நாடு முழுக்க வெடித்த மாணவர் போராட்டம்.. தாங்கிப் பிடிக்கும் 'நிழல்' மனிதர்கள் யார்? மோடிக்கு பிரஷர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரு போராட்டம் உண்மையில் யாருக்குச் சொந்தமானது.. அது தினம் தினம் வெற்றிகரமாக நடப்பதற்கு யார் காரணம்? மேடையில் நின்று முழக்கமிடுபவர்களா? திரண்டு வரும் கூட்டமா? அல்லது யாருக்கும் தெரியாமல் பின்னணியில் நின்று அந்தப் போராட்டத்தைச் தங்கு தடையின்றி இயங்க வைக்கும் எளிய மனிதர்களா?

டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் காக்ரோச் ஜனதா கட்சி போராட்டக் களத்தைப் பார்த்தால், இதற்கான பதில் மிகத் தெளிவாகக் கிடைக்கும்.

NEET

அந்த மேடையும் ஒலிபெருக்கியும் அங்கு இருக்கும் ஒரு சில தலைவர்களுக்குச் சொந்தமாக இருக்கலாம். ஆனால், உணவு, குடிநீர், மருத்துவ உதவி, தூய்மைப் பணி என அடிப்படைத் தேவைகளைத் தடையின்றி வழங்கும் உழைப்பாளர்களின் கரங்கள் இல்லாமல் எந்தவொரு போராட்டமும் ஒரு நாளை கூடக் கடக்க முடியாது.

ஒவ்வொரு நாளும் அந்த போராட்டம் தடையின்றி நடப்பதை நாடு முழுக்க இருக்கும் முகம் தெரியாத மக்கள் உறுதி செய்துவருகிறார்கள். ஆம்.. மாணவர்கள் எப்படியாவது வென்று விட வேண்டும் என்பதற்காக முகம் தெரியாத பெரும் நிழல் மனிதர்களின் கூட்டம் வேலை செய்து கொண்டு இருக்கிறது.

உணவு சுமந்து வரும் டெலிவரி ஊழியர்கள்

நாடு முழுவதிலும் உள்ள மக்கள், தாங்கள் நேரில் வர முடியாவிட்டாலும், ஆன்லைன் மூலம் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்களை ஆர்டர் செய்து ஜந்தர் மந்தரில் இருக்கும் போராட்டக்காரர்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

கடும் வெயிலிலும், மழையிலும், குளிரிலும் பல நாட்களாக வீடுகளுக்குச் செல்லாமல் களத்தில் நிற்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு இந்த உணவுப் பொருட்களே பசியாற்றுகின்றன

நாங்கள் போராட்டம் நடக்கும் இடத்திற்கு நேரில் வர இயலாவிட்டாலும், களத்தில் இருப்பவர்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதால் உணவனுப்புகிறோம் என்ற எண்ணத்தில் இவர்கள் உணவு அனுப்புகிறார்கள்.

இவற்றை வாங்கி, சரியான நபர்களுக்குப் பிரித்துக் கொடுக்கும் வேலையை உணவு டெலிவரி ஊழியர்களும் தன்னார்வலர்களும் செய்கிறார்கள். அருகிலுள்ள மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்ட சூழலில், போராட்டக்காரர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்காமல் மிகக் குறைந்த கட்டணத்தில் சேவை செய்த ஆட்டோ ஓட்டுநர்களின் மனிதநேயமும் இங்கு குறிப்பிடத்தக்கது.

குப்பைகளை அள்ளும் இளைஞர்கள்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் சேரும் குப்பைகள் மிகப்பெரிய சவால். உணவுப் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், பீட்சா பெட்டிகள் எனச் சாலை ஓரங்களில் சேர்ந்த குப்பைகளைக் கண்டு முதலில் முகம் சுளித்து கடந்து போகாமல் அதை இளைஞர்களே சுத்தம் செய்கிறார்கள்.

வசதியான குடும்பங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், கைகளில் குப்பைப் பைகளையும் துடைப்பங்களையும் ஏந்திச் சாலைகளைச் சுத்தப்படுத்துகின்றனர்.

மருத்துவ முகாம்கள்

போராட்டக் களத்தின் பல பகுதிகளில் தற்காலிக மருத்துவ முகாம்கள் இயங்கி வருகின்றன. எலும்பியல் வல்லுநர்கள், பொது மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள் எனப் பலரும் தங்கள் ஓய்வு நேரத்தை ஒதுக்கி இங்குச் சேவை செய்கிறார்கள்.

கடந்த ஜூலை 20 அன்று பேரணியின் போது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டு, தடி அடி நடத்தப்பட்டபோது, காயமடைந்த போராட்டக்காரர்களுக்கு உடனடி சிகிச்சை அளித்தது இந்த மருத்துவர்களே. போராட்டக்காரர்கள் மட்டுமின்றி, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் சாதாரண உடல்நலக் குறைபாட்டுடன் வந்தாலும், இன்முகத்தோடு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கின்றனர்.

தன்னார்வலர்கள்

நெரிசலைக் கட்டுப்படுத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்க தன்னார்வலர்கள் பலர் அங்கே களமிறங்கி உள்ளனர். இவை அனைத்தையும் விட நெகிழ்ச்சியூட்டும் சில சிறிய மனிதநேயச் செயல்களும் இங்கு அரங்கேறுகின்றன:

வெயிலின் தாக்கம் தாங்காமல், தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் தெரியாத நபருக்குத் தொடர்ந்து விசிறியால் விசிறிவிடும் மனிதர்கள். ரோஜா பூக்களைக் கையில் ஏந்தி, போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளோடு வந்தால், அவர்களிடம் இந்த ரோஜாவைக் கொடுத்து நாங்கள் அன்போடு வந்திருக்கிறோம் என்று சொல்லுங்கள் எனக் கூறி பூக்களை விநியோகிக்கும் நபர்.

அங்கே இருக்கும் எல்லோருக்கும் குடிநீர் மற்றும் பிஸ்கட்களைக் கொடுத்து, "சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என வற்புறுத்தும் அன்பான மக்கள் என்று இந்த போராட்டத்தை பின்னின்று நடந்தும் மக்கள் ஏராளம். வெளியே நாம் பார்ப்பது ஒரு சில பேர் என்றால் இந்த போராட்டத்தை தாங்கி நடத்தும் மக்கள் கூட்டம் அதை விட பெரியது!

இவர்கள் யாரும் செய்தித்தாள்களின் கவர் பேஜிலோ, தொலைக்காட்சியின் லைவிலோ வரப்போவதில்லை. ஆனால், ஒரு போராட்டம் என்பது வெறும் கொள்கைகளாலும் முழக்கங்களாலும் மட்டும் நடப்பது இல்லை.. அது பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களின் அன்பாலும்தான் உயிர்ப்புடன் இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+