண்ணப்பத்தைக் கொடுத்தார். அதை வைத்தே அவர் தேசியப் பாதுகாப்பு அகாடமிக்கு விண்ணப்பித்தார்" என்றார்.

மனைவி & குழந்தைகள்

சுபான்ஷு 2009-ல் பல் மருத்துவரான காம்னா சுக்லாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆறு வயது மகன் இருக்கிறார். அம்மா-மகன் இருவருமே சுபான்ஷு விண்வெளிக்குப் பறப்பதைக் காண புளோரிடா சென்றுள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளார். புஜ், ஜோத்பூர் மற்றும் ஸ்ரீநகர் எனப் பல பகுதிகளில் பணியாற்றி இருக்கிறார். கர்நாடக தலைநகர் பெங்களூரில் அவர் இருந்தபோதுதான் இந்த மிஷனுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

சுபான்ஷு கூச்ச சுபாவம் கொண்டவர் என சொல்ல முடியாது என்ற போதிலும் அவர் அனைவரிடமும் பேச மாட்டார் என்கிறார்கள் அவரது நண்பர்கள். அவர் அனைவரையும் மதிப்பார் என்ற போதிலும் சவுகரியமாக உணர்வோருடன் மட்டுமே பர்சனல் விஷயங்களைப் பகிர்ந்து கொள்வார் என்கிறார் அவரது சகோதரி சுச்சி.!

பயம் இல்லை

தந்தை ஷம்பு தயாள் மேலும் கூறுகையில், "அவருக்கு நெருங்கிய நண்பர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் வீட்டில் தான் இருப்பார். பொருட்களை வாங்க கடைக்குக் கூடப் போக மாட்டார். எனவே சுற்றுவட்டாரத்தில் உள்ள பலருக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்றார். பயம் இல்லை என்றாலும் விண்வெளிக்குச் செல்லும் தேதி நெருங்குவதால் ஒருவித படபடப்பு இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

தனது மகன் குறித்துப் பெருமைப்பட்ட அவரது தாயார் ஆஷா, "அவர் பாதுகாப்புப் படையில் சேர விரும்பியதாகச் சொன்னபோது ஆரம்பத்தில் நாங்கள் பயந்தோம். ஆனால், சேர்ந்து வெற்றிகரமாக இருந்தார். பின்னர் அவர் விண்வெளி வீரராகப் பயிற்சி பெற ரஷ்யா செல்வதாகச் சொல்லிய போதும் நாங்கள் கவலைப்பட்டோம். ஏனென்றால் அவர் எப்போதுமே தனியாக எங்கும் சென்றதில்லை. இருப்பினும், அவர் எல்லா சவால்களையும் வெற்றிகரமாகக் கையாண்டார்" என்றார்.

சுபான்ஷுவின் பெற்றோரும் புளோரிடா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவரது தாயார் ஆஷாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தினசரி வீடியோ கால் மூலமாக மட்டுமே மகனுடன் பேசி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+