அம்மாடி இது ஆச்சரியமா இருக்கே.. "இன்று பகல் குறைவானது, இரவு மிக நீளமானது.." அது எப்படி தெரியுமா
டெல்லி: இன்று இயற்கை அதிசயம் ஒன்று நிகழ இருக்கிறது. அதாவது இன்றைய தினம் தான் நாம் மிக நீண்ட இரவையும் மிகக் குறுகிய பகலையும் அனுபவிக்க உள்ளோம். அதற்கான காரணத்தையும் நாம் பார்க்கலாம்.
இந்த பூமியும் சூரியக் குடும்பமும் பல ஆச்சரியங்களைக் கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு ஆச்சரியங்களுக்குப் பின்னாலும் ஒரு காரணமும் இருக்கிறது. மனிதர்கள் இந்தளவுக்கு பரிமாண வளர்ச்சியடைய இவை அனைத்தும் தான் காரணமாக இருக்கிறது.

அதன்படி இன்று ஒரு அதிசயம் நிகழ இருக்கிறது. இன்று காலை எழும் போது, என்னப்பா சூரியனையே காணோம் என உங்களுக்குத் தோன்றி இருக்கலாம். அதற்குக் காரணம் இருக்கிறது. அதேபோல இன்று மாலையும் சூரியன் சீக்கிரமே ரெஸ்ட் எடுக்கச் சென்றுவிடும். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.
இந்தியாவின் குளிர் காலம்: இந்தியா முழுக்க குளிர் காலம் இருக்கும் நிலையில், நமது நாடு இன்று மிக நீண்ட இரவுக்குத் தயாராகிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21 அல்லது டிசம்பர் 22ஆம் தேதி தான் நமது நாட்டில் மிக நீண்ட இரவும் குறுகிய பகல் வேளையும் இருக்கும். அதன்படி இன்றைய தினம் மிக நீண்ட இரவு நமக்குக் காத்திருக்கிறது.
இதை ஆய்வாளர்கள் ஆங்கிலத்தில் Winter Solstice என்று அழைக்கிறார்கள். வடக்கு அரைக்கோளம் அதாவது Northern Hemisphere சூரியனில் இருந்து ஒப்பீட்டளவில் இந்த காலகட்டத்தில் சற்று அதிகம் சாய்ந்திருக்கும். இதனால் ஆண்டுதோறும் இந்த நாட்களில் பகல் நேரம் குறுகியதாகவும் இரவு நேரம் நீண்ட ஒன்றாகவும் இருக்கும்.
என்ன காரணம்: பூமி சூரியனைச் சுற்றி வரும் நிலையில், அது அச்சில் 23.4 டிகிரி சாய்ந்துள்ளது. எனவே, அது பூமியை நோக்கிச் சாய்ந்து இருந்தால் பகல் நேரம் அதிகமாக இருக்கும். அதேநேரம் அது சூரியனில் இருந்து விலகி இருந்தால் பகல் அதிகமாக இருக்கும். அப்படி வடக்கு அரைக்கோளம் சூரியனில் இருந்து தள்ளி இருக்கும் போது இந்த Winter Solstice நிகழ்வு நடக்கும்.
இந்த ஆண்டு இந்தியாவுக்குக் குறுகிய நாளாக இன்று டிசம்பர் 22 இருக்கும். இந்தாண்டு மற்ற நாட்களுடன் ஒப்பிடும் போது, பகல் நேரம் குறைவாகவே இருக்கும். அதேநேரம் இருள் அதிகமாகவே இருக்கும். அனைத்து நாட்களுக்கும் 24 மணி நேரம் தான் என்ற போதிலும் சூரிய ஒளி கிடைக்கும் நேரத்தை வைத்து இன்றைய தினத்தைக் குறுகிய நாள் எனக் குறிப்பிடுவார்கள்.
மிஸ் செய்யாதீர்கள்: இந்த காலகட்டத்தில் சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைவதைப் பார்ப்பது அருமையான ஒன்றாக இருக்கும். எனவே, அதை மிஸ் செய்யாதீர்கள். குறிப்பாக இன்று சூரியன் மறையும் போது ரொம்பவே அழகாக இருக்கும். எனவே தவறாமல் வெளியே சென்று அதை ரசிக்கலாம். இந்தாண்டு முடிய இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், இந்த அற்புதமான நிகழ்வை மிஸ் செய்துவிடாதீர்கள்.
இதை எப்படி நாம் Winter Solstice என்று அழைக்கிறோமோ அதேபோல வெயில் காலத்தில் Summer Solstice வரும். அப்போது இரவும் நேரம் குறுகியதாக இருக்கும். அதேநேரம் அதில் பகல் மிகப் பெரியதாக இருக்கும்.












Click it and Unblock the Notifications