தருமபுரி எம்பி செந்தில் எங்கே? நீங்க வந்தா தான் சரியா இருக்கும்! ஏங்கும் சூர்யா ரசிகர்கள்!
தருமபுரி: தமிழக அரசியல் களத்தில் பாமகவிற்கு எதிராக ஒற்றை ஆளாக களமாடுபவர் தருமபுரி திமுக எம்பி செந்தில். அந்த தொகுதியில் பாமக இளைஞர் அணிச் செயலாளர் அன்புமணிக்கு எதிராக போட்டியிட்டு வென்றதால் இவர் மீது திமுக தலைமைக்கு எப்போதுமே பெரிய மரியாதை உண்டு..

பாமக
திமுக எதிர்கட்சியாக இருந்த போது பாமக தொடர்பான விவகாரங்களை கவனித்துக் கொண்டவர் தருமபுரி எம்பி செந்தில் தான். அதாவது மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை விமர்சித்து அன்புமணியோ, ராமதாசோ அறிக்கை வெளியிட்டாலோ அல்லது பேட்டி அளித்தாலோ அதற்கு உடனடி பதிலடி கொடுப்பார் தருமபுரி செந்தில். இதை தவிர பாமக யாருடனாவது மோதினால் உடனடியாக எதிர் தரப்புடன் இணைந்து பாமகவை பஞ்சர் ஆக்குவதும் தருமபுரி எம்பி செந்திலின் ஸ்டைல். இதே போல் விசிகவிற்கு ஆதரவாகவும், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு ஆதரவாகவும் பல முறை களமாடியுள்ளார் செந்தில்.

வைரல் டிரெண்ட்
அத்தோடு தனிப்பட்ட முறையில் அன்புமணிக்கு இவர் பதிலடி கொடுப்பது வேறு ரகமாக இருக்கும். ஆனால் தற்போது பாமகவிற்கு சூர்யாவிற்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் தருமபுரி எம்பி செந்தில் அமைதியாக இருக்கிறார். ஜெய்பீம் தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்காமல் அவர் அமைதி காப்பது அவரது கட்சியினரையே சந்தேகம் அடைய வைத்துள்ளது. பொதுவாக ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எந்த விஷயம் டிரென்ட் ஆனாலும் அதற்கு உடனடியாக தன்னுடைய கருத்தை தெரிவிப்பது செந்திலின் வாடிக்கை.

பாமக - சூர்யா மோதல்
அதிலும் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது பாமக - சூர்யா மோதல் தான். திராவிட இயக்கங்கள், இடதுசாரி அமைப்புகள், பெரியாரிய ஆர்வளர்கள் என அனைவரும் சூர்யாவிற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். ஆனால் தருமபுரி செந்தில் மட்டும் தற்போது வரை அமைதியாக உள்ளார். மேலும் திமுக தரப்பில் இருந்தும் சூர்யாவிற்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனிடையே சமூக வலைதளங்களில் பாமக மற்றும் வன்னியர் சமுதாய அமைப்புகள் பகிரங்கமாக சூர்யாவை மிரட்ட ஆரம்பித்துள்ளன.

ஒரு லட்சம் ரூபாய் பரிசு
சூர்யாவை உதைத்தால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு என பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி அறிவித்த நிலையில் தங்கள் ஊருக்கு வந்தால் சூர்யாவை உதைப்போம் என பாமக தொண்டர்கள் வெளிப்படையாக தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். வட மாவட்டங்களில் சூர்யா ரசிகர் மன்றங்கள் கலைக்கப்படுகின்றன. இந்த சூழலில் தருமபுரி எம்பி செந்தில் சூர்யாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர்.

பாமக மாவட்டச் செயலாளர்
சூர்யாவை மிரட்டிய பாமக மாவட்டச் செயலாளர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் கைது செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் தருமபுரி செந்தில் தலையிட்டு பாமகவிற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்றும் சூர்யா ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications