யார் இந்த நந்தன் நீலகேனி? ஆதார் திட்டத்தின் மூளை.. பிரதமர் மோடி அமைத்துள்ள புதிய குழுவின் தலைவர்!
டெல்லி: தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலகப்புகழ் பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நீலகேனி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியாவில் ஆதார் அடையாள அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டதில் பெரும்பங்கு வகித்தவர் நந்தன் நீலகேனி.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நீலகேனி, பல்வேறு காலகட்டங்களில் இந்திய அரசுடன் இணைந்து செயலாற்றியுள்ளார். இந்நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த நந்தன் நீலகேனி?
இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபரான நந்தன் நீலகேனி, புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். இந்தியாவின் ஆதார் திட்டத்தின் தந்தை என்று இவர் அழைக்கப்படுகிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த நந்தன் நீலகேனி, மும்பை ஐஐடியில் பொறியியல் படித்தவர். தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். 1981 ஆம் ஆண்டு, நாராயணமூர்த்தி உள்ளிட்ட 6 பேருடன் இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இது பின்னாளில் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்தது. 2002 ஆம் ஆண்டு முதல் 2007 வரை இன்போசிஸ் நிறுவனத்தின் சி.இ.ஓவாக பணியாற்றினார்.
ஆதார் அட்டைக்குப் பின்னால்
இன்றைய இந்தியர்களின் மிக முக்கிய அடையாள ஆவணமாக விளங்கக்கூடிய ஆதார் அட்டை திட்டத்திற்கு பெரும்பங்காற்றியவர் நந்தன் நீலகேனி தான். UIDAI தலைவராக, உலகின் மிகப்பெரிய பயோமெட்ரிக் அடையாளத் திட்டமான ஆதார் திட்டத்தை உருவாக்கிச் செயல்படுத்தியவர் நந்தன் நிலகேனி.
மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆதார் அடையாள அட்டை திட்டம் கொண்டுவரப்பட்டபோது 2009 முதல் 2014 வரை ஆதார் ஆணையத்தின் (UIDAI) முதல் தலைவராக கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் செயல்பட்டார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூர் (தெற்கு) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக ஆதார் ஆணைய தலைவர் பதவியில் இருந்து விலகினார். அந்த மக்களவைத் தேர்தலில் நந்தன் நீலகேனி தோல்வியடைந்தார்.
நந்தன் நீலகேனியின் அறக்கட்டளை
இ-கவர்ன்மென்ட் ஃபவுண்டேஷனின் இணை நிறுவனராக, தொழில்நுட்பத்தின் மூலம் நகராட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான அமைப்பின் நோக்கத்தை வடிவமைப்பதில் நந்தன் நீலகேனி முக்கியப் பங்காற்றியுள்ளார். நீலகேனி இணைந்து நிறுவிய மற்றொரு அமைப்பான எக்ஸ்டெப் ஃபவுண்டேஷன், ஒரு டிஜிட்டல் தளம் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளின் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது 2006 ஆம் ஆண்டு நந்தன் நீலகேனிக்கு வழங்கப்பட்டது. டைம்ஸ் இதழ் உலகின் செல்வாக்கு மிக்க 100 மனிதர்கள் பட்டியலில் இவரையும் பட்டியலிட்டது.
நந்தன் நீலகேனி தனது மனைவி ரோகினி நீலகேனியுடன் இணைந்து தங்களின் சொத்துகளில் பாதியைச் சமூக நலனுக்காகத் தானமாக வழங்குவதாக 'The Giving Pledge' மூலம் உறுதியளித்துள்ளனர். மேலும் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான பல்வேறு அறக்கட்டளைகளையும் நடத்தி வருகின்றனர்.
தேர்வு சீர்திருத்தக் குழுத் தலைவர்
இந்நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி போராட்டமாக வெடித்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று, கல்வி தேர்வுகளில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி, நாட்டில் போட்டித் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடனும், அதிநவீன தொழில்நுட்பத்துடனும் நடத்துவதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடியால் நந்தன் நீலகேனி தலைமையில் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நந்தன் நீலகேனிக்கு உள்ள அனுபவமே, அவரது இந்த நியமனத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எதிர்காலத் தேர்வு சீர்திருத்தங்களில் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால் நந்தன் நீலகேனியை இந்த குழுவிற்கு தலைவராக நியமனம் செய்துள்ளார் பிரதமர் மோடி.


Click it and Unblock the Notifications
