தருமபுரி மாவட்ட மக்களின் மனங்களை குளிர வைத்த முதல்வர் ஸ்டாலின்.. வெளியிட்ட 7 முக்கிய அறிவிப்புகள்!
தருமபுரி: தருமபுரி மாவட்டத்திற்கு 7 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு தருமபுரி மாவட்ட மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
கிராமப்புறப் பகுதிகளில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழகத்தில் பொதுமக்கள் தினமும் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேருவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி 'மக்களுடன் முதல்வர்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

மக்களுடன் முதல்வர் திட்டம் முதல்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் மொத்தம் 8.74 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திட்டத்தை தொடங்கி வைத்து மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த திட்டத்தின் மூலம் அரசின் பல்வேறு சேவைகளையும் ஒரே குடையின் கீழ் மிக எளிதாகப் பெற முடியும் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ரூ.445 கோடி மதிப்பிலான பல்வேறு துறை சார்ந்த திட்டங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.56 கோடி மதிப்பில் 2,637 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு 7 அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை பின்வருமாறு:
▪️ அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
▪️ ரூபாய் 51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
▪️ வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ரூபாய் 31 கோடியில் மேம்படுத்தப்படும்.
▪️ பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ரூபாய் 50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.
▪️ அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் சாமை, ராகி ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுசெயலாக்க மையம் அமைக்கப்படும்.
▪️ தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்கம் அமைக்கப்படும்.
▪️ பாளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.












Click it and Unblock the Notifications