Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி பாஜக முதல்வர் யார்? பட்டியலில் இருக்கும் ‛டாப்’ தலைவர்கள் இவர்கள் தான்.. முழு பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மியை வீழ்த்தி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில் தான் பாஜக சார்பில் டெல்லியின் அடுத்த முதல்வராக மாறப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு நடுவே முதல்வர் ரேஸில் உள்ள சில முக்கிய தலைவர்களின் பெயர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அவர்கள் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

கடந்த 5ம் தேதி ஒரே கட்டமாக டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியை பாஜகவிடம் பறிகொடுத்துள்ளது.

delhi election 2025 delhi election result 2025 delhi cm 2025 2025

ஓட்டு எண்ணிக்கை முடிவில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களில் பாஜகவும், 22 தொகுதிகளில் ஆம்ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. டெல்லியில் தனித்து ஆட்சியை பிடிக்க தேவையான பெரும்பான்மைக்கு 36 தொகுதிகளில் வென்றால் போதும். தற்போது பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இதன்மூலம் 27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது. அதோடு பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஆம் ஆத்மியை பாஜக காலி செய்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த கேள்வி என்பது எழுந்துள்ளது. டெல்லியில் பாஜக யாரை முதல்வராக தேர்வு செய்யும்? என்பது தான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த பட்டியலில் சில முக்கிய தலைவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் யார் ? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

பர்வேஷ் வர்மா: புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் இந்த பர்வேஷ் வர்மா. இவர் டெல்லி முன்னாள் முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன் ஆவார். சாஹிப் சிங் வர்மா டெல்லி முதல்வராக 1996 முதல் 1998 வரை இருந்தார். அவரது மகன் பர்வேஷ் வர்மா பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஹிந்து ஜாட் குடும்பத்தை சேர்ந்தவர். மேற்கு டெல்லி லோக்சபா தொகுதி 2014, 2019 தேர்தலில் வென்று 2 முறை எம்பியாக இருந்தார். இவர் அரவிந்த் கெஜ்ரிவாலை இப்போது வீழ்த்தி உள்ளார். டெல்லி முதல்வர் ரேஸில் இவரது பெயர் முதலிடத்தில் உள்ளது.

விஜயேந்தர் குப்தா: பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இவர் உள்ளார். கடந்த 2015, 2020 சட்டசபை தேர்தல்களில் ரோஹினி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டெல்லியின் முன்னாள் பாஜக தலைவராக செயல்பட்டவர் என்பதோடு, டெல்லி சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவரது பெயரும் முதல்வர் ரேஸில் உள்ளது.

ரேகா குப்தா - ஷிகா ராய்: ஒருவேளையில் டெல்லியில் பெண் ஒருவரை முதல்வராக்கலாம் என்று பாஜக நினைத்தால் மேலிடத்தின் ரேகா குப்தா, ஷிகா ராய் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்யலாம். இதில் ரேகா குப்தா டெல்லி பல்கலைக்கழகத்தின் யூனியன் தலைவராக இருந்தவர். டெல்லியில் கவுன்சிலராக இருந்தவர். தற்போது சாலிமர் பாக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் ஷிகா ராயை எடுத்து கொண்டால் அவர் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சவுரவ் பரத்வாஜை எதிர்த்து களமிறங்கி வெற்றி பெற்றுள்ளார். பெண் ஒருவரை முதல்வராக்க பாஜக மேலிடம் நினைத்தால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

மன்ஜிந்தர் சிங் சிர்சா: சீக்கியரான இவுர் ரஜோரி கார்டன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இதில் ஒருமுறை அகாலிதளம் கட்சி சார்பில் வெற்றி பெற்றிருந்தார். அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவர் சுக்பீர் பதாலுடன் நெருக்கமாக இருப்பவர். இவருக்கு சீக்கியர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இதனால் மன்ஜிந்தர் சிங் சிர்சாவும் முதல்வர் ரேஸில் உள்ளார்.

ஹரிஷ் குரானா: இவர் டெல்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானாவின் மகன் ஆவார். மதன் லால் குரானா டெல்லியில் 1993 முதல் 1996 வரை முதல்வராக இருந்தார். அவரது மகன் ஹரிஷ் குரானா மோதி நகர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.. பாஜகவில் டெல்லி செயலாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு அமைப்பு ரீதியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த அனுபவம் கொண்டவர். பாஜகவின் மக்கள் தொடர்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும், டெல்லி பாஜக செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டுள்ளார். இதனால் ஹரிஷ் குரானாவுக்கும் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரவீந்தர் சிங் நேகி: பத்பார்கஞ்ச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டுள்ளார். உத்தரகாண்டை சேர்ந்த இவர் டெல்லிக்கு இடம்பெயர்ந்து வசித்து வருகிறார். இதற்கு முன்பு பத்பார்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு ஆம் ஆத்மி மாஜி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவிடம் தோற்றார். இந்த முறை பத்பார்கஞ்ச் தொகுதியில் களமிறங்கி ஆம்ஆத்மி வேட்பாளர் அவத் ஜாவை வீழ்த்தி உள்ளார். இவர் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக இருக்கிறார். அதோடு டெல்லியில் அதிக அளவில் உள்ள பூர்வாஞ்சல் மக்களின் ஓட்டுகளை கவரும் வகையில் பணி செய்தார். இதனால் ரவீந்தர் சிங் நேகிக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

கபில் மிஸ்ரா: டெல்லியில் செல்வாக்கு பெற்ற இந்துத்துவா தலைவராக அறியப்படுவர் தான் கபில் மிஸ்ரா. ஆம்ஆத்மி கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் அமைச்சராகவும் செயல்பட்டவர். தற்போது டெல்லி பாஜக துணை தலைவராக செயல்பட்டு வருகிறார். காரவால் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் பிரசாரத்தின்போது ஆம் ஆத்மிக்கு எதிராக ஆக்ரோஷமாக பிரசாரம் செய்தார். இதனால் கபில் மிஸ்ராவின் பெயரும் இந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.

கைலாஷ் கெலாட்: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்தவர் கைலாஷ் கெலாட். இவர் பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதற்கு முன்பு நாஜப்கார்க் தொகுதியில் 2 முறை வென்ற கைலாஷ் கெலாட் இந்த முறை பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.பிற கட்சியில் இருந்து வந்த மூத்த தலைவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்றால் பாஜக மேலிடம் கைலாஷ் கெலாட்டை தேர்வு செய்யலாம்.

துஷ்யந்த் கவுதம்: பாஜகவின் மூத்த தலைவராக துஷ்யந்த் கவுதம் உள்ளார். ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். பாஜகவின் தேசிய பொது செயலாளராக செயல்பட்டு வருகிறார். டெல்லி சட்டசபை தேர்தலில் கரோல் பாக் தொகுதியில் 3 முறை ஆம் ஆத்மி சார்பில் எம்எல்ஏவாக உள்ள விசேஷ் ரவியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்டுட்டார். இவர் தற்போது தோற்றுவிட்டார். ஒருவேளை தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி வழங்க நினைத்தால் துஷ்யந்த் கவுதமுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+