மொத்தமாக முடங்கும் டெல்லி.. உலக கோப்பை போட்டி நடப்பதில் சந்தேகம்.. காற்று மாசால் இப்படி கூட நடக்குமா
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு உச்சத்தில் இருக்கும் நிலையில், அங்கே உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதிலேயே மிகப் பெரிய கேள்வி எழுந்துள்ளது.
டெல்லியில் இப்போது காற்றின் தரம் மிக மோசமான நிலையில், இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலைக்குச் செல்வது வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் விவசாய கழிவுகள் எரிக்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்குச் சொல்லப்படுகிறது. இந்த காற்று மாசால் டெல்லியே முடங்கியுள்ளது. அங்கே ஆரம்பப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசு: இதற்கிடையே டெல்லியில் காற்று மாசு புதிய உச்சத்தை அடைந்துள்ள நிலையில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டி நாளை அங்கு நடைபெறுவதிலேயே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. போட்டியைக் காட்டிலும் வீரர்களின் உடல்நிலைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் காற்று மாசு அடர்த்தியான மூடுபனியைப் போல டெல்லியை மூடியுள்ளது.
இந்த காற்று மாசு காரணமாக வெள்ளிக்கிழமை தினம் இரு அணிகளும் தங்கள் பயிற்சியை ரத்து செய்துள்ளன. நேற்று சனிக்கிழமை காற்று மாசு அதிகமாக இருக்கும் நிலையில், இலங்கை பயிற்சியை கேன்சல் செய்துவிட்டது. அதேநேரம் வங்கதேச அணி மாஸ்க்குடன் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பயிற்சியை மேற்கொண்டது. இருப்பினும், காற்று மாசு அதிகமாகவே இருப்பதால் போட்டி ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகக் கோப்பை போட்டி நடக்குமா: டெல்லியில் கடந்த வியாழக்கிழமை முதலே காற்று மாசு மிக மோசமான நிலையில் இருக்கிறது. வரும் செவ்வாய்க்கிழமை வரை டெல்லியில் காற்று மாசு மிக மோசம் என்ற பிரிவிலேயே இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்றைய தினம் டெல்லியில் காற்றின் தரம் 457ஆக இருக்கிறது. இருப்பினும், நாளைய தினம் டெல்லியில் காற்றின் தரம் எந்தளவுக்கு இருக்கிறதோ அதை வைத்தே போட்டி நடக்குமா இல்லை என்று முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
ஐசிசி விதிகளின் பிரிவு 2.8 கூறுவது என்னவென்றால், "எந்த நேரத்திலும் நடுவர்கள் மைதானம், வானிலை, வெளிச்சம் அல்லது மற்ற சூழ்நிலைகள் ஆபத்தானவை என்று கருதினால் அவர்கள் உடனடியாக ஆட்டத்தை நிறுத்தலாம். சில காரணங்களுக்காகப் போட்டியைத் தொடர முடியாமல் போனால் அதை ஐசிசி மேட்ச் ரெஃப்ரியுடன் கலந்து ஆலோசித்து நடுவர்கள் மட்டுமே முடிவு செய்ய வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எப்போது தெரியும்: அதாவது போட்டி நடக்குமா இல்லையா என்பதை நடுவர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள். அதுவும் போட்டி நடக்கும் நாளில் எந்த சூழல் இருக்கிறதோ அதை வைத்தே முடிவு செய்வார்கள். எனவே இந்தப் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா இல்லையா என்பது நாளை தான் தெரிய வரும்.
இதில் மோதும் இலங்கை மற்றும் வங்கதேசம் என இரு அணிகளும் கிட்டதட்ட உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிவிட்டது என்றே சொல்லலாம். வங்கதேசம் 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்று 9ஆவது இடத்தில் இருக்கிறது. மறுபுறம் இலங்கை 7 போட்டிகளில் 2இல் மட்டுமே வென்று 7ஆவது இடத்தில் இருக்கிறது. அனைத்துமே தங்களுக்குச் சாதகமாக நடந்தால் இலங்கை அடுத்த சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், அதற்கான வாய்ப்புகளும் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

மேலும், இந்த உலகக் கோப்பையில் டெல்லியில் இந்தியா பங்கேற்கும் ஒரு போட்டி உட்பட மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் 5 போட்டிகள் எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடந்துவிட்ட நிலையில், நாளை நடைபெற இருந்த கடைசி போட்டி தான் திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications