“அதுல தான் ஸ்பெஷலிஸ்ட்டே”.. பெரும் தலைகளின் வெற்றிக்கு பின்னணி முகம்.. யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
டெல்லி: பாஜகவின் கோட்டையாகத் திகழ்ந்த பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர். பிரதமர் மோடி தொடங்கி, நிதிஷ் குமார், ஜெகன் மோகன் ரெட்டி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் என பலரது வெற்றிக்குப் பின்னணியில் இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்த பிரசாந்த் கிஷோருக்கு நேரடியாக இப்போது முதல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறது.
இந்திய தேர்தலில், 'தேர்தல் வியூக வகுப்பாளர்' என்ற பெயரை பரவலாக்கிய பெருமை பிரசாந்த் கிஷோரையே சாரும். இன்று பலரும் தேர்தல் வியூக நிபுணர்களாக உள்ள நிலையில், "OG - Election Strategist" பிரசாந்த் கிஷோர் இன்றைக்கு எம்.எல்.ஏ ஆகியுள்ளார்.

யார் இந்த பிரசாந்த் கிஷோர்?
'PK' என்று அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரின் பூர்வீகம் பீகார் மாநிலம் ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள சாசரம். வசதியான குடும்பத்தில் பிறந்த இவர், பொறியியல் படித்துவிட்டு வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். ஐ.நா சபையின் உலக சுகாதார நிறுவனம் பல நாடுகளில் சுகாதாரத் திட்டங்களைச் செயல்படுத்தி வந்தது. அந்தப் பணிகளை ஒருங்கிணைக்கும் நபர்களில் ஒருவராகச் செயல்பட்டு வந்தார் பிரசாந்த் கிஷோர்.
ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் எம்.பியாக இருந்தபோது அரசு மருத்துமவனை ஒன்றைக் கட்டினார். அந்த மருத்துமனைப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மருத்துவமனைச் செயல்பாட்டைக் கண்காணிக்கவும் ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டார் கிஷோர். அப்படித்தான் இந்திய அரசியலில் பிரசாந்த் கிஷோரின் அறிமுகம் நிகழ்ந்தது.
மோடியுடன் பிரசாந்த் கிஷோர்
ஒருகட்டத்தில் ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட மோதலால் அவரிடமிருந்து வெளியேறிய பிரசாந்த் கிஷோர், குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைச் சந்தித்தார். அப்போது,வெளிநாடுகளில் தேர்தல் உத்திகளை வகுப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் பணிகளைப் பற்றி மோடிக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு தனது பிரச்சார வியூகங்கள் மூலம் உதவினார்.
பிரசாந்த் கிஷோரின் ஐடியாவால் கவரப்பட்ட மோடி, அதனை பாஜக தலைமையிடம் 'பாஸ்' செய்தார். இதையடுத்து சி.ஏ.ஜி என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அதன் இயக்குநராக பிரசாந்த் கிஷோர் நியமனம் செய்யப்பட்டார். அவருக்குக் கீழ் பிரச்சார உத்திகளை வகுக்கும் ஒரு பெரும் படை உருவாக்கப்பட்டது. பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டு, அவரது 'குஜராத் சாதனைகளை' நாடு முழுமைக்கும் கொண்டு சேர்த்தது பிரசாந்த் கிஷோர் தலைமையிலான சி.ஏ.ஜி.
ஐ-பேக் நிறுவனம்
பின்னர், மோடி தலைமையில் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், பாஜகவில் இருந்து சில காரணங்களால் வெளியேற்றப்பட்டார் பி.கே. அதன்பிறகு I-PAC நிறுவனத்தை தொடங்கினார். 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகத் தேர்தல் பணியாற்றினார். அந்தத் தேர்தலில் நிதிஷ் குமார் வெற்றி பெற, கிஷோரின் மாஸ்டர் பிளானால் கிடைத்த வெற்றி இது என்று செய்திகள் பரவின. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவர் பதவியும் கிஷோரை தேடிவந்தது.
அதைத்தொடர்ந்து, குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். ஆனால் அதில் பாஜகவே வென்றது. உ.பி தேர்தலில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணிக்காகப் பணியாற்றினார். அதிலும் தோல்வியே கிடைத்தது. எனினும், தோல்விகளின் போதெல்லாம் பிகே பெயர் பெரிதாக அடிபடாது. அதுதான் அவரது ஸ்ட்ராட்டஜி.
வெற்றிக்குப் பின்னணியில் பிகே
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்காக பணியாற்றினார். அந்த தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வேலை செய்தார். பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் அம்ரீந்தர் சிங்குக்காகப் பணியாற்றினார் பிரசாந்த் கிஷோர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற மீண்டும் கிஷோர் பெயர் நாடெங்கும் பரவியது.
அதன்பிறகு தென்னிந்தியாவிலும் தனது பெயரைப் பொறிக்கத் தொடங்கினார். ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் பணியாற்ற அழைக்கப்பட்டார். பி.கேவின் பிரச்சார உத்திகளின் உதவியுடன் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றார் ஜெகன் மோகன் ரெட்டி.
திமுகவுக்கு தேர்தல் வியூகம்
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் பணியாற்ற ஒப்பந்தம் போட்டார் பி.கே. அங்கும் மம்தாவுக்கு மிகப்பெரிய வெற்றி. தமிழ்நாட்டில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுகவுக்கு தேர்தல் வியூகப் பணிகளை வகுத்தது கிஷோரின் ஐ-பேக் நிறுவனம். இங்கும் மிகப்பெரிய வெற்றி.
விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோது, பிரசாந்த் கிஷோர், கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் பணிக்காக அழைக்கப்பட்டிருந்தார். கட்சியின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழாவிலும் பி.கே கலந்து கொண்டிருந்தார். ஆனால், அதன்பிறகு தவெகவுக்கான வியூக வகுப்பு பணிகளை ஜான் ஆரோக்கியசாமியே மேற்கொண்டார்.
ஜன் சுராஜ் கட்சி
இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு தனியாக அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர் தனது கட்சிக்கு 'ஜன் சுராஜ் பார்ட்டி' என பெயர் வைத்தார். மாநிலம் தழுவிய பாதயாத்திரையாகத் தொடங்கிய இந்த இயக்கம், அடிமட்ட மக்களின் பங்களிப்பு, நலத்திட்ட அடிப்படையிலான வாக்குறுதிகள் மற்றும் புதிய அரசியல் கலாச்சாரம் என்ற பிரசாந்த் கிஷோரின் முழக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டாஅலும் கடந்த ஆண்டு நடந்த பீகார் சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
எனினும், இப்போது நடந்த பாங்கிபூர் இடைத்தேர்தலில் தானே வேட்பாளராக களத்தில் இறங்கினார் பிரசாந்த் கிஷோர். பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சியின் தலைவரான பிரசாந்த் கிஷோர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், ஜன் சுராஜ் கட்சி சார்பாக முதல் மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றம் செல்கிறார் பிரசாந்த் கிஷோர்.


Click it and Unblock the Notifications
