ஆரத் தழுவி அழைத்த இந்தியா.. ஜி20யில் இணைந்த ஆப்பிரிக்க யூனியன்! ஜி20 எனும் பெயரே மாறுதாமே
டெல்லி: இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஆப்பிரிக்க யூனியன் ஜி20 நாடுகளில் நிரந்தர உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இதனையடுத்து ஜ20 நாடுகள் எனும் பெயர், 'ஜி21' என்று மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியாவில் முதன் முறையாக ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், எகிப்து, மொரிசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. உலகின் மிகவும் வலிமை வாய்ந்த நாடுகளாக உள்ள இந்த இரண்டு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டை புறக்கணித்திருப்பது இந்தியாவுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது.
மற்றொருபுறம் பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்டோர் நேற்றே இந்தியா வந்து சேர்ந்தனர். இந்நிலையில் இன்று காலை மாநாடு தொடங்கியபோது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஜி20 நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க யூனியனை இணைக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார். இக்கோரிக்கையை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர். எனவே ஆப்பிரிக்க யூனியன் ஜி20 நாடுகளின் நிரந்தர உறுப்பினராக இணைக்கப்பட்டது. முன்னதாக ஆப்பிரிக்க யூனியன் பிரதிநிதியை பிரதமர் மோடி ஆரத் தழுவி மாநாட்டின் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.
ஆப்பிரிக்காவில் சமீப காலங்களாக சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக புர்கினோ பசோ, மாலி, கினி, நைஜர் உள்ளிட்ட நாடுகளின் ராணுவம் கிளர்ச்சி செய்து அந்நாட்டில் இருந்த அரசை அகற்றியுள்ளன. இந்த அரசுகள் மேற்கு நாடுகளின் கைபாவையாக செயல்பட்டதாக ராணுவத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இப்படி இருக்கையில் கிளர்ச்சி செய்த நாடுகளுடன் ரஷ்யா நெருங்கி உறவாடி வருகிறது. இப்படியே போனால் ஆப்பிரிக்கா எங்கு தங்கள் கையை விட்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில் தற்போது ஜி20 லிஸ்ட்டில் ஆப்பிரிக்க யூனியனுக்கு நிரந்தர உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக ஜி20 நாடுகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்திருப்பதால் இந்த நாடுகளின் கூட்டாண்மைக்கு ஜி20 என்பதற்கு பதில் ஜி21 என்று பெயரிடப்படலாம் என்றும் அவர்கள் கணித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications