தர்மபுரி பாமக வேட்பாளர் மாற்றம் ஏன்? அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா வெல்வாரா? பின்னணி
தர்மபுரி: தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தர்மபுரி லோக்சபா தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி வேட்பாளராக அரசாங்கம் என்பவர் அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய வேட்பாளராக அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் திடீர் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வரும் 19 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக கூட்டணியில் பாமக எனும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது. பாஜக கூட்டணியில் இந்த கட்சிக்கு மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் காஞ்சிபுரம் தவிர 9 தொகுதிகளுக்கு இன்று காலையில் பாமக வேட்பாளர்களை அறிவித்தது.

தர்மபுரி லோக்சபா தொகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அல்லது அவரது மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று காலையில் வெளியான பட்டியலில் இருவரின் பெயர்களும் இடம்பெறவில்லை. மாறாக தர்மபுரி தொகுதியில் அரசாங்கம் என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இந்நிலையில் தான் இன்று மாலையில் திடீரென்று தர்மபுரி வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதாவது இன்று காலையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கத்துக்கு பதில் தர்மபுரி லோக்சபா தொகுதியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா அன்புமணி வேட்பாளராக போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் பாமகவின் திடீர் வேட்பாளர் மாற்றத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது தர்மபுரி என்பது பாமகவுக்கு செல்வாக்கான தொகுதியாக உள்ளது. இந்த தொகுதியில் மொத்தம் 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மேட்டூர், பென்னாகரம், தர்மபுரி சட்டசபை தொகுதிகளில் பாமக எம்எல்ஏக்கள் உள்ளனர். பாலக்கோடு, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதியில் தொகுதியில் அதிமுகவை சேர்ந்தவர்கள் எம்எல்ஏக்களாக உள்ளனர்.
மேலும் இந்த தொகுதியில் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு கடந்த 2019 தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் குமாரிடம், அன்புமணி ராமதாஸ் தோற்றார். செந்தில் குமார் 574,988 ஓட்டுகள் பெற்ற நிலையில் அன்புமணி ராமதாஸ் 5,04,235 ஓட்டுகள் பெற்று 70,753 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
மேலும் இந்த முறை அன்புமணி ராமதாஸ் அல்லது சவுமியா அன்புமணி ஆகியோரில் ஒருவர் தர்மபுரியில் போட்டியிடுவார் என பாமகவினர் நினைத்தனர். ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை. அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோரை எதிர்பார்த்த பாமகவினர் ஏமாற்றமடைந்தனர்.
இதற்கிடையே தான் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் அல்லது சவுமியா அன்புமணி ஆகியோரில் ஒருவர் கட்டாயம் போட்டியிட வேண்டும். தர்மபுரியில் களநிலவரம் என்பது பாமகவுக்கு சாதகமாக இருக்கிறது. இத்தகைய சூழலில் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோரில் ஒருவர் போட்டியிடும் பட்சத்தில் கட்டாயம் வெற்றி பெற முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சியின் தலைமை குடும்பத்தில் இருந்து ஒருவர் போட்டியிடும்போது அது நிச்சயம் பிற தொகுதிகளிலும் பாமகவுக்கு பாசிட்டிவ் சைனை தரும் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த முறை குறைந்த ஓட்டுகளில் தான் வெற்றி வாய்ப்பை அன்புமணி ராமதாஸ் இழந்தார்.
கடந்த முறை இந்த தொகுதியில் திமுக- பாமக இடையே இருமுனை போட்டி தான் நடந்தது. தற்போது திமுக, பாமக, அதிமுக என மும்முனை போட்டி நடைபெற உள்ளது. இதனால் ஓட்டுகள் பிரியும்போது அது நிச்சயம் பாமகவுக்கு சதாகமாக அமையும் என கூறப்படுகிறது. இதையடுத்து தான் தர்மபுரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அரசாங்கம் என்பவர் மாற்றப்பட்டு சவுமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தொகுதியில் வரும் லோக்சபா தேர்தலில் சிட்டிங் எம்பி செந்தில் குமாருக்கு திமுக வாய்ப்பு வழங்கவில்லை. மாறாக மணி என்பவரை திமுக வேட்பாளராக அறிவித்துள்ளது. அதேபோல் அதிமுக சார்பில் அசோகன் என்பவரும், சீமானின் நாம் தமிழர் சார்பில் அபிநயா பொன்னிவளவனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications