தலைக்கு மேலே சுற்றும் ஒற்றன்! இந்திய விண்வெளியைக் காக்க லடாக்கில் அமைக்கப்பட்ட ரகசிய ஏஐ கண்
லடாக்: 1998-ஆம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுசக்தி சோதனைகளை மேற்கொண்டபோது, அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்களின் கண்களில் படாமல் மறைந்து செயல்படுவதுதான் நமது விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. வானில் எந்த நேரத்தில் எந்த நாட்டின் செயற்கைக்கோள் நமது தலைக்கு மேலே பறக்கிறது என்பதை முன்கூட்டியே கணக்கிட்டுதான் பணிகளைச் செய்தனர். இன்று விண்வெளி சூழல் முற்றிலும் மாறிவிட்டது. உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
நமது தலைக்கு மேல் விண்வெளியில் யார் பயணிக்கிறார்கள், என்ன பயணிக்கிறது.. அவர்கள் எப்போது நம் மேல் மீண்டும் வருவார்கள், நமது ராணுவ அமைப்புகளைக் கண்காணிக்கிறார்களா என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மிக அவசியமாகிறது.

இதற்காக, பெங்களூரைச் சேர்ந்த 'திகந்தரா' என்ற இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப் நிறுவனம், 'மொசைக்' என்ற முற்றிலும் தானியங்கி முறையில் இயங்க கூடிய விண்வெளி கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி லடாக்கில் நிறுவியுள்ளது.
வானத்தை ஸ்கேன் செய்யும் நவீன கருவி
பொதுவாக விண்வெளியை நோக்கும் பாரம்பரிய தொலைநோக்கிகளுக்கு ஒரு வழிகாட்டுதல் தேவைப்படும். ஒரு குறிப்பிட்ட செயற்கைக்கோளைப் பார்க்க வேண்டும் என்றால், மனிதர்கள் அதற்கான நேரத்தையும் திசையையும் முன்கூட்டியே திட்டமிட்டுத் தொலைநோக்கியைத் திருப்ப வேண்டும்.
ஆனால் 'மொசைக்' முற்றிலும் மாறுபட்டது. இது வானத்தின் ஒரு பகுதியைத் தொடர்ந்து நோட்டமிடும் ஒரு தானியங்கி ஸ்கேனர் போல இயங்குகிறது. அதாவது பூமியை நோட்டமிடாமல்.. வானத்தை நோட்டமிடும். வானத்தில் என்ன இருக்கிறது என்று கண்காணிக்கும். இதற்கு மனிதர்களின் கட்டளைகள் எதுவும் தேவையில்லை. வானத்தில் இயங்கத் தொடங்கியதும், அதன் பார்வையில் படும் நட்சத்திரங்கள், விண்கழிவுகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தானே கண்டறிந்து தனித்தனியாகப் பிரித்து அடையாளம் காண்கிறது. இதற்காக இதில் நவீன செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு இரவில் மட்டுமே இந்த ஒற்றைக் கருவியால் 400 முதல் 500-க்கும் மேற்பட்ட விண்வெளிப் பொருட்களைத் துல்லியமாகக் கண்காணித்துப் பதிவு செய்ய முடியும்.
இந்தியாவின் எல்லை தாண்டிய கண்காணிப்பு
பூமி சுழல்வதால், இந்தியாவின் வான்வெளியை இந்தியாவிற்குள் இருந்து மட்டுமே தொடர்ந்து கண்காணிக்க முடியாது. லடாக்கைக் கடக்கும் ஒரு உளவு செயற்கைக்கோள், சில மணி நேரங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா அல்லது சிலி நாட்டின் மேலே பறந்திருக்கலாம். அதன் பாதையைத் தவறவிடாமல் கணிக்க உலகளாவிய கண்காணிப்பு தேவை.
இதற்காக திகந்தரா நிறுவனம் இந்தியா தவிர்த்து சிலி, நமீபியா, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மற்றும் ஹவாய் போன்ற தெளிவான வானம் உள்ள பகுதிகளில் தனது கண்காணிப்பு மையங்களை அமைத்து வருகிறது.
பொதுப்பயன்பாடுகள்
விண்வெளியில் மோதல்களைத் தவிர்ப்பது மற்றும் விண்கழிவுகளைக் கண்காணிப்பது போன்ற பொதுப்பயன்பாடுகளுக்கு இது பயன்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது:
மற்ற வெளிநாடுகளின் விண்வெளித் தரவுகளை மட்டுமே நம்பியிராமல், இந்தியா தனது சொந்தக் கண்காணிப்புத் தகவல்களைப் பெற இது வழிவகுக்கிறது. லாஸ்ட் இன் ஸ்பேஸ் என்ற தொழில்நுட்பம் மூலம், ஜிபிஎஸ் சிக்னல் முடக்கப்பட்டாலும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்தே தனது இருப்பிடத்தைத் தானே கண்டறியும் திறன் இதற்கு உண்டு.
எதிரி நாட்டின் உளவு செயற்கைக்கோள்கள் முக்கிய இந்திய பகுதிகளைப் படம் பிடிப்பதைத் தற்காலிகமாகத் தடுக்கும் லேசர் டாஸ்லிங் தொழில்நுட்ப சோதனைகளையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
விண்வெளியில் ராக்கெட்டுகளையும் செயற்கைக்கோள்களையும் அனுப்புவது மட்டுமே ஒரு நாட்டின் பலம் என்ற காலம் மாறிவிட்டது. அங்கே சுற்றிக்கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான விண்கலங்கள் என்ன செய்கின்றன என்பதைக் கண்காணித்து எச்சரிக்கும் திறன் இப்போது மிக முக்கியம். இந்தியாவின் விண்வெளிப் பாதுகாப்பில் தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்களிப்போடு 'மொசைக்' ஒரு புதிய மைல்கல்லாக உருவெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
