காடுகளுக்கு ஆபத்து? வனத்துறை அனுமதியின்றி சிலவகை கட்டுமானங்களை செய்யலாம்! ரெடியான வன சட்ட திருத்தம்
டெல்லி: வன சட்ட திருத்த மசோதா 2023 லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ராஜ்ய சபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் இடையே இந்த சட்ட திருத்த மசோதா கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.
கடந்த ஜூன் மாதம் வன சட்ட திருத்த மசோதா 2023 எந்த விதமான விவாதமும் இன்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் பாராளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டு அங்கே ஒப்புதல் பெறப்பட்ட மசோதா தற்போது ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஏன் இந்த மசோதா சர்ச்சைக்குள்ளாகிறது?: இந்த வன சட்ட திருத்த மசோதா 2023 மூலம் ஒரு சில காட்டு பகுதி நிலங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ள அனுமதி வாங்க வேண்டியது இல்லை. இப்போது உள்ள சட்டப்படி காட்டு பகுதியில் கட்டுமானம் மேற்கொள்ள முடியாது. மீறி செய்தால் அதற்கு வனத்துறை அனுமதி வேண்டும்.
இல்லையென்றால் பசுமை தீர்ப்பாயம் அனுமதி வேண்டும். இந்த சட்ட திருத்தத்தின்படி தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு தேவையான கட்டுமானங்களை ஒரு சில காட்டுப்பகுதிகளில் மேற்கொள்ள அனுமதி வாங்க வேண்டியது இல்லை. அதேபோல் காட்டு பகுதிகளில் டூர் மேற்கொள்வது, சபாரி செல்வது, அங்கேயே சரணாலயம் அமைப்பது போன்ற மாற்றங்களை மேற்கொள்ள இந்த திருத்தம் அனுமதி அளிக்கிறது.
மிக முக்கியமாக தற்போது உள்ள சட்டப்படி காடு என்ற வரையறையையே இந்த வன சட்ட திருத்த மசோதா 2023 மாற்றுகிறது. தற்போது உள்ள வரையறைப்படி காடு என்றால் அதிக மரங்கள் உள்ள அடர்ந்த வனப்பகுதி ஆகும். ஆனால் இந்த சட்டப்படி, இந்திய ஆவணங்களில் காடு என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் பகுதிகள் மட்டுமே காடு ஆகும்.
அதாவது சட்ட பூர்வமாக எவை எல்லாம் காடு என்று ஆவணங்களில் உள்ளதோ அவை மட்டுமே காடு. உதாரணமாக ஒரு இடத்தில் பல லட்சம் மரங்கள் இருந்தாலும் கூட அவை ஆவணத்தில் காடு என்று இல்லை என்றால் அது காடு இல்லை. இங்கே வனத்துறை அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும்.
மற்றபடி காட்டு பகுதிகளில் தேசிய நலனுக்கான திட்டங்கள், பாதுகாப்பிற்கான திட்டங்களை மனதில் வைத்து அனுமதி இன்றி கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும். மேலும் இந்தியாவின் எல்லை பகுதியில் இருந்து 100 கிமீ தூரத்திற்குள் உள்ள பகுதிகளில் இருக்கும் காடுகளில் கட்டுமானங்களை, சாலைகளை அமைக்க வனத்துறை அனுமதி தேவை இல்லை.
உதாரணமாக வடகிழக்கு மாநிலங்கள் பல சீனா, நேபாளத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இந்த மாநிலங்களில் உள்ள காடுகள் எல்லையில் இருந்து 100 கிமீ தூரத்தில் இருந்தால் அங்கே யாருடைய அனுமதியும் இன்றி அரசு கட்டுமானங்களை மேற்கொள்ள முடியும்.
பாராளுமன்ற குழு: பாராளுமன்ற நிலைக்குழுவில் கடுமையான விவாதத்திற்கு பின் இந்த சட்ட திருத்தம் ஒப்புதல் பெற்றுள்ளது. கேரளா, வடகிழக்கு மாநிலங்கள், ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்கள் இதை கடுமையாக எதிர்த்து உள்ளன. ஒடிசாவில் உள்ள பல்வேறு மலை பகுதிகள் இந்த சட்டத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. பாராளுமன்ற நிலைக்குழுவில் கடும் எதிர்ப்பிற்கு பின் இந்த சட்டம் ஒப்புதல் பெற்றுள்ளது.
இதையடுத்து வன சட்ட திருத்த மசோதா 2023 லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று ராஜ்ய சபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இயற்கை ஆர்வலர்கள் இடையே இந்த சட்ட திருத்த மசோதா கடுமையான விமர்சனங்களை சந்தித்து உள்ளது.












Click it and Unblock the Notifications