அதிக "ரத்த பணம்" கொடுக்க ரெடி! ஷேக் சொல்லியும் கேட்கவில்லை! நிமிஷா பிரியா விவகாரத்தில் என்ன சிக்கல்?
டெல்லி: ஏமன் நாட்டில் கொலைக் குற்றச்சாட்டில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு நாளை மறுநாள் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ரூ.8.5 கோடி வரை ரத்தப் பணம் கொடுக்க முன்வந்தும் கூட அந்த முயற்சியில் பலன் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே ரத்தப் பணம் விவகாரத்தில் என்ன சிக்கல் என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரள நர்ஸ் நிமிஷா பிரியா என்பவர் ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொன்ற குற்றச்சாட்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அதாவது ஜூலை 16ம் தேதி அவருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணை
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது ஏமன் நாட்டில் நடக்கும் வழக்கு என்பதால் நிமிஷா பிரியா விவகாரத்தில் தலையிடுவதற்கு அளவே அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது ஒரு மிகவும் சிக்கலான பிரச்சினை என்று குறிப்பிட்ட மத்திய அரசு வழக்கறிஞர் இதில் தலையிடுவதற்குச் சில தூதரக வழிகளே உள்ளன என்றும் அவை அனைத்திலும் அரசு முயன்று வருவதாகவும் தெரிவித்தது.
நீதிபதி சந்தீப் மேத்தா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், "ஏமனில் என்ன நடக்கிறது என்று எங்களால் தெரிந்து கொள்ள முடியவில்லை" என்றார். மேலும், ஏமன் அதிகாரிகள் மற்றும் அங்குள்ள வழக்கறிஞருடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் நடப்பதால் மரண தண்டனையைத் தாமதப்படுத்தக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
ரத்தப் பணம்
மேலும், நிமிஷா பிரியாவின் உயிரைக் காப்பாற்ற இருக்கும் ஒரே வழி ரத்தப் பணம் தான் என்றும் குறிப்பிட்டனர். ஏமனில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் ரத்தப் பணம் வாங்கி சமரசம் செய்து கொள்வது மட்டுமே ஒரே வழி என்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. அதென்ன ரத்தப் பணம் என்ற சந்தேகம் சிலருக்கு வரும். பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் நிவாரணம் பெற்றுக்கொண்டு குற்றவாளியை மன்னிப்பதே இந்த ரத்தப் பணம்.
மன்னிப்பு கோரலாம்
அதாவது பொதுவாக நம் நாட்டில் குற்ற வழக்குகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் நிச்சயம் தண்டனை கிடைக்கும். பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது குடும்பத்தினரோ மன்னித்தாலும் கூட குற்றவாளிக்கு எந்தச் சலுகையும் இருக்காது. ஆனால், ஷரியா சட்டம் உள்ள சில இஸ்லாமிய நாடுகளில் இதுபோல ரத்தப் பணம் கொடுத்து மன்னிப்பு கோரலாம். இதை 'திய்யா' என்றும் சொல்வார்கள். கடுமையான குற்றங்கள் செய்தோர் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிதி இழப்பீடு வழங்கி மன்னிப்பு கேட்பதே இந்த முறை.
இந்த குறிப்பிட்ட தொகை தான் ரத்தப் பணமாக வழங்க வேண்டும் என்று எந்தவொரு நிபந்தனையும் இல்லை. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தங்கள் விருப்பம் போலத் தொகையைக் கேட்கலாம். அதை இரு தரப்பும் பேசி நடத்தி இறுதி செய்யும். அதேநேரம் ரத்தப் பணத்தை நிச்சயம் வாங்க வேண்டும் என்றும் எந்தவொரு விதியும் இல்லை. ரத்தப் பணத்தை மறுக்கவும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு அதிகாரம் இருக்கிறது.
ஏற்க மறுப்பு
நிமிஷா பிரியா வழக்கில் பாதிக்கப்பட்ட மஹ்தி குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி) நிதியுதவி மட்டுமின்றி, கேரளாவில் குடும்பத்தினருக்குச் சிகிச்சை, வெளிநாட்டில் குடியேற முடிவு செய்தால் அதற்கான தொகையைக் கூட கொடுக்க முன்வந்தனர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் இதை ஏற்கவில்லை. இது குறித்தும் மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
என்ன காரணம்
அதிகத் தொகை கொடுக்க முன்வந்தாலும் கூட பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இதைக் கவுரவப் பிரச்சனையாகப் பார்க்கிறார்களாம். அதிகப் பணம் கொடுக்க முன்வந்தாலும் அவர்கள் மவுனமாகவே இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், செல்வாக்கு மிக்க ஷேக் ஒருவரை வைத்துக் கூட முயற்சி செய்ததாகவும் இருப்பினும், அதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதிகத் தொகை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முயல்வதாகவும் அதுவரை மரண தண்டனையைத் தள்ளி வைக்கக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அரசுத் தரப்பு தெரிவித்தார். இன்று காலை கூட அதற்கான முயற்சிகள் நடந்ததாகத் தெரிவித்தார். மத்திய அரசு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வரும் வெள்ளிக்கிழமைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications