நீட் பேப்பர் லீக் பின்னணியில் "சால்வர் கேங்”.. தேர்வு முகமைகளுக்கு சிம்ம சொப்பனம்.. யார் இந்த ரவி?
டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் லீக் ஆன விவகாரத்தில், "சால்வர் கேங்" ரவி அட்ரி கைது செய்யப்பட்டுள்ளார். தேர்வு முகமைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்த ரவி அட்ரி யார்?
கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நாடு முழுவதும் 4,750 மையங்களில் சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வு எழுதினர். எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்காக இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டது. நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

குறிப்பாக 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த பல மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்றது, 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது என பல்வேறு புகார்கள் எழுந்தன.
பீகாரில் லீக் ஆன கொஸ்டின் பேப்பர்: பீகாரில் நீட் தேர்வின் வினாத்தாள் லீக் ஆன விவகாரம் பூதாகரமாக வெடித்தது. பாட்னாவில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் தேர்வு எழுதிய 12 மாணவர்களுக்கு, முன்கூட்டியே வினாத்தாள் கசிந்து உள்ளதாகவும் இதற்காக பெரும் தொகை கைமாறி உள்ளதும் அம்பலமானது.
பீகாரில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 4 பேர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக 19 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவி அட்ரியின் தொடர்பு தெரியவந்தது.
ரவி அட்ரி கைது: இந்நிலையில் பீகார் போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் ரவி அட்ரியை உ.பி சிறப்பு அதிரடிப்படை போலீசார் நேற்று (ஜூன் 22) கைது செய்தனர். நொய்டா அருகே உள்ள நீம்கா கிராமத்தில் பதுங்கியிருந்த ரவி அட்ரியை உ.பி. சிறப்பு படை போலீசார் கைது செய்தனர்.
பீகாரில் நீட் வினாத்தாள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ரவி அட்ரியே சதி கும்பலின் தலைவனாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் இருந்து நீட் வினாத்தாளை கசியவிட்டதும், ஜார்க்கண்ட் வழியாக பீகாருக்கு அனுப்பி வைத்ததும் ரவி அட்ரி தலைமையிலான கும்பல் தான் எனக் கூறப்படுகிறது.
யார் இந்த ரவி அட்ரி?: ஏற்கனவே உத்தர பிரதேச மாநிலத்தில் காவலர் தேர்வு வினாத்தாள் கசியவிட்ட விவகாரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டவர் ரவி அட்ரி. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக தேர்வு முறைகேடுகளில் ரவி அட்ரி ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 2012 இல் மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத் தாள் மற்றும் 2015 இல் AIIMS பிஜி வினாத்தாள் தாள் ஆகியவற்றையும் லீக் செய்தவர் ரவி அத்ரி. இதற்காக பல முறை அவரது கூட்டாளிகளோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சால்வர் கேங்: பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களுக்கு தேர்வு வினாத்தாளை லீக் செய்வதில் ரவி அத்ரிக்கு என ஒரு ஸ்டைல் உண்டு. பணம் கொடுத்த மாணவர்களை தேர்வுக்கு முந்தைய நாளில் ஒரே இடத்திற்கு வரச் செய்து ஒரு ஹாலில் தங்க வைத்து அங்கு, வினாத் தாளை கொடுத்து, அதன் விடைகளையும் தயார் செய்து கொடுத்து, தேர்வுக்கு ரெடி செய்வாராம். இதனால் இந்த குழு, "சால்வர் கேங்" என அழைக்கப்படுகிறது.
பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், பாட்னாவில் உள்ள ஒரு ஆண்கள் விடுதியில் சுமார் 25 மாணவர்கள் தங்க வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, அங்கு அவர்களுக்கு தேர்வுக்கு முந்தைய நாள் கசிந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த நூலின் வழியாகவே ரவி அத்ரி சிக்கியுள்ளார்.
மருத்துவ படிப்பை கைவிட்டவர்: 2007 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்றவர் ரவி அட்ரி. 2012 இல் அவர் தேர்ச்சி பெற்று, பிஜிஐஎம்எஸ் ரோஹ்தக்கில் அட்மிஷன் பெற்றார். ஆனாலும், நான்காம் ஆண்டு தேர்வை எழுதச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.
அதற்குள், தேர்வு வினாத்தாளை லீக் செய்யும் மாஃபியாவுக்குள் நுழைந்துள்ளார் ரவி அட்ரி. நான் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் எந்தப் படிப்பையும் படிக்க வைக்கலாம் என்ற எண்ணமே அவரை மருத்துவப் படிப்பில் இருந்து வெளியேற்றி 'கொஸ்டின் பேப்பர் லீக்' மாபியா ஆக்கியுள்ளது.
ஆள் மாறாட்டம்: நீட் வினாத்தாள் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத்தேர்வு - ஆட்சேர்க்கை தேர்வு வினாத்தாள் கசிவு மட்டுமின்றி ஆள் மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளிலும் ரவி அட்ரிக்கு தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைக்கு நீட் இளநிலை தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளால் தேசிய தேர்வு முகமை தலைவர் தூக்கி அடிக்கப்பட்டுள்ளார். மேலும், நீட் முதுநிலை தேர்வும் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications