73 பில்லியன்.. இந்தியா அவ்வளவு ஈஸியா "வளைகுடா" நாடுகளை பகைக்க முடியாது.. ஏன் தெரியுமா? இதான் சங்கதி!
டெல்லி: கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவை மேற்கொண்டு வருகிறது. இரண்டு தரப்பு உறவு மிகவும் முக்கியம் என்பதால்தான் நுபுர் சர்மா விவகாரத்திலும் மத்திய பாஜக அரசு தனது சொந்த கட்சி நிர்வாகி மீதே கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்கள் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை கடுமையாக இகழ்ந்து இருந்தார்.
நபிகள் குறித்து சில தவறான கருத்துக்களை அவர் தெரிவித்து இருந்தார். இதை கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடுமையாக எதிர்த்தன.
Recommended Video

விளக்கம்
கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான் என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது

ஏன் இப்படி?
இந்தியா பொதுவாக உள்நாட்டு பிரச்சனையில் வெளிநாடுகள் கருத்து சொன்னால் அதை காதில் வாங்கிக்கொள்ளாது. காஷ்மீர் பிரச்சனையில் அமெரிக்கா தலையிட்ட போது, அமெரிக்காவை அமைதியாக இருக்கும்படி கூறியது இந்தியாதான். விவசாய போராட்டத்தில் சர்வதேச பிரபலங்கள் கருத்து சொன்ன போதும் அதை கடுமையாக விமர்சனம் செய்ததும் இந்தியாதான். ஆனால் அப்படிப்பட்ட இந்தியா இந்த முறை இறங்கி போய் கத்தாரிடம் விளக்கம் கொடுத்துள்ளது.

சொந்த கருத்து அல்ல
இது எங்களின் சொந்த கருத்து அல்ல.. கலகக்காரர்களின் கருத்து என்று மத்திய பாஜக அரசு தனது (முன்னாள்) செய்தி தொடர்பாளரை சர்வதேச அளவில் விட்டுக்கொடுத்து பேசி உள்ளது. எப்போதும் இறங்கி போகாத இந்திய அரசு இப்படி திடீரென வளைகுடா நாடுகளிடம் இறங்கி போக என்ன காரணம் என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பின் பல காரணங்கள் இருந்தாலும் பொருளாதார ரீதியாக இரு தரப்பு உறவு மிக மிக முக்கியம் ஆகும்.

இரு தரப்பு உறவு
இந்தியா - வளைகுடா நாடுகள் இடையிலான உறவு என்பது பொருளாதாரம், வர்த்தகம் தாண்டி, வரலாறு, கலாச்சாரம் ரீதியாகவும் நெருக்கமானது ஆகும். வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பலர் லட்சக்கணக்கில் வேலை பார்க்கிறார்கள். இரண்டு தரப்பு உறவு கடந்த சில காலங்களாக மிக நெருக்கமாகி வருகிறது. அதிலும் எண்ணெய் வர்த்தகத்திற்கு இந்தியா அரவு நாடுகளைத்தான் நம்பி இருக்கிறது.

வளைகுடா நாடுகள்
அரபு அமீரகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக இந்தியர்களின் மக்கள் தொகைதான். அங்கு மொத்தம் 89 லட்சம் இந்தியர்கள் மொத்தமாக உள்ளனர். அங்கு இருக்கும் சில பெரிய கடைகள், ஹோட்டல்கள், உணவகங்கள் பல இந்தியர்களுடையதுதான். இப்போது இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று செய்யப்படும் பிரச்சாரம் இவர்களை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அமீரகம்
உலகில் இந்தியாவுடன் வர்த்தகம் செய்யும் மூன்றாவது பெரிய நாடு அரபு அமீரகம்தான். அதேபோல் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவிற்குதான் அமீரகம் அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. இந்தியா அமீரகம் இடையிலான 2021-2022 வர்த்தகம் 72..9 பில்லியன் டாலராக இருந்தது. இதில் இந்தியாவின் அமீரக ஏற்றுமதி மட்டும் 28.4 பில்லியன் டாலர் ஆகும். அதோடு தற்போது செய்யப்பட்டுள்ள Comprehensive Economic Partnership ஒப்பந்தம் மூலம் இரண்டு நாட்டு வணிகம் 100 பில்லியனை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் ஏற்றுமதி
அதேபோல் நாம் அங்கிருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்வதற்கு இணையாக, அரபு நாடுகள் நம்மிடம் இருந்து உணவு பொருட்களை இறக்குமதி செய்கிறது. 85 சதவிகித உணவு, 93 சதவிகித தானியங்களை அரபு நாடுகள் இறக்குமதி செய்கின்றன. இதில் அரசு, மாட்டுக்கறி, மிளகு, மிளகாய், தானியங்கள், கடல் சார் பொருட்கள், காய்கறிகள், சர்க்கரை எல்லாம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

வளைகுடா எண்ணெய் ஏற்றுமதி
இந்தியாவிற்கு வெளிநாட்டில் இருந்து வரும் அந்நிய செலவாணியில் கிட்டத்தட்ட பாதி குவைத், கத்தார், சவுதி, ஈரான், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்துதான் வருகிறது. இதில் கேரளா முதல் இடத்திலும், டெல்லி இரண்டாம் இடத்திலும் உள்ளது. இந்தியாவிற்கான கச்சா எண்ணெயில் 60 சதவிகிதத்தை வளைகுடா நாடுகள்தான் வழங்குகின்றன. இந்தியா தினமும் 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை பயன்படுத்துகிறது. அதில் 60 சதவிகிதம், இங்கிருந்துதான் வருகிறது.

இந்தியா ஜிசிசி
இந்தியா ஜிசிசி எனப்படும் Gulf Cooperation Council (GCC) உடன் மிக அதிக அளவில் வர்த்தகம் செய்து வருகிறது. குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் யுஏஇ ஆகிய நாடுகளுடன் இந்த வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது. மொத்தமாக இந்த ஜிசிசி நாடுகளுடனான வர்த்தகம் என்பது 87 பில்லியன் டாலர் ஆகும். இந்தியா இப்படிப்பட்ட வர்த்தகத்தை சில தவறான கருத்துக்கள் காரணமாக நிறுத்த விரும்பாது. இதனால்தான் எப்போதும் இல்லாமல் இந்த முறை வெளிநாட்டு கருத்துக்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்காமல்.. சாந்தமாக விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications