5 மாநில சட்டசபை தேர்தல்களில் பாஜக படு மோசம்.. நாடு முழுக்க வீசுகிறதா மோடி எதிர்ப்பு அலை?
Recommended Video

டெல்லி: தேர்தல் நடைபெற்ற இந்து மாநிலங்களிலுமே பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இது மத்திய மோடி அரசின் மீதான மக்களின் அதிருப்தியாக பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்கு மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்தால் அது 4 ஆண்டுகால மத்திய மோடி அரசு மீதான மக்களின் நம்பிக்கையாகவும், தோற்றால், மோடி மீதான அதிருப்தியாகவும் பார்க்கப்படும் என்று பார்க்கப்பட்டது.
எனவே, 5 மாநில தேர்தல்களில் இம்மூன்று மாநிலங்கள் மீதும் அரசியல் விமர்சகர்கள் கண்கள் இருந்தன.

மோடி பிரச்சாரம்
மோடியை முன்னிறுத்திதான் இம்மாநிலங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டது. உள் மாநில பிரச்சினைகளும் வாக்களிப்பில் முக்கிய பங்கு வகித்தது என்றபோதிலும், மோடி சர்க்கார் மீதான நம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மையாகத்தான் பெருவாரியான மக்களால் இந்த தேர்தல் பார்க்கப்படும் என்றார்கள். இப்படியான பரபரப்புக்கு நடுவேதான் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

டிரெண்ட் மாறியது
காலை 9 மணி நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்த போது, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல, இந்த ட்ரெண்ட் என்பது மாறியது. சட்டீஸ்கரில் எளிதாக காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்க தொடங்கியது.

மத்திய பிரதேசம்
இந்த முன்னிலை பாஜக முன்னிலை வகித்த தொகுதிகளை விட மிக அதிகமாக இருந்தது. மத்திய பிரதேசத்தில் மட்டும் காலை 10 மணி வரை கடும் போட்டி நிலவியது. முதலில் பாஜக இங்கு முன்னிலை வகித்த போதிலும், காலை 10 மணிக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகிக்க ஆரம்பித்தது.

தெலுங்கானா, மிசோராம் கடைசி இடம்
தெலுங்கானாவை பொறுத்தளவில் காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் மிசோராமிலும் அதேபோன்று 2வது இடத்தையும் பிடித்தது. ஆனால் இந்த இரு மாநிலங்களிலும் பாஜக தலா ஒரு தொகுதியில்தான் முன்னிலை வகித்தது. எனவே, அங்கும் பாஜகவுக்கு படுதோல்வி. லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் என்பது அரையிறுதி போன்றே பார்க்கப்பட்டது. இந்த அரையிறுதியில் பாஜக படுதோல்வியை சந்தித்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.












Click it and Unblock the Notifications