ட்விட்டர் போனா என்ன? பராக் அகர்வால் பேஸ்புக் சிஇஓ ஆகணும்.. பிரபல தொழிலதிபர் ஐடியா! காரணத்தை கேளுங்க
டெல்லி: பிரபல இந்தியத் தொழிலதிபர் அனுபம் மிட்டல் பேஸ்புக் நிறுவனத்திற்குக் கொடுத்த ஆலோசனை ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்த காலத்தில் உலகெங்கும் டெக் நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் சமூக வலைத்தளங்கள் அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது.
ஆனால், இப்போது உலகெங்கும் பல நாடுகள் டெக் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவில் கூட சமீபத்தில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பேஸ்புக்
அதேபோல பேஸ்புக் நிறுவனமும் அமெரிக்காவில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு உள்ளது. பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா இந்த ஆண்டு மட்டும் $700 பில்லியன் மதிப்பீட்டை இழந்துள்ளது. குறிப்பாக நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் நிகர மதிப்பு ஒரே நாளில் மட்டும் $11 பில்லியன் குறைந்துள்ளது... ஒரு காலத்தில் மூன்றாவது பெரிய பணக்காரராக இருந்த ஜுக்கர்பெர்க், இப்போது 23வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளார். மெட்டா மட்டுமின்றி பல டெக் நிறுவனங்களின் நிலை இது தான்.

இந்தியர்கள்
அதேநேரம் அமெரிக்காவின் முக்கிய டெக் நிறுவனங்களுக்கு இந்தியர்களை சிஇஓவாக நியமிக்கும் முறையும் தொடர்ந்தே வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சத்யா நாதெல்லா மற்றும் கூகுளில் சுந்தர் பிச்சை போன்றவர்கள் அந்த நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்துவதே இதற்குச் சாட்சி! அமெரிக்கர்களைக் காட்டிலும் இந்தியர்கள் நிறுவனத்தைக் காக்கத் துணிச்சலான முடிவுகளை எடுப்பதே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

சரிவு
இதனிடையே பிரபல தொழிலதிபர் அனுபம் மிட்டல் பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆலோசனை ஒன்றைக் கொடுத்து உள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் எப்படிச் செயல்பட்டு உள்ளது என்ற கிராப்பை அவர் பகிர்ந்துள்ளார். கடந்த 2017இல் சுமார் 180 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் இப்போது சுமார் 45% சரிந்து 97 டாலரில் வர்த்தகமாகி வருகிறது.

அனுபம் மிட்டல்
இதைப் பகிர்ந்துள்ள அனுபம் மிட்டல், "கடந்த 5 ஆண்டுகளில் மெட்டா நிறுவனத்தின் பங்குகள் இதோ! மெட்டா நிறுவனத்திற்கு இந்தியாவைச் சேர்ந்த சிஇஓ ஒருவர் கண்டிப்பாகத் தேவை எனத் தெரிகிறது. பராக் அகர்வால் இப்போது இருக்கிறார். வேறு எதாவது பரிந்துரை இருக்கிறதா?" என்று கேட்டுப் பதிவிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், பராக் அகர்வால் பேஸ்புக் சிஇஓவாக நியமிக்கப்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

பராக் அகர்வால்
கடந்தாண்டு பராக் அகர்வால் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக நியமிக்கப்பட்டார். சுமார் 11 மாதங்கள் அவரது தலைமையில் ட்விட்டர் இயங்கியது. இருப்பினும், அவரது செயல்பாடுகள் போர்ட் உறுப்பினர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் முதல் வேலையாக பராக் அகர்வாலை வேலையைவிட்டுத் தூக்கியது குறிப்பிடத்தக்கது.

என்ன பிரச்சினை
மறுபுறம் பேஸ்புக் நிறுவனம் நல்ல நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். போலி செய்திகள், வெறுப்பு பேச்சு, போலிக் கணக்குகள் என எதிலும் பேஸ்புக் நிறுவனத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பல்வேறு காரணங்களால் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் கூட திருப்திகரமாக இல்லை. மேலும், உலகின் பல நாடுகளிலும் இது பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. இதனால் பேஸ்புக் வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications