"ப்யூர் வெஜ்.." டெலிவரி பையில் அசைவ உணவுக்கு இடமில்லை.. சோமேட்டா அறிமுகப்படுத்திய புது டெலிவரி முறை
டெல்லி: நாட்டின் பிரபல உணவு டெலிவரி செயலியான சோமேட்டோ நிறுவனம் சைவ உணவைச் சாப்பிடுவோருக்கு புதியதாக 'Pure Veg Mode' டெலிவரி முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஹோட்டல்களுக்கு நேரில் சென்று பார்சல் வாங்கிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இந்த நவீன உலகில் எல்லாமே இணைய மயம் ஆகி வரும் நிலையில், உணவையும் டெலிவரி வாங்கும் முறை அதிகரித்துள்ளது.

மொபைலில் எடுத்து உணவை ஆர்டர் செய்தால் போதும். கொஞ்ச நேரத்தில் உணவு உங்கள் வீட்டுக்கே வந்துவிடும். இது பலருக்கும் வசதியாக இருந்ததால் பலரும் இந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
ப்யூர் வெஜ்: அதில் இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு டெலிவரி செயலியாக சோமேட்டோ இருக்கிறது. இதற்கிடையே சோமேட்டோ நிறுவனம் சைவ உணவைச் சாப்பிடுவோருக்கு புதியதாக 'Pure Veg Mode' என்ற ஒரு வகை டெலிவரி முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோ 100 சதவீத சைவ உணவை மட்டும் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்காக 'Pure Veg Mode' மற்றும் 'Pure Veg Fleet' ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. இதை சோமேட்டோ நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர் கோயல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தீபிந்தர் கோயல்: இந்த ப்யூர் வெஜ் ஆப்ஷன் குறித்து தீபிந்தர் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அதில் அவர், "உலகிலேயே இந்தியாவில் தான் சைவ உணவு உண்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவர்களிடம் இருந்து நாங்கள் பெற்ற முக்கியமான கருத்து என்னவென்றால், தங்கள் உணவு எப்படிச் சமைக்கப்படுகிறது, எப்படிக் கையாளப்படுகிறது என்பதில் அவர்கள் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள்.
அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 100% சைவ உணவு விருப்பமுள்ள வாடிக்கையாளர்களுக்காக, சோமேட்டோ நிறுவனம் "Pure Veg Fleet" உடன் "Pure Veg Mode"ஐ இன்று அறிமுகப்படுத்துகிறது. இந்த ப்யூர் வெஜ் மோடில் சுத்தமான சைவ உணவை மட்டுமே வழங்கும் உணவகங்கள் மட்டுமே இடம்பெறும். அசைவ உணவுகளை வழங்கும் எந்தவொரு உணவகமும் இதில் இருக்காது.
மத ரீதியாக இல்லை: எங்களின் பிரத்தியேக ப்யூர் வெஜ் ஆப்ஷனில் இந்த ப்யூர் வெஜ் உணவகங்களிலிருந்து பெறப்படும் ஆர்டர்களை மட்டுமே டெலிவரி செய்வார்கள். அதாவது, அசைவ உணவு அல்லது அசைவ உணவகம் வழங்கும் வெஜ் சாப்பாடு கூட எங்கள் ப்யூர் வெஜ் பச்சை டெலிவரி பையில் செல்லாது. இந்த ப்யூர் வெஜ் மோட் அல்லது ப்யூர் வெஜ் ஆப்ஷன் என்பது எந்தவொரு மத, அல்லது அரசியல் சார்பில் இல்லை. இது எந்தவொரு மதத்தையும் அந்நியப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு இல்லை.
வரும் காலத்தில் எங்கள் வாடிக்கையாளர் தேவைகளுக்காக மேலும் பல சிறப்பு டெலிவரி முறைகளையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். உதாரணமாக பிரத்தியேகமாக கேக் டெலிவரி செய்ய ஹைட்ராலிக் பேலன்சர்களுடன் கூடிய டெலிவரி முறையைக் கொண்டு வர உள்ளோம். இது டெலிவரியின் போது உங்கள் கேக் சேதமடைவதைத் தடுக்கும்.
எப்போது: இந்த ப்யூர் வெஜ் டெலிவரி ஆப்ஷன் அடுத்த சில வாரங்களில் நாடு முழுவதும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். எங்கள் வாடிக்கையாளர்கள் கோரிக்கை மற்றும் இந்த நாட்டிற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த ப்யூர் வெஜ் மோடில் சோமேட்டோ சிஇஓ தீபிந்தர் கோயலும் சில ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளார். அது தொடர்பான படத்தையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதற்கு இணையத்தில் கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளனர். ஒரு தரப்பினர் சோமேட்டோ நடவடிக்கையைப் பாராட்டி வருகிறது. அதேநேரம் மற்றவர்கள் உணவில் இதுபோல பாரபட்சம் காட்டப்படுவதை ஏற்கவே முடியாது எனப் பதிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications