லோக்சபா தேர்தலில் ஆட்சி அமைக்க போவது யார்? தமிழ்நாட்டில் யாருக்கு வெற்றி? சர்வேக்கள் சொல்வது என்ன?
டெல்லி: 2024 லோக்சபா தேர்தல் குறித்து பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதுவரை வெளியான 3 முக்கியமான கருத்து கணிப்புகளும் வேறு வேறு விதமான முடிவுகளை கொடுத்துள்ளன. அந்த கருத்து கணிப்புகள் முடிவுகளை இங்கே ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
கருத்து கணிப்பு 1: டைம்ஸ் நவ் இடிஜி சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு நடத்தப்பட்டு நேற்று ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடிக்கும் எனவும், 26 கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி பின்னடைவை சந்திக்கும் எனவும் கணிப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 296 முதல் 326 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

26 கட்சிகள் இணைந்த எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி 160 முதல் 190 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழ்நாட்டில் 4-8 இடங்களை பாஜக - அதிமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் பிடிக்கும் என்று இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து கணிப்பு 2: PCSurveysIndia அதாவது Political Critic என்ற அமைப்பு இன்னொரு கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணி : 255 இடங்கள் எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி: 225 இடங்கள் மற்ற கட்சிகள் : 63 இடங்கள் வெல்லும் என்று இந்த அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது
மாநில வாரியாக லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 38 இடங்களை திமுக காங்கிரசின் இந்திய கூட்டணி வெல்லும் என்றும், அதிமுக - பாஜக கூட்டணி ஒரே ஒரு இடத்தில் வெல்லும் என்றும் இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
கருத்து கணிப்பு 3: ஸ்மால் பாக்ஸ் இந்தியா சர்வே என்ற அமைப்பு இந்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் திமுகவின் இந்தியா கூட்டணி - 36 இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - 03 இடங்களை வெல்லும்
தமிழ்நாட்டில் கடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில்வென்றது. அதிமுக 1 இடத்தில் வென்றது. இந்த முறை திமுக கூட்டணி 2 இடங்களை இழக்கும். பாஜக கூட்டணி கூடுதலாக இரண்டு இடங்களை பெறும். அதாவது தமிழ்நாட்டில் இருந்து பாஜக கூட்டணிக்கு 3 எம்பிக்கள் வருவார்கள் என்று கூறப்பட்டு உள்ளது. இவர்கள் பாஜக கட்சியா, அதிமுக கட்சியா என்பது தெரிவிக்கப்படவில்லை.
இது போக கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி - 18 (-1) இடங்களை வெல்லும்
வலதுசாரி கூட்டணி - 02 (+1) இடங்களை வெல்லும்
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி - ஒரு இடத்தில் கூட வெல்லாது என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் தேசிய அளவிலான முடிவு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
3 வெவ்வேறு முடிவுகள்: இதுவரை வெளியான 3 கருத்து கணிப்புகளிலும் வெவ்வேறு விதமான முடிவுகள் வெளியாகி உள்ளன. ஒன்றில் பாஜகவிற்கு மெஜாரிட்டி என்று கணிக்கப்பட்டு உள்ளது, இன்னொரு கணிப்பில் தொங்கு சட்டசபை உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அளவில் 3 கணிப்பிலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 30 இடங்களுக்கு மேல் வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications