கொரோனா தடுப்பூசி பெற எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்? தடுப்பூசி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்
டெல்லி: புனேவைச் சேர்ந்த சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் மற்றும் ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு இன்று தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.
ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் 70.42% ஆக உள்ளதாகத் தெரிவித்துள்ள தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பின் சோமணி, பாரத் பயோடெக்கின் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்றும் பாதுகாப்பற்ற எந்த தடுப்பூசிக்கும் ஒப்புதல் அளிக்க மாட்டோம் என்றும் கூறினார்.
இதன் காரணமாக இன்னும் நாட்களில் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பு மருந்து குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து தகவல்கள்:

முதலில் யாருக்கு தடுப்பூசி
நாட்டிலுள்ள 120 கோடி மக்களுக்கு ஐந்து கட்டங்களாகத் தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் முதலில் அதிக ஆபத்தில் உள்ளவர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் தடுப்பூசி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

முதல்கட்டம்
கொரோனா தடுப்பூசி நிர்வாகம் குறித்த தேசிய நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் ஒரு கோடி சுகாதார ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்கப்படும். இந்தப் பிரிவு மேலும் முன்கள சுகாதார பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவை தொழிலாளர்கள், செவிலியர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள், மருத்துவ அதிகாரிகள், துணை மருத்துவ ஊழியர்கள், உதவி ஊழியர்கள் மற்றும் மருத்து மாணவர்கள் என்று பிரிக்கப்படுவார்கள். இவர்களுக்கே முதலில் தடுப்பூசி வழங்கப்படும்.

முன்களப் பணியாளர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும்
அடுத்தகட்டமாக மாநில மற்றும் மத்திய காவல் துறை, முன்கள தொழிலாளர்கள், ஆயுதப்படைகள், பேரிடர் மேலாண்மை வீரர்கள், சிறை ஊழியர்கள், நகராட்சித் தொழிலாளர்கள், கொரோனா தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வருவாய் அதிகாரிகள் என இரண்டு கோடி பேருக்கு அடுத்தகட்டமாகத் தடுப்பூசி வழங்கப்படும். இதில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புத் துறை, வீடு வீட்டுவசதி துறை மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சகங்களுடன் தொடர்புடைய ஊழியர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும்.

மூன்றாம் கட்டத்தில் வயதானவர்களுக்குத் தடுப்பூசி
இதில் முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும், பின்னர் 50-60 உடையவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பட்டியலைக் கொண்டு, இதில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.

நான்கு மற்றும் ஐந்தாம் கட்டம்
இந்த நான்காம் கட்டத்தில் பின்னர் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி வழங்கப்படும். அதைத்தொடர்ந்து ஐந்தாம் மற்றும் இறுதிக் கட்டத்தில் மற்ற அனைவருக்கும் படிப்படியாகத் தடுப்பூசி அளிக்கப்படும்.

பதிவு செய்வது எப்படி
தடுப்பூசியை எடுத்துக் கொள்பவர்கள் CoWIN என்ற தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். அதில் ஆதார் அல்லது அரசின் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளத்தைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து தடுப்பூசி வழங்கப்படும் தேதி, இடம் மற்றும் நேரம் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்கள் நிச்சயம் முன்னரே இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

எங்கெல்லாம் தடுப்பூசி வழங்கப்படும்
இந்தியாவில் மூன்று வகையான இடங்களில் தடுப்பூசி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. முதலில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பச் சுகாதார மையங்களில் தடுப்பூசி வழங்கப்படும். அடுத்த கட்டமாகப் பள்ளிகள், சமூக அரங்குகளில் வழங்கப்படும். இதைத் தவிர மிகவும் பின்தங்கிய மற்றும் கிரமங்களில் சிறப்பு வாகனங்கள் மூலம் தடுப்பூசி செலுத்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

என்னென்ன அறைகள்
தடுப்பூசி வழங்கும் அனைத்து இடங்களிலும் காத்திருக்கும் அறை, தடுப்பூசி செலுத்தும் அறை, கண்காணிப்பு அறை என மூன்று அறைகள் இருக்கும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள வருபவர்கள் முதலில் காத்திருக்கும் அறையில் இருப்பார்கள். அங்கு அவரது அடையாள அட்டைகள் சரி பார்க்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் அறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அதன் பின், சிறிது நேரம் கண்காணிப்பு அறையில் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவர்களின் உடல் நிலை கண்காணிக்கப்படும். அதன் பின்னர், அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.












Click it and Unblock the Notifications