இந்த விளம்பரம் உனக்கு தேவையா கோபி? மான்கறியுடன் கெத்தாக ரீல்ஸ்..கொத்தாக தூக்கிய கொடைக்கானல் ஆபிசர்ஸ்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், வாழைகிரி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் வேலியில் சிக்கிய மானை கொன்று சமைத்து சாப்பிட்டதோடு, அதனை ரீல்ஸ் ஆக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளனர் கொடைக்கானல் வனத்துறையினர். கெத்தாக ரீல்ஸ் போட்டவர்கள் கொத்தாக சிக்கியது எப்படி? என பார்க்கலாம்..
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசிப்பதோடு அங்கேயே தங்கி இருந்து விடுமுறையை கழித்து வருகின்றனர்.
கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன. குறிப்பாக யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்டவை நூற்றுக்கணக்கில் வசிக்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக மலைவாழ் விவசாயிகள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வாழைகிரி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் வேலியில் சிக்கிய மானை கொன்று சமைத்து சாப்பிட்டதோடு, அதனை ரீல்ஸ் ஆக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளனர் கொடைக்கானல் வனத்துறையினர். கொடைக்கானல் வாழைகிரி அருகே உள்ள தனியார் தோட்டத்தில் நேற்று முன் தினம் சுமார் இரண்டு வயதுள்ள கடமான் ஒன்று அங்கிருந்த வேலியில்
சிக்கி வெளியே செல்லமுடியாமல் தவித்துள்ளது.

இதனை அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார், கன்னிவாடியைச் சேர்ந்த ராஜேஸ் கண்ணன், காமக்காபட்டியைச் சேர்ந்த அஜித், பண்ணைக்காடு பகுதியைச் சேர்ந்த சிவராமன், சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், மன்னார்குடியைச் சேர்ந்த பிரவீன் ஆகிய 6 பேரும் பார்த்துள்ளனர். ஆனால் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்காமல் ஆறு பேரும் தடுப்பு வேலியில் சிக்கி இருந்த மானை மீட்டு அதனை கொன்று ரகசியமாக சமையல் செய்து சாப்பிட்டு உள்ளனர்.
மேலும் 'உற்சாக' மிகுதியில் அவர்கள் மானை கொல்வது முதல் தோலை உரிப்பது, கறியாக வெட்டுவது, சமைத்து சாப்பிடுவது என அனைத்தையும் வீடியோவாக எடுத்ததோடு பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ரிலீஸ் ஆகவும் வெளியிட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்கள் சிலர் இது தொடர்பாக கொடைக்கானல் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து பிரவீன் கும்பல் தங்கி இருந்த பகுதிக்குச் சென்ற வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வந்த தகவலை அறிந்த ஆறு பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றது. இதை அடுத்து தீவிர தேர்தல் வேட்டை மேற்கொண்ட வனத்துறையினர் அஜித், சிவராமன், ராமகிருஷ்ணன், பிரவீன், ராஜேஷ் கண்ணன், செல்வகுமார் ஆகிய ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மானின் கறியை சமைத்து சாப்பிட்டதோடு மானின் தலை, கால், தோல், குடல் உள்ளிட்டவற்றை குழி தோண்டி புதைத்ததை ஒப்புக்கொண்டனர்.
தொடர்ந்து அவற்றை மீட்ட வனத்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய ட்ராக்டர், இருசக்கர வாகனம், கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ததோடு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது மட்டுமல்லாமல் கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருவதோடு வனவிலங்கு வேட்டையும் அதிகரித்திருப்பதாக கூறும் அப்பகுதி மக்கள், இது தொடர்பாக வனத்துறை நிறம் காவல்துறையினரும் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications