ஜஸ்ட் மிஸ்ஸு.. ரோட்டில் கொட்டிய 26,000 லிட்டர் ஆசிட்! புகைமூட்டமான சாலை.. ஷாக்கான வாகன ஓட்டிகள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தூத்துக்குடியில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஆசிட் அனைத்தும் சாலையில் கொட்டியது. நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆசிட் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி ஆசிட் புகையின் வீரியத்தை குறைத்தனர்.
தூத்துக்குடியில் இருந்து கரூர் நோக்கி சுமார் 25,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றி வந்த டேங்கர் லாரி, திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.

மதியழகன் என்பவர் ஓட்டி வந்த இந்த ஆசிட் லாரி, அதிகாலை நேரம் என்பதால் ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்து தடம் மாறியதாகக் கூறப்படுகிறது. அப்போது, தூத்துக்குடியில் இருந்து நாமக்கல் நோக்கி பின்னால் சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த மற்றொரு லாரி, ஆசிட் லாரியின் பின்புறம் மோதியது.
இந்த விபத்தில் ஆசிட் லாரியின் பின்புறமிருந்த வால்வு முழுமையாக உடைந்து சேதமடைந்தது.
இதன் காரணமாக லாரியில் இருந்த 25,000 லிட்டர் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் முழுமையாகச் சாலையில் கசிந்தது. இதனால் நெடுஞ்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் ஆசிட் புகைமூட்டம் சூழ்ந்தது.
இந்த ஆசிட் புகையைச் சுவாசிப்பதன் மூலம் தொண்டை கரகரப்பு, கண் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் போக்குவரத்தை உடனடியாக மாற்றி அமைத்தனர். தொடர்ந்து அங்கு வந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர், சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக ஆசிட் மீது அதிகளவு தண்ணீரைத் தொடர்ந்து பீய்ச்சியடித்து அதன் வீரியத்தைக் குறைத்து , புகை மற்றும் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விபத்து நடந்த பகுதியில் மற்ற வாகனங்கள் அனுமதிக்காமல் மாற்றுப் பாதையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில் சாலையில் வாகன போக்குவரத்து இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. ஒருவேளை பொதுமக்கள் மீது ஆசிட் பட்டிருந்தால் பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
