தருமபுரி மாவட்டத்தில் திமுகதான் கிங்.. பாஜக, பாமக, நாம் தமிழர் நிலை இதுதான்! டேட்டாவுடன் திமுக எம்பி
தருமபுரி: நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தருமபுரி நகராட்சியில் பெற்ற வாக்குகள் குறித்து திமுக எம்பி செந்தில் குமார் வெளியிட்டுள்ளார்.
கடந்த 19 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி வெளியானது.

திமுக கூட்டணி
இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சி வென்றது. தனித்து போட்டியிட்ட அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை சோபிக்கவில்லை. கோவை தங்களது கோட்டை என அதிமுக சொல்லி வந்த நிலையில் அந்த கோட்டையை திமுக கூட்டணி தன் வசமாக்கியது.

21 மாநகராட்சிகள்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணியே வென்றது. இந்த நிலையில் பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் வாக்கு சதவீதம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து திமுக எம்பி செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். கழுகு பார்வை என்ற தலைப்பில் அவர் கூறுகையில் தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் 30 இடங்களில் பாமக போட்டியிட்டது.

பாமக வாக்கு சதவீதம்
அதில் ஒரு இடத்தில் கூட பாமக வெல்லவில்லை. போட்டியிட்ட 30 இடங்களில் 23 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. அந்த நகராட்சியில் மொத்தம் பதிவான 39755 வாக்குகளில் 3821 வாக்குகளை பாமக பெற்றுள்ளது. இதன் வாக்கு சதவீதம் 9.61 ஆகும் என கூறி தங்கள் கோட்டை என்று சொல்லும் தருமபுரியில் பாமகவின் நிலை என குறிப்பையும் கொடுத்துள்ளார்.

பாஜக வாக்கு சதவீதம்
அது போல் தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் 14 இடங்களில் பாஜக போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. போட்டியிட்ட 14 இடங்களிலும் டெபாசிட் இழந்துள்ளது. அந்த நகராட்சியில் மொத்தம் பதிவான 39755 வாக்குகளில் 352 வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இதன் வாக்கு சதவீதம் 0.89 ஆகும். உள்ளாட்சி தேர்தலுக்கு பின்பு தங்களை 3ஆவது பெரிய கட்சி என பிரகடனம் செய்த பாஜகவின் உண்மையான நிலை இதுதான்.

நாம் தமிழர் கட்சி வாக்கு சதவீதம்
தருமபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகளில் 3 இடங்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அதில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. போட்டியிட்ட 3 இடங்களிலுமே டெபாசிட் இழந்துள்ளது. அந்த நகராட்சியில் மொத்தம் பதிவான 39755 வாக்குகளில் 32 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பின்பு தங்களை திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என கூறியது நாம் தமிழர் கட்சி என்றார். இவ்வாறு 3 கட்சிகளும் சொல்லியது என்ன, அதன் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக எம்பி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications