"ஒரே சாமி.. அது அய்யாதான்" மேடையிலேயே குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ்.. முடிவுக்கு வரும் மோதல்?
தர்மபுரி: பாமக நிறுவனவரும், தந்தையுமான ராமதாஸ் உடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஈடுபட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் ஒரு மாதமே தூங்கவில்லை என்று புலம்பிய அன்புமணி ராமதாஸ், எப்போதும் ஒரே சாமிதான்.. அது அய்யாதான் என்று கூறி இருக்கிறார். இதனால் விரைவில் அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் சந்திப்பு நடக்கும் என்று பார்க்கப்படுகிறது.
ராமதாஸ் vs அன்புமணி
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையில் மோதல் போக்கு இருந்து வருகிறது. பாமகவில் இளைஞரணி தலைவராக முகுந்தனை நியமனம் செய்ததில் இருந்தே ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கருத்து வேறுபாடு எழுந்தது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த மோதல் கடந்த மாதம் உச்சத்திற்கு சென்றது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இனி செயல் தலைவராக செயல்படுவார் என்று ராமதாஸ் அறிவித்தார்.

இறங்கி வந்த ராமதாஸ்
இதன்பின் வன்னியர் சங்க மாநாட்டிலும் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையிலான மோதல் முடிவுக்கு வரவில்லை. பின்னர் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தை அன்புமணி புறக்கணித்திருந்தார். இருந்தாலும் ராமதாஸ், விரைவில் அன்புமணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று கூறினார்.
தூங்காத அன்புமணி
ஆனால் சிங்கத்தை கால்கள் பழுதுபடவில்லை என்பதற்கு ஏற்ப, தனது நீச்சல் வீடியோவை வெளியிட்டதாகவும் கூறி இருந்தார். அதேபோல் தந்தை ராமதாஸ் உடனான மோதல் குறித்து அன்புமணி ராமதாஸ் வெகு நாட்களாக அமைதி காத்து வந்தார். இந்த நிலையில் தர்மபுரில் நடைபெற்ற வன்னியர் சங்க நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ் பேசும் போது, கடந்த ஒரு மாதமாக தூங்கவில்லை என்று புலம்பி இருக்கிறார்.
அன்புமணி குமுறல்
அதில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ஒரு மாதமாக இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. என் மனதில் ஏராளமான கேள்விகள் எழுகிறது. என்ன தப்பு செய்தேன், நான் ஏன் மாற்றப்பட்டேன், என் கனவு, என் லட்சியம், எல்லாம் அவர் என்ன நினைத்தோரோ, அதனைதான் நிறைவேற்றினேன். இனி வரும் காலங்களில் ஒரு மகனாக என்ன நினைக்கிறாரோ, அதனை நிறைவேற்றுவேன்.
பெரியசாமி, சின்னசாமி
எங்கள் குடும்ப பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். அதில் வேறு யாரும் தலையிட தேவையில்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து இதே நிகழ்ச்சியில் வன்னியர் சங்க நிர்வாகி ஒருவர் பேசுகையில், நமக்கெல்லாம் வழிபட கூடியவர்களாக பெரியசாமி, சின்னசாமியாக இருந்து, ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் வழிநடத்த வேண்டும் என்று கூறினார்.
மோதல் முடிவு?
அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், ஒரே சாமிதான்.. அது அய்யா தான் என்று ராமதாஸை குறிப்பிட்டார். இதனால் அங்கிருந்தவர்கள் உற்சாகம் அடைந்தனர். இதன் மூலமாக தந்தை ராமதாஸ் உடனான மோதல் போக்கிற்கு அன்புமணி ராமதாஸ் முற்றுப்புள்ளி வைக்க முயற்சித்து வருவதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications