அட்டகாசமான போர் விமானம்.. ஆனாலும் அமெரிக்க விமானத்தை சீண்டாத இந்தியா! காரணம் இதுதான்!
டெல்லி: அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானமான F-15EXஐ நமக்கு விற்க போயிங் முன் வந்தது. ஆனால், என்னதான் இந்த விமானம் மாஸாக இருந்தாலும் இந்தியா இதை திரும்பிக்கூட பார்க்கவில்லை. விமானத்தை நாம் இப்போது வரை வாங்காமல் வெயிட்டிங்கில் வைத்திருக்கிறோம்.
இந்த விமானம் எதிர்பார்த்த அளவுக்கு சக்தி வாய்ந்ததுதான். பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தானையும், சீனாவையும் எதிர்கொள்ள தேவையான பவர் இந்த விமானத்திடம் இருக்கிறது. ஆனாலும், இந்தியா இந்த விமானத்தை வாங்குவதிலிருந்து தள்ளியே இருக்கிறது.

காரணம் இந்த விமானங்களில் ரேட்டும், அதை பராமரிக்க செய்யப்படும் செலவுகளும் தான். இந்த வகை விமானங்கள் ரொம்பவும் காஸ்ட்லியானவை. ஒரு விமானம் மட்டுமே ரூ. 789.6 கோடி வரும். இந்த விமானத்தை ஒரு மணி நேரம் வானத்தில் பறக்க வைக்க மட்டும் சுமார் ரூ.24 லட்சம் வரை செலவழிக்க வேண்டும். தற்போது இந்தியாவிடம் இருக்கும் சுகோய்-30MKI விமானத்தை வானில் இயக்க ஒரு மணி நேரத்திற்கு ரூ.15 லட்சம் செலவாகும். ரபேல் விமானத்தை இயக்க ரூ.16 லட்சம், தேஜஸ் விமானத்தை இயக்க ரூ.4.5 லட்சம் செலவாகும். ஆனால் அமெரிக்க விமானத்தை இயக்க அதிக செலவாகிறது என்பதால் தான், இந்தியா இப்போது வரை இந்த விமானத்தை வாங்காமல் இருக்கிறது.
F-15EX மிகப்பெரிய பிரமாண்ட கனரக போர் விமானம் ஆகும். இந்த விமானம் அதிகளவு எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து செல்ல வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இது இயல்பாகவே அதிக அளவு எரிபொருளை குடிக்கும் வகையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. என்னதான் சிறப்பான விமானமாக இருந்தாலும் இதே அளவுக்கு பெரிய கனரக போர் விமானம் இந்தியாவிடம் ஏற்கெனவே இருக்கிறது. இந்திய விமானப்படையில் சுகோய் 30 ரக விமானங்கள் தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்படி இருக்கும்போது தேவையில்லாமல் இன்னொரு கனரக போர் விமானத்தை வாங்குவது என்பது தண்ட செலவு என்று இந்தியா நினைக்கிறது.
இது மட்டுமல்லாது இந்திய விமானப்படை ஏற்கனவே ரஷ்ய விமானத்தையும், பிரான்சின் விமானத்தையும், உள்நாட்டு தயாரிப்பு விமானத்தையும் கொண்டு இயங்கி வருகிறது. இந்திய விமானப்படை வீரர்களுக்கு இந்த மூன்று விமானங்களில் பயிற்சி கொடுப்பதே சிக்கலான விஷயமாக இருக்கும் போது.. நான்காவதாக புதிய விமானத்தை உள்ளே கொண்டு வருவது என்பது விமானப்படை வீரர்களுக்கு சோர்வை ஏற்படுத்தும். எனவேதான் இந்தியா அமெரிக்காவின் விமானத்தை வாங்காமல் தவிர்த்து வருகிறது.
இன்னொரு காரணம் அமெரிக்கா மீதான இந்தியாவின் நம்பிக்கை. கடந்த காலங்களில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தனது போர் விமானங்களை கொடுத்தது. இப்பொழுது இந்தியா மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்து இருக்கிறது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது.. அமெரிக்காவிடம் பொருட்களை வாங்குவது புத்திசாலித்தனமாக இருக்காது என்பதால் இந்தியா தனது விமான கொள்முதலை பெண்டிங்கில் வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications
