தர்மபுரியின் கனவு நிறைவேறுது.. 3000 பேருக்கு வேலை.. 2000 கோடியில் வரும் தொழிற்சாலை
தர்மபுரி: தமிழ்நாட்டின் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக இருக்கும் தர்மபுரி மாவட்டதில் தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருக்கிறது. இந்த சூழலில் தர்மபுரி மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை அமைக்க டபிள்யூ.இ.ஜி. நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது என்றும் இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மழைமறைவு பிரதேசங்களை போல், தொழில் மறைவு பிரதேசங்களும் உள்ளன. அந்த வரிசையில் உள்ள ஒரு மாவட்டம் தான் தர்மபுரி மாவட்டம். பக்கத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் பெங்களூரூ சென்னை வழித்தடத்தில் பெங்களூருக்குபக்கத்தில் இருப்பதால் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

ஆனால் தர்மபுரி மாவட்டத்தில் அப்படி இல்லை.. சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தான் வேலைக்கு செல்லும் நிலை இருக்கிறது. மாம்பழ உற்பத்தி இங்கு மிக அதிகம். விவசாயத்தான் பெரும்பாலும் உள்ளது. முறையான தொழிற்கட்டமைப்புகள் இல்லை. இப்போதுதான் தர்மபுரியில் சிப்காட் கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகள் மெல்ல மெல்ல வரத்தொடங்கி உள்ளன. புதிதாக ஒரு தொழிற்சாலை தர்மபுரி மாவட்டத்திற்கு வருகிறது.
தர்மபுரியில் தொழிற்சாலை
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறுகையில், "பிரேசில் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டபிள்யூ.இ.ஜி. நிறுவனம் மின்சார சாதனங்கள் மற்றும் தொழிற்சாலை தானியங்கி தொழில்நுட்பங்களை தயாரித்து வருகிறது. 135-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்த நிறுவனம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழகத்தின் ஓசூரில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. ஓசூர் சிப்காட் தொழிற்பேட்டை விரிவாக்கத்துக்காக கடந்த 2022-ம் ஆண்டு ரூ.650 கோடி முதலீடு செய்து, 650 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நிறுவனம் மேற்கொண்டது.
தர்மபுரி சிப்காட்
இந்த நிலையில், தர்மபுரி சிப்காட் பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.2,000 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை அமைக்க டபிள்யூ.இ.ஜி. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் மின்சார வாகனங்களுக்கான மோட்டார்கள், தொழிற்சாலைகளில் மோட்டார்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனங்கள் மற்றும் மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிக்கப்பட உள்ளன.
3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த திட்டம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். குறிப்பாக உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், திறன் மேம்பாட்டுக்கும் வாய்ப்பு ஏற்படும். மேலும், தொழிற்சாலைக்கு தேவையான உதிரிபாகங்களை தயாரிக்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாகவும் இந்த திட்டம் வழிவகுக்கும். இதன் மூலம் தர்மபுரியில் தொழில் வளர்ச்சி அதிகரித்து, அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
தமிழக அரசின் தொழில் துறை அதிகாரிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட நிலையில், தமிழகத்தை தனது உற்பத்தி விரிவாக்கத்துக்கான முக்கிய இடமாக டபிள்யூ.இ.ஜி. நிறுவனம் தேர்வு செய்துள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
